Top News

நல்லாட்சி எங்களை ஏமாற்றிவிட்டதா?



ஆட்சி மாற்றத்தின் போது வழங்கப்பட்ட உத்தரவாதங்களை இந்த அரசாங்கம் மறந்து செயற்படுகின்றதா?  எனும் சந்தேகம் இப்போது எழுந்துள்ளது என, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் துறை அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீம், சந்தேகம் வெளியிட்டார். 

இந்த நல்லாட்சியின்  மிக முக்கிய பங்காளிகளாக, சிறுபான்மையின மக்கள் இருக்கிறார்கள். தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையின் மூலமே, இந்த நல்லாட்சியை இந்த நாடு அனுபவிக்கிறது, எதிர்காலத்திலும், இதே தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான ஒற்றுமையும் புரிந்துணர்வுமே, எதிர்காலத்தில் இந்த இரு சமூகங்களினதும் உரிமைகளை வென்றெடுக்க ஏதுவாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார். ​

நேற்று ஞாயிற்றுக்கிழமை (5), வவுனியா மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்தில், 3.5 மில்லியன் ரூபாய்கள் செலவில், அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்ட நீர் சுத்திகரித்து வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்து, அங்கு உரை நிகழ்த்தும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து அவர் கூறியதாவது, “இந்த நாட்டிலே இருக்கின்ற தேசிய கட்சிகளானது வடக்கு மற்றும் கிழக்கினைப் பொருத்தமட்டில் வெறுமனே அடையாள அரசியலை மாத்திரமே செய்யமுடியும். மாறாக தீவிர மக்கள் சார்ந்த உரிமை அரசியல் என்பது தமிழ் பேசுகின்ற இரண்டு சமூகங்களும் எமது தனித்துவமான அரசியல் பதத்தை பிரயோகித்து ஒன்று பட்டு செயற்பட்டு அடையக்கூடிய சாத்தியப் பாடுகள் இருக்கின்றன. 

இதனைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஒரு புரிந்துணர்வு அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. குறுகிய அரசியல் நோக்கினை இலக்காக செயலாற்றுகின்ற ஒருசில தாறுமாறு அரசியல் சக்திகள் சிறுபான்மை சமூகத்துக்குள் சலசலப்பையும், நம்பிக்கையீனத்தையும் உண்டு பண்ணி தனது அரசியல் தளத்தைப் பாதுகாக்குகின்ற கேவலமான நடைமுறையை இங்கிருந்து இல்லாதொழிக்கவேண்டும். 


தமது அரசியல் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்கின்ற அரசியல் சக்திகள் கடந்த காலங்களில் பொய்யான பரப்புரைகளுக்கூடாக தமிழ் பேசுகின்ற இரண்டு சமூகங்களுக்கும் இடையில் சந்தேகங்களை விதைத்து அதன் மூலம் தமது அரசியல் சுயத்தை நிலைநிறுத்த முனைகின்ற கேவலத்தை செய்தது. இந்த நல்லாட்சியை கொண்டு வருகின்ற போது சிறுபான்மையினர் தொடர்பில் இந்த அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள்  இப்போது மறக்கப்பட்டு வருகிறதா என்கின்ற தோற்றப்பாடு இப்போது நிலவுகின்றது இது எதிர்காலத்தில் சிறுபான்மை மக்களிடத்தில் ஒரு சந்தேகத்தை விதைத்துள்ளது” என்றார்
Previous Post Next Post