தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் 1983 ஆம் ஆண்டின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1802 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இவர்களுள் 589 சிங்களவர்களும் 1025 தமிழர்களும் 188 முஸ்லிம்களும் அடங்குகின்றனர் என சட்டம், ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டு எதிரணி ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதய சாந்த குணசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டு எதிரணி ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதய சாந்த குணசேகர கேள்வி எழுப்புகையில்,
தமிழீழ விடுதலைப் புலி பயங்கரவாதிகளால் 1983ஆம் ஆண்டின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட ஆட்களின் எண்ணிக்கை எவ்வளவு?
ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு? ஒவ்வொரு மதத் தலைவர்கள், மதத்தைச் சார்ந்த மக்களின் எண்ணிக்கை எவ்வளவு? அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை எவ்வளவு? என கேட்டிருந்தார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் சாகல ரட்நாயக்க, 1983 ஆம் ஆண்டின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொல்லப்பட்ட 1802 பேரில் 589 சிங்களவர்களும் 1025 தமிழர்களும் 188 முஸ்லிம்களும் அடங்குகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,ஈ.பி.டி.பி.,ரெலோ மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய அரசியல் கட்சிளைச் சேர்ந்த தலா இருவரும் அதேபோல்,ஈ.பி.ஆர்.எல்.எப். ஐச் சேர்ந்த 6 பேரும் அடங்குகின்றனர்.
கொல்லப்பட்ட 1802 பேரில் 589 பேர் பௌத்தர்கள், 1025 பேர் இந்துக்கள் , 188 பேர் இஸ்லாமியர்களாக உள்ளனர். அத்துடன் 522 அரச அலுவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் இந்தப் படுகொலைகள் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிக்க முடியும். இந்தச் சம்பவம் இடம்பெற்று தற்போது 10 வருடங்களுக்கும் மேலான காலம் கடந்து விட்டது.
ஆகவே அவைதொடர்பில் முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்கு போதியகால அவகாசமொன்று தேவைப்படுகின்றது என்றார்.