எம்.எப்.பஸீர்
பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள பிரபல முஸ்லிம் மகளிர் பாடசாலையில் க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி பயிலும் 15 வயதுடைய மாணவி ஒருவர் அப்பாடசாலையின் ஆரம்பப் பிரிவுக்குச் செல்லும் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
இவ்வாறு பாலத்திலிருந்து பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த மாணவி படுகாயமடைந்த நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் நேற்று முன் தினம் புதன்கிழமை முற்பகல் 10. 30 மணியளவில் பாடசாலை நேரத்திலேயே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.எனினும் இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸ் தரப்பும் மாணவியின் தரப்பும் முன்னுக்குப் பின் முரணான விடயங்களை வெளியிட்டு வருகின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பில் அறிய முடிவதாவது,நேற்று முன்தினம் குறித்த மாணவி கல்விகற்கும் வகுப்பில் 400 ரூபா காணாமல் போனதாக ஒரு முறைப்பாடு வகுப்பாசிரியரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்போது குறித்த மாணவியே அந்தப் பணத்தினைத் திருடியதாக குற்றம் சுமத்தியுள்ளனர். இதனால் ஏனைய மாணவிகள் குறித்த மாணவியை ஏளனம் செய்ததாகவும் அதனையடுத்தே மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ள குறித்த மாணவி பாடசாலை மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளதாகவும் மாணவியின் தாயார் தெரிவித்தார்.
எனினும், பாடசாலைத் தரப்பு பொலிஸாருடன் சேர்ந்து விடயத்தை மறைத்து வேறு காரணங்களால் தனது மகள் தற்கொலைக்கு முனைந்ததாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும், இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடுகளைச் செய்துள்ளதாகவும் குறித்த மாணவியின் தாயாரான பாத்திமா பஸ்லியா தெரிவித்தார்.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் ஊடாக பம்பலப்பிட்டி பொலிஸாரைத் தொடர்புகொண்டு சம்பவம் தொடர்பில் வினவிய போது, குறித்த மாணவி மன உளைச்சல் காரணமாகத் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் எமக்குப் பதிலளித்தனர். மன உளைச்சலுக்கான பின்னணியில் காதல் விவகாரமே உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
எனினும் இதனை முற்றாக மறுக்கும் குறித்த மாணவியின் தாயார், பொலிஸார் விடயத்தை திசை திருப்புவதாகக் கூறினார். அத்துடன் தனது மகளுக்கு பணம் தொடர்பில் எந்த சிக்கலும் இருக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அத்துடன், ஒரு கால், ஒரு கை மற்றும் முதுகெலும்பு பகுதியில் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ள மாணவி தொடர்ந்தும் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.