தம்புள்ளை நகரில் முஸ்லிம் வர்த்தக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அங்கு ஏற்பட்ட பதற்ற நிலை நேற்று முதல் தணிந்துள்ளதுடன் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களும் மீளத் திறக்கப்பட்டுள்ளன.
சில தினங்களுக்கு முன்னர் முஸ்லிம்களுக்குச் சொந்தமான உணவகம் ஒன்றிலேயே இந்த விரும்பத்தகாத சம்பவம் இடம்பெற்றிருந்தது. இதன் காரணமாக பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் குறித்த உணவகத்தை நடத்துவோருக்குமிடையே கை கலப்பு இடம்பெற்றதுடன் இருவர் காயமடைந்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட இருவரும் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஒரு சில வர்த்தகர்கள் தமது வாடிக்கையாளர்களுடன் நடந்து கொள்ளும் முறையிலுள்ள குறைபாடுகள் எவ்வாறு ஒரு சமூகத்தையே பாதிக்கும் என்பதற்கு இந்த சம்பவம் நல்லதொரு உதாரணமாகும்.
ஒரு வர்த்தக நிலையத்தைச் சேர்ந்தவரால் தோற்றுவிக்கப்பட்ட முரண்பாடு காரணமாக தம்புள்ளை நகரில் வர்த்தகத்தில் ஈடுபடும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான சுமார் 100 வர்த்தக நிலையங்களை முன்று தினங்களுக்கும் மேலாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டமை துரதிஷ்டவசமானதாகும்.
அத்துடன் இனவாத சக்திகள் இதனை வாய்ப்பாக பயன்படுத்தி தம்புள்ளை நகரில் முஸ்லிம்களின் வியாபார நிலையங்களை நிரந்தரமாக அகற்றுவதற்கான காய்நகர்த்தல்களையும் முன்னெடுத்தனர். எனினும் அதே நகரில் வாழ்கின்ற இன நல்லுறவை விரும்புகின்ற பெரும்பான்மை மக்களின் ஆதரவால் இனவாதிகளின் நோக்கங்கள் முறியடிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சிக்குரியதாகும்.
தம்புள்ளைதான் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேலெழுந்த இனவாதத்தின் மையப் புள்ளியாகும். அங்கு இன்னமும் இனவாதம் மையம் கொண்டுள்ளது.
எவ்வாறேனும் தம்புள்ளை பள்ளிவாசலை அகற்றிவிட வேண்டும் என அவர்கள் கங்கணம் கட்டிச் செயற்படுகின்றனர். இதற்கான வழிகளை திறந்து கொடுக்கும் வகையில் எமது செயற்பாடுகள் அமைந்துவிடக் கூடாது.
-பைறுாஸ்