Top News

இஸ்லாத்தை ஆழ்ந்தறிவதற்கான அவசியம்


இன்று உலகின் பேசுபொருளாக ‘மனிதன்’ மாறியிருக்கிறான். ஒரு புறம், டார்வினின் பரிணாமவாதக் கண்ணோட்டத்தில் மனிதனின் அடுத்த நிலையாகக் கருதப்படும் ‘அதி மனிதன்’ பற்றிய இயற்கை விஞ்ஞான ஆய்வுகள் நடந்து வருகின்றன. மறுபுறம், மனிதனின் சிந்தனை, மனம், நடத்தை ஆகியன குறித்த சமூக விஞ்ஞான ஆய்வுகள் முன்பைவிடப் பரவலாக இடம்பெறுவதைப் பார்க்கமுடிகிறது. முன்னேறிய சிந்தனை, மனோநிலை, நடத்தை ஆகியவற்றைக் கொண்ட அதி மனிதன் (Super Man) எனும் எண்ணக்கரு, ஹாலிவுட்-பாலிவுட் சினிமாக்களில் காண்பிக்கப்படுவதைப் போல, நம் எல்லோரது மனங்களிலும் கருத்துருப்படுத்தப்பட்டுள்ளது. இது தவறான கருத்துருவாக்கம் என்றபோதிலும், குறித்த எண்ணக்கருவை நம்மால் மறுத்துவிட முடியாது.
மனிதன் தனது சிந்தனை, மனோநிலை, நடத்தை ஆகியவற்றை ஒழுங்கமைப்பதினூடாக இறைவனிடத்தில் அவன் பெறவேண்டிய ஆத்மநிலை குறித்து இஸ்லாம் அதிகளவில் பேசியுள்ளது. மனிதன் என்பவன் புத்தி, மனம், உடல் முதலிய மூன்று வகைகளில் செயற்படுபவன். இந்த மூவகைச் செயற்பாட்டையும் நெறிப்படுத்துவதற்கான மூவகைப் போதனைகளை இஸ்லாம் வழங்கியுள்ளது. அவை இறையியல் (அகாயித்), அறவியல் (அஃக்லாக்), சட்டவியல் (அஹ்காம்) என்பனவாகும். இவற்றோடு போதுமாக்கிக் கொள்ளாமல், இவற்றின் துணையோடு இறைவனின் நெருக்கத்தைப் பெறக்கூடிய, மனிதனின் சம்பூரணநிலையை நோக்கிய ஒரு ஆழமான மெய்ஞ்ஞான வழிகாட்டலில் பயணிக்க வேண்டுமென்று இஸ்லாம் அவனைத் தூண்டுகிறது.
ஆக, மனிதன் பற்றிய சமகால ஆய்வுகளைக் கருத்தில் எடுத்துக்கொள்ளும் இஸ்லாமும் மேற்குலகும், ‘மனிதனின் பரிணாம முன்னேற்றம்’ எனும் ஒரே கருப்பொருளை வெவ்வேறு அணுகுமுறைகளில் விளக்க முற்படுவதை நாம் புரிந்துகொள்ளலாம்.
லௌகீக வாதங்களுக்கு எதிர்நிகரான வலுவான கருத்தியல்களும், ஆழமான அறிவுவெளிகளும் இஸ்லாம் எனும் ஞானத்திரட்சியில் அமையப் பெற்றிருப்பினும், அவற்றை ஆழ்ந்தறியாத நிலையில் ‘இஸ்லாமியம்’ பேசுவது உள்ளகத்தில் மட்டுமன்றி, சர்வதேச அளவிலும் நெருக்கடிகளைத் தோற்றுவித்துள்ளது. மனிதனின் சம்பூரணநிலைக்கான போதனைகளைக் கொண்ட பரிபூரண மார்க்கமாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாலும், சம்பூரண மனிதனையும் சமூகத்தையும் நம்மால் ஏன் உருவாக்க முடியவில்லை என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
இஸ்லாமியக் கருத்தியல் மற்றும் அறிவுத்துறைகளிலிருந்து ஒதுங்கி, எவ்வித உயிரோட்டமும் இல்லாமல் தேங்கிக்கிடக்கும் முஸ்லிம் சமூகத்திற்கு புத்துயிரூட்ட வேண்டியது இஸ்லாமிய அறிஞர்கள் மீதும், பிரசங்கிகள் மீதும் இருக்கின்ற கடமையாகும். இஸ்லாம் பற்றி நம்முடைய சமூகம் கொண்டுள்ள புரிதலை மேம்படுத்துவதன் மூலம் அதனைச் சாத்தியப்படுத்தலாம். கருத்தாடல்களும் விவாதங்களும் ஆன்மீக இலக்கை நோக்கிய பயணத்தின் படகுகளே அன்றி, பயணத்திற்கான விதிமுறைகள் அல்ல.
இன்றைய இஸ்லாமிய அழைப்பியல் களத்தில் கடலலை போல மக்கள் திரள்வது உண்மைதான். ஆனால் ஆன்மீகப் பயணத்தில் தலைப்படுதல், சம்பூரணமாகுதல் எனும் இலட்சியங்கள் பற்றிய தத்துவ விசாரமானது, களத்தின் ஆக்கபூர்வதன்மை பற்றிய விமர்சனத்தில் ஈடுபட நம்மைத் தூண்டுகிறது.
இஸ்லாமியக் கல்லூரிகளிலும் ஆன்மீக அறிவகங்களிலும் பின்பற்றப்படும் பாரம்பரிய கற்றல்-கற்பித்தல் முறைகளில் பரிணமிக்க வேண்டிய அம்சங்கள் பற்றியும்; அதேபோன்று, இஸ்லாமியப் பிரசங்கிகள் களத்தில் பிரயோகிக்க வேண்டிய உத்திகள் பற்றியும் நாம் கவனம்செலுத்த வேண்டிய தேவையுள்ளது.

தூய்மைவாதத்தின் மறுவாசிப்பும், புலமைவாதத்தின் மீளுயிர்ப்பும்

இன்றைய தொழிற்கல்வி முறையானது, காலனித்துவத்தின் காலம் தொட்டு இன்றுவரை மனிதனின் துறைசார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கான திறமையாளர்களை உருவாக்கும் நோக்கில் மட்டும் பேணப்பட்டு வருவதைக் காணலாம். இன்று தனியொரு துறையில் ஒருவர் எந்தளவு தன்னை ஈடுபடுத்தி, அதில் புலமையைப் பெறுகிறாரோ, அவர் அத்துறையில் அறிஞராக, கலைஞராக, அல்லது நிபுணராகப் பார்க்கப்படுகிறார்.
ஆனால் ஒருவர் அறிஞராகவோ சிந்தனையாளராகவோ இலங்குவதற்கு, தனியொரு துறையிலன்றி, பல்வேறு துறைகளில் புலமையைப் பெற்றிருத்தல் அவசியம் என்ற புலமைவாதக் கருத்தியல் (Scholasticism), மத்திய காலப்பகுதியில் சற்று தலைதூக்கியிருந்ததை பார்க்கமுடியும். பாரதூரமான இந்தக் கருத்தியலுக்கு மறுவாழ்வு கொடுத்த பெருமை, இஸ்லாமியப் புலமைவாதிகளையே சாரும்.
அபூ அலீ ஹுஸைன் இப்னு அப்தில்லாஹ் இப்னு ஸீனா (கி.பி 980– 1037), அபூ ரைஹான் முஹம்மத் இப்னு அஹ்மத் அல்-பிரூனி (கி.பி 973–1048), அபூ நஸ்ர் முஹம்மத் இப்னு முஹம்மத் அல்-ஃபராபி (கி.பி 874–950) போன்ற இஸ்லாமிய அறிஞர்களும் சிந்தனையாளர்களும் பல்வேறு துறைகளில் பாண்டித்தியம் பெற்றிருந்தமை பிரசித்தமானது. இஸ்லாமிய உலகைப் பொறுத்தவரை அபூ யூசுஃப் யஃகூப் இப்னு இஸ்ஹாக் அல்-கிந்தியின் (கி.பி 800–879) மெய்யியல் துறை முயற்சிகளுக்கு முன்னரே, நபித்தோழர்களில் சிலர் பல்துறைகளில் தத்துவார்த்த, அறிவார்ந்த உரையாடல்களை நிகழ்த்தியதனூடாக தம் புலமையை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சமய தூய்மைவாதத்திற்கும், அதன் எதிர்நிலையில் காணப்பட்ட புலமைவாதத்திற்கும் இடையே எழுந்த விரிசல்கள் 13ம் நூற்றாண்டில் உச்சநிலையை அடைந்து, புலமைவாதத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தன. இஸ்லாமிய அறிவு பற்றிய கருத்தாக்கங்களையும் துறைப் பிரிவுகளையும் அறியாத தூய்மைவாதிகள், தம்முடைய தீவிரம் – எளிமை என்ற இரண்டம்ச அணுகுமுறையைக் கொண்டு இஸ்லாமிய சிந்தனையில் வெறுமையைப் புகுத்தினர். இந்த வெறுமை, சர்வதேசளவில் முஸ்லிம் சமூகத்தின் சரிவுக்கு வித்திட்டது. மட்டுமின்றி, செழுமையான இஸ்லாமிய நாகரித்தை விளிம்புநிலைக்குத் தள்ளியது. எனவே நாம் அந்த தூய்மைவாதத்தை மறுவாசிப்பு செய்ய வேண்டியுள்ளது. ஏனெனில், அல்-குர்ஆனை ஒருவிதத்தில் ஓர் பல்துறை நூல் என்று சொல்ல முடியும். அதே போன்றுதான், இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும். எனவே, இஸ்லாம் என்பதும் ஓர் பல்துறை அறிவுத் திரட்சியாகவே இருக்கிறது.
எனவே இஸ்லாத்தை அறிந்துகொள்வதற்கு தனியொரு துறையில் மட்டும் புலமைபெற்றிருத்தல் போதாது. இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் ஒரு விசயத்தை ஆராயும்போது எழும் கருத்து மோதல்களுக்கு பிரதான காரணம் இதுவேயாகும். இதனால் பல்துறை நிபுணத்துவம் எனும் இஸ்லாமியப் புலமைவாதத்தை மீளுயிர்ப்பிக்க வேண்டியது அவசியமாகிறது.

இஸ்லாமிய அறிவு, கலை குறித்த கருத்தாக்கங்களும் வகைப்பாடுகளும்

இஸ்லாமிய அறிவு, கலை என்றால் என்னவென்பதைச் சரியாக வரையறுத்துக் கொள்ளும்போது, அது பல்துறை ஈடுபாட்டிற்கு வழிவகுக்கும். இஸ்லாமிய அறிவுத் துறைகளை வகைப்படுத்துவதில் அகாயித், அஃக்லாக், அஹ்காம் என்ற பாரம்பரிய பகுப்புமுறையைக் காட்டிலும் மேம்பட்ட அணுகுமுறைகளை சமகால அறிஞர்கள் கையாண்டுள்ளனர். இந்த வகையில் பேராசிரியர் ஷஹீத் முர்தஸா முதஹ்ஹரி (கி.பி 1919-1979), இஸ்லாமிய அறித்துறைகளை நான்கு வகைகளாகப் பகுக்கிறார்:
(அ) எந்தவொரு அறிவின் கருப்பொருளும் உள்ளம்சங்களும் இஸ்லாத்தின் அடிப்படை (اصلی) மற்றும் உபரி (فرعی) அம்சங்களை உள்ளடக்கியிருக்கின்றனவோ; அல்லது, குறித்த விடயங்கள் எந்த அறிவின் மூலம் நிரூபணமாகின்றனவோ, அந்த அறிவு இஸ்லாமிய அறிவாகும். உதாரணமாக குர்ஆனியக் கற்கைகள், குர்ஆன் வியாக்கியானக் கலை (தஃப்சீர்), ஹதீஸ் கலை, பாரம்பரிய உரைசார் இறையியல், சட்டவியல், உரைசார் அறவியல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
(ஆ) மேற்குறிப்பிட்ட அறிவுகளைப் புரிந்துகொள்வதற்கு முன்னோட்டமாக அமையும் எந்தவொரு அறிவும் இஸ்லாமிய அறிவாகும். உதாரணமாக அறிவுசார் இறையியல், அறிவுசார் அறவியல், மெய்யியல், அளவையியல், சட்டவியற் பொது விதியியல், அறபு இலக்கணம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
(இ) எந்தவொரு அறிவு, இஸ்லாமிய சமுதாயத்திற்குத் தேவையென உணரப்பட்டு முஸ்லிம்களின் மீது அவசியமான தனிக்கடமையாக (واجب عینی) அல்லது போதுமெனும் பொதுக்கடமையாக (واجب کفائی) அமைகிறதோ அது இஸ்லாமிய அறிவாகும். இவ்வகையில் மருத்துவம், அரசறிவியல், பொருளியல், மேலாண்மைக் கற்கைகள், உளவியல், தொழிநுட்பம், பௌதீக விஞ்ஞானம், மொழிக் கற்கைகள், சுயதொழிற் கற்கைகள் போன்றவற்றை உதாரணமாகக் கொள்ளலாம்.
(ஈ) எந்தவொரு அறிவு, இஸ்லாமிய சமூகத்தில் தோன்றியதோ அல்லது விருத்தியுற்றதோ அது இஸ்லாமிய அறிவாகும். இவற்றுள் நாட்டாரியல், தற்காப்புக்கலை, கோலாட்டம், வானியல், இரசவாதம் மற்றும் ஏனைய இஸ்லாமியக் கலைகள் போன்றவற்றை உள்ளடக்கலாம். இந்தியாவிலும், இலங்கையிலும் முஸ்லிம்களின் இவ்வகை அறிவு மற்றும் கலை குறித்து பல்வேறு நூல்கள் எழுதப்பட்டுள்ளன. இவற்றுள் பேராசியர்களான எம். எஸ். பெர்னாட்ஷா, பீ. முத்துக்குமரன் ஆகியோர் எழுதிய ‘இந்திய இஸ்லாமியக் கலை வரலாறு’ எனும் நூலையும், பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் அவர்களின் ‘இலங்கையில் முஸ்லிம் நுண்கலை’ எனும் நூலையும் குறிப்பிடலாம். இவ்வகை அறிவும் கலையும் முஸ்லிம்களின் தனித்துவத்தையும் பாரம்பரியத்தையும் பேணி, அவர்களுக்குப் பெருமை சேர்ப்பதோடு, அவர்களுடைய நாகரீகத்தின் அடையாளத்தையும் இருப்பையும் உறுதிசெய்கின்றன.
எனவே, இஸ்லாமிய அறிவின் கருத்தாக்கங்களும் வகைப்பாடுகளும் ஆழமானவை. மனிதனுக்குப் பயனளிக்கக்கூடிய எந்தவொரு அறிவும் இஸ்லாமிய வட்டத்திற்கு வெளியில் இல்லை. இந்த வகையில் இஸ்லாத்தைக் கற்றல் என்பது பல்துறைக் கல்வியாக அமைவதோடு, இப்படியான இஸ்லாத்தை எளிமையாகவும் மேலோட்டமாகவும் அணுகாமல், ஆழ்ந்தறிய வேண்டியது ஏன் என்பதும் தெளிவாகின்றது.

இஸ்லாத்தை ஆழ்ந்தறிவதே மாற்றத்திற்கான துவக்கம்

இஸ்லாம் என்பது இறைவன் எனும் அகண்ட சாரத்திலிருந்து பிரவாகிக்கும் அறிவுப் பிரளயமாகும். அதனைக் கற்றலானது அறிதல் (تعلّم), ஆழ்ந்தறிதல் (تفقّه) எனும் இரண்டு படிநிலைகளில் நிகழ்கிறது. இஸ்லாத்தை அறிவது எல்லோருக்கும் சாத்தியம். ஆனால் இஸ்லாத்தை ஆழ்ந்தறிவதென்பது வரையறுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே சாத்தியம். முஸ்லிம் அல்லாதோர் கூட, ஒப்பீட்டு சமயக் கற்கைகளில் இஸ்லாமிய அறிவைப் பெறுகிறார்கள். ஆனால், இஸ்லாத்தை புரிந்து ஏற்று நடத்தல், ஆன்மீகவெளியில் பயணப்படல் என்பன அவர்களுக்கு அசாத்தியமாகவே இருக்கின்றன. இதே நிலைமையை நம் மத்தியிலுள்ள இஸ்லாமியக் கல்லூரிகளிலும் ஆன்மீக அறிவகங்களிலும் நம்மால் காணமுடிகின்றது. இன்று இஸ்லாம் பேசுவோரில் அதிகமானோர் அதனை ஆழ்ந்தறிந்தவர்கள் கிடையாது என்பதுதான் உண்மை.
இஸ்லாத்தை ஆழ்ந்தறிவதானது, பல்துறைப் புலமையினால் மட்டுமே ஏற்படமுடியும். இன்றைய இஸ்லாமியக் கல்லூரிகளிலும் அறிவகங்களிலும் கூட, காலனித்துவக் காலத்தைச் சேர்ந்த தொழிற்கல்விமுறையைப் போன்று, சொற்பகுப்பியல் (صرف), சொற்றொடரியல் (نحو), மொழியாக்கக்கலை (فنّ الترجمة) போன்ற கற்கைகளால் அறபு மொழி எனும் தனியொரு துறையில் மட்டும் புலமையாளரை உருவாக்குவதற்கான திட்டத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதனால் ஏனைய இஸ்லாமிய அறிவுத்துறைகளில் வெற்றிடம் தோன்றுவதை உணரமுடிகிறது.
இதேநிலை நீடிக்கும் பட்சத்தில், இந்தக் கல்லூரிகள் மற்றும் அறிவகங்களைக் கொண்டு பாரிய மாற்றங்களும் அடைவுகளும் சாதிக்கப்படுமென எதிர்பார்ப்பது அறிவீனம். பல்துறைப் புலமைக்கான வாயில்கள் எப்போது திறக்கப்படுகின்றனவோ, அப்போதுதான் இஸ்லாத்தை ஆழ்ந்தறிவது சாத்தியமாகும். அதுவே மாற்றத்திற்கான துவக்கமாகவும் அமையும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இஸ்லாமிய மானுடவியல்களும், சமூகத்தின் புரிதலை திருத்தியமைத்தலும்

மானுடவியல்கள் (Humanities) என்ற பதம், மனிதனின் தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்வு, மொழி, பண்பாடு, நடத்தை, சிந்தனை, வரலாறு போன்றவற்றைக் கருப்பொருள்களாகக் கொண்ட அறிவுத் துறைகளுக்கு வழங்கப்படுகிறது. இவ்வகையில் சமூகவியல், உளவியல், மொழியியல், பொருளியல், சமயம், வரலாறு, மேலாண்மைக் கற்கை, சட்டவியல், அரசறிவியல் போன்ற துறைகளை மானுடவியற் கற்கைகள் (Humanities) என்போம். இன்று மானுடவியல்களின் பங்களிப்பு மனித வாழ்விற்கு இன்றியமையாதது எனுமளவிற்கு அவற்றின் பிரயோகமும், பயன்பாடும் அகன்று விரிந்ததாகக் காணப்படுகிறது.
மேற்கத்திய மானுடவியல்களானது பகுப்பாய்வு (Analysis), திறனாய்வு (Criticism), தர்க்கவியல் (Reasoning) முதலிய முறையியல்களைக் (Methodologies) கொண்டிருந்த போதிலும், அறிவாய்வியல் (Epistemology) ரீதியில் அனுபவவாதம் (Empiricism), புலனறிவாதம் (Sensualism) போன்றவற்றையே மையப்படுத்தியுள்ளன.
அதேபோன்று இருப்பியல் (Ontology) ரீதியில் சமயசார்பின்மைவாதம் (Secularism), பொருள்முதல்வாதம் (Materialism),  மேற்குமையவாதம் (Western Logo centrism) முதலானவற்றையே கருத்திற்கொள்வதால், விழுமவியல் (Axiology) ரீதியல் லௌகீகப் பெறுமானங்களுக்கே (Material values) அவை முக்கியத்துவம் கொடுக்கின்றன.
இஸ்லாத்தைக் குறித்த இன்றைய முஸ்லிம் சமூகத்தின் புரிதல், மேற்கத்திய மானுடவியல்களால் உருவான ஒன்றாகும். இதனால் சமூக, அரசியல் விவகாரங்களில் இஸ்லாத்தின் தலையீட்டை நமது சமூகம் விரும்புவதில்லை. அல்லது, இஸ்லாத்தில் அவற்றுக்கு இடமில்லையென அது கருதுகிறது. இதுவே முஸ்லிம் சமூகத்தின் எல்லா வகையான தேக்கநிலைக்கும் காரணமாகும். நமது சமூகத்தை ஜீவனுள்ளதாக மாற்றக்கூடிய இஸ்லாத்தின் பல்துறை இயல்பானது, மேற்கத்திய மானுடவியல்களை இஸ்லாமியப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
இஸ்லாமியப் புலமைவாதிகளால் விதைக்கப்பட்ட அல்லது புத்துயிரளிக்கப்பட்ட இஸ்லாமிய மானுடவியல்களை முழுமைபெறச் செய்வதும், இஸ்லாத்தின் மீதான முஸ்லிம் சமூகத்தின் தவறான புரிதலை திருத்தியமைப்பதும், இஸ்லாமிய அறிவைத் தேடுபவர்களுக்கு அவற்றைப் போதிப்பதுமே இன்றைய ஆன்மீக அறிவகங்கள் செய்யவேண்டிய பணியாகும்.
கடந்த நூற்றாண்டுகளில் நிகழ்ந்த இஸ்லாமிய நாகரீகத்தின் வீழ்ச்சியும், இஸ்லாமிய உம்மத்தின் மீதான காலனியாதிக்கமும் முஸ்லிம் தலைவர்கள், இஸ்லாமிய சிந்தனை, இஸ்லாமிய உயிர்ப்புவாதம் முதலானவற்றுக்கு முதலிடம் வழங்குவதற்கு அடிப்படைக் காரணங்களாக அமைந்திருந்தன. மேற்கத்திய சிந்தனைக்கும், இஸ்லாமிய உலகப்பார்வைக்கும் இடையில் காணப்பட்ட நிரந்தர மோதல்கள் ஒருபுறம். இஸ்லாமிய உலகப்பார்வைக்கு எதிரில் கடும்போட்டியாக முற்றிலும் முரண்பட்டநிலையில் இஸ்லாமிய உலகிற்குள் பிரவேசித்த மேற்கத்திய சிந்தனை மறுபுறம். 19ம் நூற்றாண்டில் செய்யித் ஜமாலுத்தீன் ஆஃப்கானியின் அறிவெழுச்சி இயக்கம் வெளிப்படுவதற்கு இவையே களமமைத்துக் கொடுத்தன.
“அறிவுசார்ந்த பல்வேறு துறைகளில் காணப்பட்ட முஸ்லிம்களின் பின்னடைவும், கல்லாகிப்போன நிலையும் (Petrifaction); அதேபோன்று அறிவுசார்ந்த விசயங்களில் மேற்கத்திய அரசுகளுக்கு கொடிபிடித்தமையுமே முஸ்லிம் உம்மத்தின் வீழ்ச்சிக்கு அடிப்படைக் காரணங்கள் என்பதை ஆஃப்கானியின் எழுச்சி இயக்கம் கண்டடைந்திருந்தது” என்பதாக பேராசியர் ஷஹீத் முதஹ்ஹரி குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமிய சிந்தனை மற்றும் அறிவு குறித்த செய்யித் ஜமாலுத்தீன் ஆஃப்கானியின் புத்துயிர்ப்புவாதத்தைத் தொடர்ந்து “அறிவை இஸ்லாமியப்படுத்தல்” (Islamization of Knowledge) என்ற எண்ணக்கரு தோன்றியது. அப்போதிருந்தே பல்வேறு இஸ்லாமிய நாடுகளிலும், அவற்றுக்கு வெளியிலும் இது சார்ந்து பல பெருமுயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
“அறிவை இஸ்லாமியப்படுத்தும் பணிகளில் ஒன்று, இஸ்லாமியத்துவத்திற்கு விசுவாசமாக இருப்பதனூடாக நவீன சிந்தனைத் துறைகளிலும் செயலாற்றுவதற்கு முஸ்லிம் சிந்தனையாளர்களுக்கு உதவுவதாகும். இதனால் இச்செயற்பாடானது, இஸ்லாமிய சிந்தனையாளர்கள் பாரம்பரிய சிந்தனா பள்ளிகளையும், புதிய கருத்துக்கள் மற்றும் சிந்தனைகளையும் கண்டடைவதை கவனத்திற்கொள்வதோடு, செயல் மற்றும் பிரயோக விடயத்திலும் அறிவார்ந்த கருதுகோள்களுக்கும் முறையியல்களுக்கும் முக்கியத்துவத்தை வழங்கி செயலாற்றுவதற்கான களத்தை உருவாக்குவதற்குக் காரணமாகிறது” என டாஃப்ட்ஸ் பல்கலைக்கழக பேராசிரியரும்,சர்வதேச ஆய்வாளருமான வலீ ரிஸா நஸ்ர் குறிப்பிடுகிறார்.
உண்மையில் அறிவை இஸ்லாமியப்படுத்துவதன் ஊடாக இஸ்லாமிய மானுடவியல்கள் பாலான மனித சமுதாயத்தின் தேவையை நிவர்த்தி செய்யவும், வாழ்வின் எல்லா கூறுகளிலும் தனிமனித, சமூக இயக்கப்பாட்டை ஒழுங்கமைக்கவும் முடியும்.

ஏகத்துவப் பிரபஞ்சவியலும், மனிதனை அகிலத்தோடு பிணைப்பதும்

இஸ்லாமியக் கருத்தியலும் மானுடவியல்களும் ஏகத்துவத்தை (Monotheism) அடிப்படையாகக் கொண்டவை. இப்பிரபஞ்சத்தின் சீர்மையும் ரிதமும் ஏகத்துவச் சுடர்களாகும். நிர்ணயிக்கப்பட்ட இவ்வுலகிலிருந்து பகுத்தறிவைப் (Intellect) பெற்ற மனிதன் விதிவிலக்காகிறான். இத்தகைய மனித நடத்தைகளே இப்பிரபஞ்சத்தின் சீர்மையில் எதிர்வினைகளைத் தோற்றுவிக்கின்றன. இந்நிலை ‘முழுமுதல் நிர்ணயவாதத்தை’ (Absolute Determinism) மறுவாசிப்புச் செய்கிறது. முழுமுதல் நிர்ணயவாதப்படி நோக்கும்போது, இப்பிரபஞ்சத்தின் சிருஷ்டிகர்த்தா பாவம்புரிவதற்கான நிர்ப்பந்த நிலையில் மனிதர்களைப் படைத்துள்ளான் என்றாகிறது. இதன் மூலம் பிரபஞ்சத்தின் சீர்மையையையும் ஒருமைத்துவத்தையும் விரும்பாதவனாக அவனே ஆகிவிடுகிறான். இறைவன் சீர்கேட்டைத் தடைசெய்துள்ளான். அவ்வாறிருக்க, தான் தடைசெய்த ஒன்றை தானே நிகழ்த்துவதற்கு அவன் விரும்பமாட்டான் என்பது தத்துவார்த்த உண்மை மட்டுமன்றி, இஸ்லாமியப் பனுவல்களின் நிலைப்பாடும் (திருக்குர்ஆன் 7:28) அதுவேயாகும். மறுபுறம், மனிதனானவன் இப்பிரபஞ்சத்தின் ஒரு அங்கமாக இருப்பதோடு, அதன் ரிதத்தைப் பேணவேண்டும் என்பதும் இஸ்லாமியப் போதனையாகும்.
இத்தகைய இஸ்லாமிய உலகப்பார்வை (World view), நாத்திகப் பிரபஞ்சவியலுக்கு (Atheistic Cosmology) எதிர்நிகராக ஏகத்துவப் பிரபஞ்சவியலை (Monotheistic Cosmology) மாற்றீடு செய்வதன் மூலம் ஐரோப்பிய மானுடவியல்களின் நிறத்தை நீக்கி, அவற்றுக்குப் புதிய வரைவிலக்கணத்தைக் கொடுத்துள்ளது. பகுத்தறிவும் சுயாதீன சித்தமும், பௌதீக உலகின் இருப்பை கோட்பாட்டளவில் (Doctrine) அறிந்து, நடைமுறையில் (Practice) தான் எப்படி வாழவேண்டும் என்று மனிதன் உய்த்துணர்வதற்கான பிரமாணமாகும். மனிதன் தன்னை இப்பிரபஞ்சத்தின் ஒரு அங்கமாகப் பார்ப்பது அல்லது தன்னை அகிலமயமாக்கிக் கொள்வதென்பது இன்றியமையாததாகும். இப்பிரபஞ்சத்தின் சீர்மையான இயக்கப்பாட்டிற்கு வெளியில், மனிதன் தனக்கென்றொரு முரண்பாடான இயக்கப்பாட்டைக் கொண்டிருக்க முடியாது. அவ்வாறு ரிதத்தை சிதைப்பது (فساد) ஏகத்துவத்திற்கு எதிரானதும், ஒருவகையில் இறைவனுக்குத் தன்னை இணையாக்குவதற்கு ஒப்பானதும் ஆகும்.

பௌதீக அதீதமும், பெறுமானமிக்க மனித இருப்பும்

ஏகத்துவப் பிரபஞ்சவியல், இறைவன் எனும் எல்லையற்ற அகண்ட சாரம் (ذات بسیط) ஒன்றின் மீதான தேடலில் மனித இருப்பிற்கு பெறுமானத்தைக் கொடுக்கிறது. உடல், ஆத்மா எனும் இரு பரிமாணங்களைக் கொண்ட மனிதனில் காணக்கூடியவையாக உள்ள பௌதீக மற்றும் பௌதீக அதீதப் படிவங்கள், அவனைப் பௌதீகத்திற்கு அப்பால் பயணிப்பதற்குத் தூண்டுகின்றன. இறைவிசுவாசத்தின் பூரணநிலை, பௌதீகத்திற்கு அப்பால் அமைந்த மறைவானவற்றை நம்புவதில் (إیمان بالغیب) உள்ளது.
பௌதீக அதீதம் அல்லது மீபொருண்மையியல் (Metaphysics) தேடலானது, மறைவானவற்றின் இருப்பை அல்லது பௌதீகத்திற்கு அப்பாலுள்ளதை நிரூபணமிக்கதாகக் கண்டுள்ளது. ரிதமிக்க இப்பிரபஞ்சம், ஓர் சீர்மையாளனின் ஓவியம் என்பது தர்க்கவியலின் முடிவாகும். இத்தகு வலுவான முடிவிலிருந்தே லௌகீகத்திற்கும் ஆன்மீகத்திற்கும் இடையிலான வரையறை வகுக்கப்பட்டுள்ளது. இம்மை-மறுமை என்ற எதிர்நிலைகளில் எது மையப்படுகிறதோ, அது மற்றதை விளிம்புநிலைக்குத் தள்ளிவிடுகிறது. இவற்றுள் எதனைக் மையப்படுத்த வேண்டும் என்பதே இஸ்லாமிய மெய்ஞானத்தின் (Islamic Mysticism) இலக்காகும். அது ஒருவகை பௌதீக அதீதம். தவிரவும், ஆத்மஞானப் பயணம் என்பது உணர்வதேயன்றி உணர்த்தக் கூடியதன்று.
இவ்வுலகைவிட மறுவுலகை மேலாகக் கொள்ளல் (87:17) என்பது இறைவேதக் கட்டளை. லௌகீகத்திற்கும் ஆன்மீகத்திற்கும் இடையில் மனித நடத்தைகளை வகுத்துக் கொள்வதே அதன் பொருள். சடவாதம் என்பது, சடத்திற்கும் பௌதீகப் பொருட்களுக்கும் முன்னுரிமை வழங்குவதைக் குறிக்கும். ஐம்புலன்களால் அறியத்தக்க அவை, அந்தப் புலன்களைக் கொண்ட உடலுக்கு லயத்தைக் கொடுத்து, மனிதனை தமக்கு அடிமையாக்கிக் கொள்கின்றன. சடத்திற்கும் பௌதீகத்திற்கும் அடிமைப்பட்டவன் சடவாதியாகிறான். இப்போது, ஐம்புலன்களால் அறியமுடியாத மறுவுலகை விடவும் இவ்வுலகம் அவனுக்கு மேலாகத் தென்படுகிறது. இதுதான் பொருள்முதல்வாதத்தின் (Materialism) முடிவாகும்.
இப்போதுதான், ஐம்புலன்களுக்கு அப்பால் மனிதன், தான் பெற்ற பகுத்தறிவு (عقل), உள்மனத்தூண்டல் (إلهام) போன்ற ஆறாம்-ஏழாம் அறிவுத்திறன்களின் மூலம் சடத்தையும் பௌதீக உலகையும் கடந்து அறிய முற்படுவது அவசியமாகிறது. மரணத்தோடு முற்றுப்பெறாத மனிதனின் நித்திய வாழ்வு பற்றிய மெய்யுறுதியானது, சட பௌதீக உலகிற்கு அப்பாலுள்ள மறைவானவற்றை நம்புவதிலும், அவற்றின் அடிப்படையில் செயற்படுவதிலும் தங்கியுள்ளது. நிரூபணமிக்க பௌதீக அதீதங்களை மையப்படுத்துபவன் ஆன்மீகவாதியாகிறான். இம்மையை விடவும் மறுமை அவனுக்கு மேலாகத் தென்படுகிறது. அதுதான் உண்மையான ஆன்மீகம் ஆகும்.
தற்போதுள்ள பொருள்முதல்வாத மானுடவியல்களால், இஸ்லாம் மனிதனுக்கு முன்வைப்பதுபோன்ற ஆன்மீகத்தையோ சம்பூரணநிலையையோ வழங்க முடியாது. எனவே, எந்தவொரு காலகட்டத்திலும், சூழலிலும் மனிதன் எதிர்கொள்ளும் சவால்கள், தேவைகள் என அனைத்தையும் இஸ்லாம் கருத்திற்கொண்டுள்ளது. இதனால், அனைத்தினதும் சிருஷ்டிகர்த்தாவான அல்லாஹுத் தஆலா, மனிதன் அவற்றை எதிர்கொள்ளவும் நிவர்த்திசெய்யவுமான திறன்படைத்த, ஆழமான அறிவுப்பரப்பைக் கொண்ட இஸ்லாமிய சன்மார்க்கத்தை மனிதனுக்கு வழங்கியுள்ளான் (03:19) என்பது இங்கு கவனத்திற்கொள்ள வேண்டியதாகும்.
Previous Post Next Post