ஷேகு
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றிடையே ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடு காரணமாக புதிய அரசியலமைப்பு அமைக்கும் முயற்சி ஸ்தம்பிதமடைந்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை அரசியலமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என்ற கருத்தில் ஐக்கிய தேசியக் கட்சி முனைப்பாகவுள்ளது. இருப்பினும், ஸ்ரீ ல.சு.க. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன், அரசியலமைப்பு முழுவதையும் மாற்றத்துக்குள்ளாக்காமல் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லத் தேவையற்ற விடயங்களில் மாத்திரம் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்ற கருத்தை ஸ்ரீ.ல.சு.க. தெரிவித்து வருகின்றது. இதற்கு ஐ.தே.க. தனது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றது.
இந்த இழுபறி நிலையை சமாளிக்கத் தேவையான நடவடிக்கையில் ஜனாதிபதியும், பிரதமரும் ஈடுபட்டுள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவித்துள்ளன.