பைறுாஸ்
புதிய எல்லை நிர்ணயம் மற்றும் புதிய தேர்தல் முறைமை என்பன தொடர்பில் சிறு, சிறுபான்மை கட்சிகள் தொடர்ச்சியாக தமது கவலைகளை முன்வைத்து வருகின்றன.
இதற்கமைய மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி என்பன தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளதுடன் பிரதமரை நேரில் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளன.
கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட எல்லை நிர்ணயமானது மிகவும் திட்டமிட்ட வகையில் சிறு மற்றும் சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதை இலக்காகக் கொண்டே வரையப்பட்டிருந்தது. இதன் காரணமாக புதிய அரசாங்கம் அதனை திருத்தியமைப்பதற்கான குழு ஒன்றை அசோக பீரிஸ் தலைமையில் நியமித்திருந்தது. அக் குழு பெரும் இழுபறிகளுக்கு மத்தியில் தனது அறிக்கையை உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளித்திருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை மேற்படி திருத்தப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கை வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அது நடைபெறவில்லை.
அடுத்த வாரமோ அல்லது அதன் பிற்பாடோ பிரசுரிக்கப்படலாம் என உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
எனினும் அரசாங்கம் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தாது இழுத்தடிப்பதற்காகவே எல்லை நிர்ணய அறிக்கையை வெளியிடாது சாக்குப் போக்குகளைக் கூறி வருகிறது என பலரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் உள்ளூராட்சி சபைகளின் கால எல்லை நிறைவடைந்த நிலையில் தற்போது இரு வருடங்கள் கடந்து விட்டன. இதன் காரணமாக உள்ளூராட்சி சபைகள் பெரும் சவால்களையும் நிர்வாக நெருக்கடிகளையும் சந்தித்து வருகின்றன.
எனவே கூடிய விரைவில் அரசாங்கம் நாடு முழுவதிலும் ஏக காலத்தில் உள்ளூராட்சி தேர்தலை நடத்த வேண்டியத அவசியமாகும். எனினும் தேசிய அரசாங்கத்திலுள்ள ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்குமிடையிலான அதிகாரப் போட்டி உடனடியாகத் தேர்தல் ஒன்றுக்குச் செல்வதற்கு பெரும் தடையாகவுள்ளதை உணர முடிகிறது.
இதற்கிடையில் குறித்த எல்லை நிர்ணய அறிக்கை மற்றும் புதிய தேர்தல் முறைமை என்பன தொடர்பில் சிறு, சிறுபான்மைக் கட்சிகளின் கோரிக்கைகளை உள்வாங்குவதில் அரசாங்கம் எந்தளவு தூரம் நியாயமாக நடந்து கொள்ளப் போகிறது என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
60 சதவீதம் தொகுதிவாரியாகவும், 40 வீதம் விகிதாசார பிரதிநிதித்துவ ரீதியானதுமான ஒரு கலப்பு முறையை அடிப்படையாக கொண்ட தேர்தல் முறை தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இது சிறு, சிறுபான்மைக் கட்சிகளுக்கு எல்லா இடங்களிலும் சாதகமானதாக அமையாது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த முறையினால் வடக்கில் பெரும் பாதிப்பு ஏற்படாது என்பதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதற்கு கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.
எது எப்படியிருப்பினும் அரசாங்கம் சிறு மற்றும் சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதை இலக்காகக் கொண்டதொரு தேர்தல் முறையை நோக்கிச் செல்லுமானால் அது இந்த நாட்டின் ஜனநாயகத்தின் மீது விழும் பலத்த அடியாகவே அமையும். இதற்கு இந்த ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் துணை போக மாட்டார்கள் என நம்புகிறோம்.
இது விடயத்தில் சிறு , சிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து நின்று போராட வேண்டும்.
அதன்மூலமே சிறுபான்மை மக்களைப் பாதிக்காத எல்லை நிர்ணயம் மற்றும் புதிய தேர்தல் முறையை சாத்தியமாக்க முடியுமாகவிருக்கும்.