Headlines
Loading...
ஏறாவூர் பிரதேச காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்படுமா?

ஏறாவூர் பிரதேச காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்படுமா?



எம்.ஜே.எம்.சஜீத்

ஏறாவூர் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் ஏறாவூர் பிரதேச காணிப்பிரச்சினைகள் தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிரினால் முன்மொழியப்பட்ட விடயங்கள் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு ஜனாதிபதி மற்றும் சம்மந்தப்பட்ட அமைச்சரின் கவத்திற்கு கொண்டு செல்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் ஆகியோரின் இணைத்தலைமையில் நேற்று (13) ஏறாவூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிரினால் ஏறாவூர் பிரதேச காணிப்பிரச்சினைகள் தொடர்பில் பின்வரும் விடயங்கள் முன்மொழியப்பட்டது.

1. ஏறாவூர் நகர் பிரதேசத்திலுள்ள 17 கிராம சேவகர் பிரிவுகளிலும் 2015, 2016ஆம் ஆண்டு காணியற்றவர்களிடம் விண்ணப்பம் கோரப்பட்டு புதிய காணி வழங்க தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு காணிகளை வழங்க ஆவண செய்ய ஜனாதிபதி மற்றும் காணி அமைச்சருக்கு அறிவித்தல்.

2. யுத்த காலத்தில் ஏறாவூர் பற்று பிரதேசத்தில் தங்களது சொந்த விவசாய காணிகளிலிருந்து வெளியேறி வருடாந்த காணி அனுமதிப்பத்திரத்தினை பெற்றவர்களுடைய அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்து தொடர்ச்சியாக அவர்களுடைய காணிகளில் பயிர் செய்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்குதல் இவ்விடயம் தொடர்பிலும் ஜனாதிபதி மற்றும் சம்மந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அறிவித்தல்.

3. ஏறாவூர் பற்று பிரதேசத்திலுள்ள அரச காணியில் 350 ஏக்கர் நிலத்தில் அமையப்பெற்றுள்ள தெழில் பேட்டையை நிறுத்தி காணியற்றவர்களுக்கு அக்காணியினை வழங்கி தொழில் பேட்டையை வேறு இடத்தில் அமைத்தல்.

 ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா இம் மூன்று முக்கிய பிரச்சினைகளையும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து மேற்குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் சம்மந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அறிவிப்பதெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.