பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இலங்கை அரசியலில், பாசிச சிந்தனைவாதி, அவருடைய நடவடிக்கைகள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும், ஞானசார ஒரு இனவாதி என்பதெல்லாம் நமக்குத் தெரியும், அவர் மஹிந்த அரசைக் கவிழ்க்க ஏவப்பட்ட "செய்த்தான்" என்பதுதான் நமக்கு தெரியாது.
பள்ளிவாயலுக்கு கல் எறிந்து ஆட்சியை பிடித்த நல்லாட்சி, ஞானசாரவை மரபுவழி மரியாதை கொடுத்து கௌரவிப்பது அவருடைய தற்கால அமைதிக்கு பிரதான காரணம் எனலாம். அன்று மஹிந்த அரசாங்கத்தின் முக்கியமான மந்திரிகளினால், தந்திரமாக வளர்க்கப்பட்ட ஞானசார, இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் விசேட அதிதி பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். என்பதும் நினைத்த மாத்திரத்தில் ஜனாதிபதியை சந்திக்கலாம் என்பதும் ஜனாதிபதியும் ஞானசாரவை சந்திப்பார் என்பதும் அவர்களது உறவுமுறை அவ்வளவு பலமானது என்பதையும் நாம் கவனிக்க மறக்கக் கூடாது.
தற்போது மஹிந்த ராஜபக்ஷ அல்ல மைத்திரிபால சிறி சேன அவர்கள் ஜனாதிபதி என்பது ஞாபகத்தில் இருக்க வேண்டும்..
சமீப காலமாக ஞானசார தேரர் எதையும் பேசவில்லை என்பதாக நல்லாட்சிப் பிரியர்கள் பெருமிதம் அடைகிறார்கள்.
அதனால் ஞானசார அடக்கப்பட்டிருக்கிறார், என்பது பொருளாகாது. இப்போது அவருக்கு நம்மைப்பற்றி பேசுவதற்கு நேரமில்லை செயல்படுவதற்குத்தான் நேரம் அதிகமாக தேவைப்படுகிறது என்பதாகத்தான் பொருள்படும். அதனால்தான் ஞானசாரர் பேச வேண்டியதை எல்லாம் அமைச்சர்களான தயா கமகே, சம்பிக்க ரணவக்க, விஜய தாஸ ராஜபக்ஷ போன்றவர்கள் திறன் பட செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால் ஞானசார சத்தம் போட தேவையில்லை.
மஹிந்த அரசாங்கத்தில் இந்த ஞானசாரவை மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேருக்கு நேராக ஒரு தடவை கூட சந்தித்ததாக நாம் காணவில்லை. மஹிந்த அரசாங்கத்தில் பாராளுமன்றம், ஜனாதிபதி மாளிகையென ஞானசாரவை வரவழைத்து மந்திர ஆலோசனை நடத்தியதையும் நாம் காணவில்லை, ஆனால் இந்த நல்லாட்சியில் ஞானசார அடிக்கடி ஜனாதிபதி மைத்திரியை சந்திப்பதும் அமைச்சர்களை சந்திப்பதுமாய் படு பிஸியாகி விட்டார். இந்த அரசாங்கம் ஞானசாரவுக்கு ராஜ மரியாதை வழங்கி கௌரவித்து வைத்திருக்கிறது.
கடந்த காலங்களை பார்க்கிலும் இப்போதுதான் ஞானசார தேரர் மிகவும் வேகமாக செயல்படுகிறார். அண்மையில் கூட குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு சென்றமை சந்திப்பு நடத்தியமை ஊடகங்களுக்கு அவர் கூறிய கருத்து என்பவை சாதாரணமான ஒன்றல்ல, அது சாத்தியமானதும் ஒன்றல்ல
வீதிகளில் சண்டித்தனம் காட்டிக்கொண்டு கத்தித் திரிந்த ஞானசாரவுக்கு இது எப்படி சாத்தியமாக முடியும்.
அப்படியான அனுமதி இதற்கு முதலில் இருந்த ஆட்சியில் ஞானசாரவுக்கு வழங்கப்படவுமில்லை ஞானசார இந்த அளவுக்கு கௌரவப்படுத்தப்படவும் இல்லை, எனவே
ஆரவாரத்தோடும் வீதியில் சண்டைபோட்டுக் கொண்டு திரிந்த ஞானசாரவுக்கு இந்த திடீர் கௌரவம் எங்கிருந்து வந்தது.!? என்பதை முஸ்லிம் சமூகம் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
இன்று அவர் அவருடைய திட்டங்கள் அனைத்தையும் அரசாங்கத்தின் அணுசரனையுடன் நிறைவேற்றி வருகிறார். அதனால் ஆரவாரம் தேவையில்லை. காரணம் இப்போது ஞானசாரவுக்கு எதிர்ப்பு இல்லை, அதனால் ஊடகங்கள் தூக்கிப் பிடித்து செய்திகள் வெளியிட சம்பவங்களும் இல்லை, ஆனால் ஞானசாரவின் காரியங்கள் நிறைவேறுகிறது. உதாரணமாக தொல்பொருள் ஆராய்ச்சி படையணி என்பது யாருடைய திட்டம்? முஸ்லிம்களுக்கு சொந்தமான இடத்தில் புத்தர் சிலை வைப்பது யாருடைய கொள்கை? இதை இப்போது யார் ஞானசாரவுக்கு நிறைவேற்றி தருகிறார்கள்? என்பது போன்ற பலவிடையங்கள் திரை மறைவில் அரங்கேரிக் கொண்டுதான் இருக்கிறது.
இப்போது இதைப் பேசுவதற்குத்தான் ஆளில்லை.
அன்று மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கு சந்தி சண்டைக்கு இழுத்த ஆசாத் சாலி முஜிபுர் ரஹ்மான், பைசர் முஸ்தபா போன்றவர்கள் எந்த முகத்துடன் சென்று ஜனாதிபதி மைத்திரியை பார்க்கின்றார்கள் என்பதுதான் எமக்கு புரியவில்லை.
இனவாத கருத்துக்களையும் ஞானசார தேரருக்கு எதிராக அவதூரும் பேசினார். என்பதாக குற்றம் சுமத்தப்பட்டு சகோதரர் ராஷிக் அவர்களை சிறையில் அடைக்க நல்லாட்சி அரசாங்கத்தினால் முடியும் என்றால், முஸ்லிம்களையும், முஸ்லிம் சமூகத்தையும் உடல், உள, பொருளாதார ரீதியில் இம்சித்த பல நஸ்டத்தையும் துன்பத்தையும் ஏற்படுத்திய ஞானசாரவை நல்லாட்சியால் ஏன் கூண்டில் அடைக்க முடியவில்லை என்ற கேள்விக்கு பதில் தர இப்போதுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளில் யாருமில்லை.
கோடிகளை பெற்றுக் கொண்டு சமூகத்தை விற்று ஏப்பமிடும் சாபக் கேடுகளை முஸ்லிம் சமூகம் தலைவர்களாக கொண்டதால், எது நடக்கிறது.? ஏன் நடக்கிறது? என்பது தெரியாமல். இவர்களின் பொய்ப் பிரச்சாரத்தால் பேரினவாத சித்தாந்தம் உடைய ஆட்சியாளர்களின் பிடியில் முஸ்லிம் சமூகம் ஏமாந்து அகப்பட்டு நிற்கிறது.
அன்று சாணுக்குச்சாண் முலத்திற்கு முலம் மஹிந்தவை விமர்சித்தவர்கள் எல்லாம் இன்று ஏன் இவ்வளவு மௌனித்து வாயடைத்து இருக்கிறார்கள் என்பதுதான் மர்மமாக இருக்கிறது. அப்படி இல்லையென்றால் தங்களுடைய ஒட்டு மொத்த அரசியல் அபிலாசைகளையும் நிறைவேற்றிக் கொள்ள ஞானசாரவை இவர்களும் சேர்ந்துதான் வளர்த்தார்களா? இல்லை ஞானசார தனது காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள இவர்களுக்கு பணம் ஏதும் கொடுத்தாரா? என்றும் சந்தேகம் எழுகிறது.
இல்லை, அப்படியில்லை... நாங்கள்தான் நல்லாட்சியை கொண்டுவந்தோம். ஞானசாரவின் இந்த நடவடிக்கைகளுக்கு பின்னால் இப்போதும் மஹிந்த ராஜபக்ஷதான் இருக்கிறார் என்றால்! ஏன்...? அளுத்கம, பேருவளை தம்புள்ளை, கிரேன்பாஸ், என பல இடங்களில் நடந்த இனவாத அசம்பாவிதங்களுக்கு காரணமாக இருந்த மஹிந்தவையும் ஞானசாரவையும் இந்த நல்லாட்சி காப்பாற்ற வேண்டும்.?
அரசியல் யாப்பு மறுசீரமைப்பு,
தேர்தல் மாற்றச் சட்ட சீர்திருத்தம்,
தமிழர்களுக்கான அதிகார பகிர்வு,
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு
வடக்கு கிழக்கு இணைப்பு போன்ற விடயங்களில் முஸ்லிம் சமூகம் குறித்து பேச வேண்டிய, தீர்மானிக்க வேண்டிய இந்த சந்தர்ப்பத்தில் இந்த விடயங்களை புறக்கணித்துவிட்டு அல்லது பெரும் தொகைப் பணத்திற்கு விலை போய்விட்டு, சமூகத்தின் முதுகில் யார் சவாரி செய்தாலும் பரவாயில்லை, தான் தலைவனாக இருக்க வேண்டும், தனக்கு அமைச்சுப் பதவி வேண்டும் என்று அதிகாரத்தில் கோலோச்சத் துடிக்கும் பேராசை பேர்வழிகள், தங்களுடைய இந்த நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் பேசிவிடக்கூடாது, சிந்தித்துவிடக் கூடாது கேள்விகேட்டு விடக்கூடாது என்பற்காக
வீதியில் நடந்து கொண்டிருக்கும் கலவரத்தை மறைத்து இவர்களது உள் வீட்டு விவகாரங்களை படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருப்தைத்தான் பார்க்க முடிகிறது.
இவர்களின் இந்த இழிநிலை, நாகரீகம் அற்ற செயல்பாடுகளால் அந்நிய சமூகங்களிடம் முஸ்லிம் சமூகம் வெட்கித்து தலை குனிந்து நிற்பதை இனிமேலும் நாங்கள் சிந்திக்க தவறினால். நல்லாட்சியின் அடுத்த தேர்தலுக்கிடையில் முஸ்லிம்கள் நாம் தஞ்சம் கேட்க பக்கத்தில் பாக்கிஸ்தானும் இல்லை பங்களாதேசமும் இல்லை என்பதை புரிந்துகொண்டால் சரி...
அஹமட் புர்க்கான்
கல்முனை...