அஸ்லம் எஸ்.மௌலானா
சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையை ஸ்தாபிப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா மேற்கொண்டு வருகிறார் என அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை விடயமாக அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியபோது இதனை நேரடியாக கண்டுகொள்ள முடிந்தது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தலைமையில் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பில் என்னுடன் கட்சியின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, கட்சியின் சாய்ந்தமருது அமைப்பாளர் ஏ.எல்.எம்.அன்வர் ஆகியோரும் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுடன் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி, மேலதிக செயலாளர் எம்.எம்.நயீமுடீன் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
இது தொடர்பில் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் மேலும் தெரிவிக்கையில்;
"எமது சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி சபையை உருவாக்குவதற்கான முயற்சிகளில் இருந்து நாம் பின்வாங்கவில்லை. எனினும் அதனை வென்றெடுப்பதற்காக சில சந்தர்ப்பங்களில் இரகசியம் பேண வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அதனால்தான் நான் தனியாகவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடனும் சென்று அடிக்கடி அமைச்சர் பைஸர் முஸ்தபாவை இது விடயமாக சந்தித்து பேசுவதை ஊடகங்களுக்கு மாத்திரமல்லாமல் எனக்கு நெருங்கியவர்களிடம் கூட வெளிப்படுத்தாமல் இரகசியம் பேணி வந்தேன்.
எனினும் தற்போது இவ்விடயம் முக்கிய கட்டத்தை எட்டியிருக்கின்ற சூழ்நிலையில் உங்கள் போன்ற ஊடகவியலாளர்கள் இம்முயற்சி கைவிடப்பட்டு விட்டதா என்று என்னிடம் கேட்கின்றபோது உண்மைகளை மூடி மறைக்க முடியாமல் இத்தகவலை வெளிப்படுத்துகின்றேன்.
எல்லை மீள் நிர்ணய அறிக்கையை வர்த்தமானியில் வெளியிடுவதற்காக உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அவரை நாம் சந்தித்து, சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியபோது அமைச்சரும் அங்கிருந்த அமைச்சின் செயலாளர் மற்றும் மேலதிக செயலாளர் ஆகியோரும் இது தொடர்பில் எடுக்கப்பட்டு வருகின்ற நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை எமக்கு எடுத்துக்கூறினர்.
அதன் பிரகாரம் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையை ஸ்தாபிப்பதற்கான வர்த்தமானி பிரகடனத்தை அமைச்சர் பைஸர் முஸ்தபா விரைவில் வெளியிடுவார் என நான் திடமாக நம்புகின்றேன்.
அதேவேளை இதனைத் தடுப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குறுக்கு வழியில் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது என்பதை இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. அதாவது சாய்ந்தமருது உள்ளூராட்சி விடயத்தை முன்னெடுக்க வேண்டாம் என அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் நேரடியாக சொல்லி தடுக்க முடியாது என்பதனால் தமிழ் தரப்பினரை பிழையாக வழிநடத்தி, அவர்கள் மூலம் உள்ளூராட்சி அமைச்சர் தொடக்கம் பிரதமர், ஜனாதிபதி வரை இதற்கெதிராக முறையிட்டு மகஜர்களை அனுப்பச் செய்து தமது சாணக்கியத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனால் இவ்விடயமாக அமைச்சருக்கு எழுந்திருந்த சந்தேகத்தை நாம் நிவர்த்தி செய்திருப்பதனால் அவர் மேற்கொண்டுள்ள பூர்வாங்க ஏற்பாடுகள் நிறுத்தப்படாமல், தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முன்னர் கல்முனைக்குடி மக்களை தூண்டி விட்டு, குழப்பிய இவர்கள், தற்போது அந்த மக்கள் சாய்ந்தமருத்துக்கு தனியான உள்ளூராட்சி சபை கொடுக்க வேண்டியதன் நியாயத்தை புரிந்து கொண்டு, அவர்களும் இதனை ஆதரிக்க முன்வந்துள்ள சூழ்நிலையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளை குழப்புவதற்கு எத்தனித்துள்ளனர்.
கடந்த 2015 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின்போது கல்முனை நகரில் இடம்பெற்ற தமது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சாய்ந்தமருது மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக பிரதமர் ரணிலைக் கொண்டு தேர்தல் முடிந்த கையோடு சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை உருவாக்கித்தரப்படும் என்று பிரதமரின் நாவினால் ஓர் உறுதிமொழியை மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் வழங்கியிருந்தார்.
ஆனால் ஒன்னறரை வருடம் கடந்தும் கூட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இது தொடர்பில் மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் ஒரு வார்த்தையேனும் பேசவில்லை என்பதும் உள்ளூராட்சி அமைச்சருக்கு பிரதமர் எவ்வித பரிந்துரையும் செய்யவில்லை என்பதும் மு.கா.வின் நாடகத்தையும் நயவஞ்சகத்தனைத்தையும் அளவிட போதுமான சான்றாகும்.
அதேவேளை அமைச்சர் பைஸர் முஸ்தபாவை நாம் சாய்ந்தமருத்துக்கு அழைத்து வந்து அவர் பகிரங்க உத்தரவாதம் வழங்கியதுடன் மு.கா.வின் படம் காட்டல் நாடகத்தை அம்பலப்படுத்தியதனால் ஆத்திரமடைந்த ரவூப் ஹக்கீம், இனிமேல் உள்ளூராட்சி அமைச்சரும் அவரை அழைத்து வந்தோரும் முடியுமானால் இந்த உள்ளூராட்சி சபையை பெற்றுக்கொடுக்கட்டும் என்ற தோரணையில் ஊடகங்களில் கருத்து வெளியிட்டு எம்பக்கம் பந்தை அடித்து விட்டிருந்தார்.
இந்நிலையில் நாம் எமது முயற்சிகளை வீரியமாக்கி, உள்ளூராட்சி அமைச்சருடன் பிண்ணிப்பிணைந்து, தேவையான அத்தனை நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோம். விரைவில் அதன் அறுவடையை கண்டுகொள்ள முடியும்.
சாய்ந்தமருது உள்ளூராட்சி சபைக்கான எமது போராட்டம் நான் பிறந்த மண்ணுடன் கலந்த உணர்வின் உந்துதலாகும். அந்த உள்ளூராட்சி அதிகாரத்தை சாய்ந்தமருது மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு என்ன விலை கொடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன்.
மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீமும் பிரதி அமைச்சர் ஹரீஸும் இனியாவது இதனைத் தடுக்கின்ற முயற்சிகளை கைவிட்டு, உங்களை முழுமையாக ஆதரித்து அதிகார பதவிகளில் இருத்தியமைக்காகவேனும் சாய்ந்தமருது மக்களுக்கு உபத்திரம் செய்யாமல், மனச்சாட்சியுடன் நடந்து கொள்ளுமாறு அன்பான வேண்டுகோள் விடுக்கிறேன்." என்று கலாநிதி ஏ.எம்.ஜெமீல் குறிப்பிட்டார்.