1804 ஜுன் 7ஆம் திகதி பிரித்தானிய அரசால் தேசத்துரோகிகளாக பிரகடனம் செய்யப்பட்ட 190 பேரையும் நாட்டுக்காக போராடி தேசிய வீரர்கள் என வர்த்தமானி மூலம் அறிவிக்குமாறு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை இந்த விடயம் தொடர்பில் ஆராய விசேட கலந்துரையாடலொன்று கண்டியில் நடைபெறவுள்ளது.
நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக ஆகியோரது பங்குபற்றலுடன் கண்டி தலதா மாளிகையில் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேற்படி கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலுக்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக் கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், வேறு ஒரு வேலை காரணமாக தன்னால் இக்கலந்துரையாடலுக்கு சமூகமளிக்க முடியாது என அவர் ஏற்பாட்டுக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.
1818 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக ஊவா- வெல்லஸ்ஸ பகுதியில் கிளர்ச்சி செய்த 19 சிங்களத் தலைவர்கள் நாட்டுக்காக போராடிய தேசிய வீரர்கள் என வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி பிரகடனம் செய்திருந்தார். இந்நிலையில் 1818ஆம் ஆண்டு தேசத்துரோகிகளாக பிரகடனம் செய்யப்பட்ட மேலும் பலர் தேசிய வீரர்களாக அறிவிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில, 1804 ஜுன் 7ஆம் திகதி தேசத்துரோகிகளாக பிரகடனம் செய்யப்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் 190 பேரையும் நாட்டுக்காக போராடிய தேசிய வீரர்கள் என பிரகடனம் செய்யுமாறு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோருக்கு கடிதம் அனுப்பி வைத்திருந்தார். அதில் 1804 ஜுன் 7ஆம் திகதி வெளியான வர்த்தமானி அறிவித்தலையும் இணைத்து அனுப்பியிருந்தார்.
இதனால், 1804ஆம் ஆண்டு தேசத்துரோகிகளாக பிரகடனம் செய்யப்பட்டவர்களையும் தேசிய வீரர்களாக அறிவிக்க அரசு கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை கண்டி தளதா மாளிகையில் நடைபெறவுள்ள விசேட கலந்துரையாடலின் போது இந்தவிடயமும் பேசப்படவுள்ளது.