கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.முபாறக் மதனி
அல்குர்ஆனுக்கு ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் ஒருபோதும் முரண்படுவதில்லை. அவ்வாறு முரண்படுவது போன்று தென்படும் பட்சத்தில் அவற்றுக்கிடையில் இணக்கம்காண வேண்டுமே தவிர அவற்றில் எதனையும் நிராகரிக்கக் கூடாது. அகீதா சார்ந்த அம்சங்கள் அனைத்தையும் அல்குர்ஆன், அஸ்ஸுன்னா ஆதாரங்களைக் கொண்டு மாத்திரமே நிறுவ வேண்டும். இஸ்லாமிய அகீதாவின் மூலாதாரங்கள் அல்குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் ஆதாரபூர்வமான சுன்னாவுமாகும். என கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.முபாறக் மதனி; தெரிவித்தார்.
கொழும்பு ஜம்மிய்யதுஸ் ஷபாப் அனுசரணையில் மருதமுனை இஸ்;லாமிய பிரச்சார மையம் ஏற்பாடு செய்த மருதமுனையைச் சேர்ந்த மௌலவியாக்களுக்கான இஸ்லாமிய வழிகாட்டல் கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை(19-02-2017)மருதமுனை பிரச்சார மையத்தின் மண்டபத்தில் நடைபெற்றது இதில் வளவாளராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
150பதுக்கும் மேற்பட்ட மௌலவியாக்கள் கலந்து கொண்ட இந்த இஸ்லாமிய வழிகாட்டல் கருத்தரங்கில் அஷ்செய்க் எம்.ஐ.எம்.ஜிபான் மதனி.அஷ்செய்க் எஸ்.எச்.முஜீப் சலபி ஆகியோரும் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர்.
இங்கு கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.முபாறக் மதனி; மேலும் தெரிவிக்கையில்:-ஈமான் என்பது உள்ளத்தால் ஏற்று, நாவால் மொழிந்து, உடல் உறுப்புக்களால் செயற்படுத்துவதைக் குறிக்கும். மேலும் நல்லமல்கள் புரிவதன் மூலம் ஈமான் அதிகரிக்கும், பாவங்கள் புரிவதன் மூலம் ஈமான் குறைவடைந்து செல்லும்
அல்குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் சீரிய சிந்தனையுடன் முரண்படமாட்டாது. சுயசிந்தனைக்கும் சுயபுத்திக்கும் முரண்படுவதாகக்கூறி அவற்றை நிராகரிப்பது மிகத் தெளிவான வழிகேடாகும். அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கான வழிமுறை, குறித்த அல்குர்ஆன் வசனத்தை அல்லது சுன்னாவை விளக்குகின்ற ஏனைய வசனங்களும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் மற்றும் ஸலபுஸ்ஸாலிஹீன்களான முன்னோர்களின் புரிதல்களுமாகும்.
இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றக்கூடிய பித்அத்தைச் செய்கின்ற இமாமுக்குப் பின்னால் நின்று தொழுவது கூடாது. ஏனைய பித்அத்தைச் செய்கின்ற இமாம்களுக்குப் பின்னால் நின்று தொழுவது அனுமதிக்கப்பட்டதாகும். எனினும் சுன்னாவைப் பேணக்கூடிய இமாமுக்குப் பின்னால் நின்று தொழுவதே சிறந்ததாகும் என் அவர் மேலும் தெரிவித்தார்.