தம்புள்ளை பிரதேசத்தில் முஸ்லிம்கள் புதிதாக ஒரு பள்ளிவாசலைக் கேட்கவில்லை. இருக்கும் பள்ளிவாசலுக்கு பதிலாகவே ஒன்றைக் கேட்கிறார்கள். அதுவும் காணியையே கேட்டுள்ளார்கள். கட்டித் தரும்படி கேட்கவில்லை.
இதை சிங்கள மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என தபால், தபால் சேவைகள் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
கண்டி மாவட்ட செயலகத்தில் கடந்த திங்களன்று நடந்த கூட்டமொன்றில் தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை எழுப்பப்பட்ட போதே அமைச்சர் ஹலீம் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் விளக்கமளித்த அவர்,
தம்புள்ளை பிரதேசத்தில் புதிதாக ஒரு பள்ளிவாசல் கட்ட முயற்சிகள் நடைபெறுவதாக அநேகர் நினைக்கின்றனர்.
ஆனால் அது புதிய பள்ளிவாசல் அல்ல. புனித பூமி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தம்புள்ளை பள்ளிவாசல் அகற்றப்படவுள்ளது. அதற்குப் பதிலாக தம்புள்ளை நகருக்கு வெளியே காணி வழங்கப்படவுள்ளது. அதிலேயே பள்ளிவாசல் கட்டப்படவுள்ளது. இதை மக்கள் நன்கு விளங்கிக் கொள்ளவேண்டும்.
தம்புள்ளை நகர முஸ்லிம்களும் தமது காணிகளிலிருந்து வெளியேற்றப்படவுள்ளனர். அவர்களுக்கும் காணிகள் வழங்கப்படவுள்ளன. எனவே இவை புதியவை அல்ல. இடம் மாறுதலே நடக்கிறது என்றார்.
இதேவேளை, "தம்புள்ளையில் தொழுகை மண்டபம் ஒன்று தேவையில்லை" என்று ஒரு இலட்சம் கையொப்பங்களைத் திரட்டும் நடவடிக்கைகள் நேற்றும் தம்புள்ளை நகரில் முன்னெடுக்கப்பட்டன.
தம்புள்ளை நகரிலுள்ள கடிகார கோபுரத்துக்கு அண்மையிலுள்ள புத்தர் சிலைக்கருகில் பௌத்த தேரர்களால் கையொப்பங்கள் திரட்டப்பட்டன.
பாரிய நகரம் மற்றும் மேற்குப் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தம்புள்ளை பள்ளிவாசலை புதிய இடமொன்றுக்கு இடமாற்றிக் கொள்வதற்கு 20 பேர்ச்சஸ் காணி வழங்குவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தக் கையொப்பம் திரட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை, முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் துண்டுப் பிரசுரமொன்று வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். (விடிவெள்ளி)