எமது செய்தியாளர் தீன்
அக்கரைப்பற்று பிரதேச மக்கள் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரசிற்கு தங்களது ஏகோபித்த ஆதரவை வழங்கி ஒரு மாகாணசபை உறுப்பினரை தெரிவு செய்யவேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அக்கரைப்பற்று மத்திய குழு தலைவர் எம்.ஐ.ஏ.ஆர். புஹாரி கூறினார்.
நிகழ்வில் உரையாற்றிய புஹாரி நொண்டிக்குதிரை என்று தேசிய காங்கிரசை விமர்சித்ததாகவும், இதனைத் தொடர்ந்து அங்கு பரபரப்பு காணப்பட்டதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்
அக்கரைப்பற்று பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வேலைத்திட்டங்கள் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கள் தொடர்பாக அண்மையில் அக்கரைப்பற்று 08ஆம் கட்டை சபாநகரில் இடம்பெற்ற மக்கள் ஒன்று கூடல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் - எதிர்வரும் உள்ளுராட்சி மன்றம், மாகாணசபை, பாராளுமன்ற தேர்தல்களில் எமது பிரதேசம் ஒரு சிறந்த கட்சியை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த வகையில் மக்களின் இப்போதுள்ள தெரிவு அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாத்திரமே. மக்களின் தலைவர் என்று சமூகத்தை ஏமாற்றிக் கொண்டு உலாவரும் 'லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் எந்தவிதத்திலும் மக்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்கவில்லை. இதற்குப் பின்னரும் பெற்றுக் கொடுக்கப் போவதுமில்லை. கடந்த ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்து சேவை செய்து கொண்டிருக்கும் ஒரே ஒரு தலைவர் அமைச்சர் றிசாத் பதியுத்தீனே. 'லங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளர் நாயகம் ஹசனலி முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இடம்பெறும் அநீதிகள் தொடர்பாக பேசியபோது உனக்கு ஏன் தேவை இல்லாத வேலை என்று ஹசனலியை தடுத்தவர் இந்த ரஊப் ஹக்கீம்தான். இப்படியான தலைமைத்துவங்களை நாம் விரட்டியடிக்க வேண்டும்.
முன்னாள் அமைச்சர் அதாஉல்லா முஸ்லிம் சமூகத்தை பிழையான வழியில் வழி நடாத்தி தன்னையும், ஒரு அரசியல் அதிகாரம் உள்ளவராக காட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாரே தவிர முஸ்லிம் சமூகத்தைப் பற்றியோ, அக்கரைப்பற்று மக்களைப்பற்றியோ, அவர்களின் முன்னேற்றம் பற்றியோ அவரது சிந்தனை இல்லை. அவரது சிந்தனை எல்லாம் தன்னை எவ்வாறு ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதனையே நினைத்துக் கொண்டிருக்கிறார். நுரைச்சோலை வீட்டுத்திட்ட விடயத்தில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா வழி தவறியதன் காரணமாக அவரை விட்டு வெளியேறினேன். அதுமட்டுமல்லாது மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து அல்லாஹ்விற்கு அடுத்த மனிதர் மஹிந்ததான் என்று சொன்னார். அந்நேரம் அவரை எதிர்க்க வேண்டியது எமது கடமை, அவரை எதிர்த்தோம். முஸ்லிம்களுக்கு என்று இஹ்லாசான ஒரு சிந்தனை உள்ள தலைமைத்துவம் என்றால் இன்று இலங்கையும், உலக மக்களும் ஏற்றுக் கொண்ட ஒரு தலைவர் றிசாத் பதியுத்தீன் அவர்களே. அவரின் சிந்தனைகள் எல்லாம் மிகத் தெளிவானது. வேண்டுமென்று பிரசாரப்படுத்தப்பட்ட வில்பத்து விவகாரத்தில் அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று மக்கள் எதிர்வரும் காலங்களில் தேசிய காங்கிரசையும், அதன் தலைமையையும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதனை நாங்கள் வெளிப்படையாக சிந்திக்க வேண்டும். தனிப்பட்ட விடயங்களுக்காக சமூகம் அதற்கு சாம்பலாக முடியாது. சாதாரண பிரஜையாக இருந்த அதாஉல்லாவை ஒரு அமைச்சராக்கி அழகு படுத்தியது இந்த அக்கரைப்பற்று மண்ணும் மக்களும். மீண்டும் மக்களை ஏமாற்ற முடியாது.
இலங்கையில் உள்ள மக்களின் அலை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பக்கம் வீசும் போது நாம் ஏன் ஆதரிக்கக் கூடாது என்பதனை நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். எமது சமூகத்தின் தேவைகளும், நோக்கங்களும் நிறைவேற்றப்படவேண்டும். இந்த சமூகத்திற்கு சரியான முறையில் வழிகாட்டப்படவேண்டும். அரசியல் அதிகாரம் இல்லாதவர்களுக்குப் பின்னால் செல்ல முடியாது. அரசியலில் தெளிவு பெறவேண்டும் என்றார்.
இம் மக்கள் ஒன்று கூடலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அக்கரைப்பற்று மத்திய குழுவின் செயலாளர் என்.ரீ.நியாஸ், பொருளாளர் ஏ.எஸ்.ஏ.பாசித், ஆலோசகர் சட்டத்தரணி எஸ்.எஸ். அப்பாசி மற்றும் ஆதரவாளர்கள் பலரும் கலங்து கொண்டனர்.