முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டு தீர்மானங்களை எடுத்தால் மட்டுமே முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என முன்னாள் ஜனாதிபதியும் தேசிய நல்லிணக்க செயலணியின் தலைவியுமான சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை முஸ்லிம் கவுன்சிலுடன் இணைந்துள்ள முஸ்லிம் அமைப்புகளின் தூதுக்குழு அதன் தலைவர் என். எம். அமீன் தலைமையில் நேற்று தேசிய நல்லிணக்கச் செயலணி அலுவலகத்தின் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் கலந்துரையாடி முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை எடுத்துரைத்து அவற்றை நிவர்த்தி செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
முன்வைக்கப்பட்ட சில கோரிக்கைகள் தொடர்பில் உரிய தரப்புகளுடன் பேசி சாதகமான தீர்வினைப் பெற்றுத் தருவதாக அவர் முஸ்லிம் தூதுக்குழுவிடம் உறுதியளித்துள்ளார்.
முஸ்லிம் அமைப்புகளும், புத்திஜீவிகளும் அரசியல் தலைவர்களுக்கு இதுவிடயத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டால் உங்களது பிரச்சினைகளை வென்றெடுப்பதற்காக தன்னாலான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
முஸ்லிம்களது நீண்ட காலப் பிரச்சினைகளாகக் காணப்படும் கல்வி, வீடு, காணிப் பிரச்சினைகள் தொடர்பில் நிரந்தரமான தீர்வு எட்டப்பட வேண்டுமானால் முதலில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றுபட வேண்டும். அவர்கள் கட்சி ரீதியில் தொடர்ந்தும் பிளவுபட்டுக் கொண்டிருந்தால் சமூகத்துக்கு விடிவு ஏற்பட முடியாது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அதன் தலைவர் சம்பந்தன் தலைமையில் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்து வருவதால் தான் அவர்கள் முக்கியமான சில விடயங்களில் வெற்றி இலக்கை அடைந்து வருகின்றனர்.
அதுபோன்று முஸ்லிம் தலைமைகளால் ஏன் ஒன்றுபட முடியாது எனக் கேள்வி எழுப்பிய சந்திரிகா பண்டாரநாயக்க முஸ்லிம் சமூகத்தின் மீது தான் கரிசனை கொண்டிருப்பதாகவும் தான் பிரதிநிதித்துவப்படுத்திய அத்தனகலை தொகுதியில் பல முஸ்லிம் கிராமங்கள் இருப்பதாகவும் அந்த மக்கள் பண்டாரநாயக்க குடும்பத்துடன் நெருங்கிப் பழகியுள்ளதாகவும் இதன்போது அவர் நினைவுபடுத்தியுள்ளார். (DC)