இக்பால் அலி - சிலோன் முஸ்லிம் மத்திய மாகாண செய்தியாளர்
புனித ஹஜ் யாத்திரைக்காக கடந்த வருடத்தை விட இம்முறை இலங்கையிலிருந்து 2800 பேர் புனித ஹஜ் யாத்திரைக்கா மக்கா செல்வதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது . கடந்த வருடம் 2240 பேருக்கு மட்டும்தான் அனுமதி வழங்கப்பட்டது.
எமது கோரிக்கையை அடுத்து மேலதிகமாக 560 பேர் அளவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர இன்னும் 1000 பேர் அளவில் இலங்கையில் இருந்து செல்வதற்காக சவூதி அரேபியா அரசாங்கத்திடம் அனுமதியையும் கோரியுள்ளோம் என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.
புனித மக்கா ஹஜ் யாத்திரை விடயம் தொடர்பாக விடுத்துள்;ள செய்தியில் முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கயில்
இலங்கைக்கு வழங்கப்படும் கோட்டா ஒப்பந்த அடிப்படையில் 2240 பேருக்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கடந்த வருடம் இந்த ஒப்பந்த அடிப்படையில் 2240 பேருக்கு மட்டுமே இலங்கையிலிருந்து புனித ஹஜ் யாத்திரைக்காக மக்கா சென்றனர். 2015 ஆண்டளவில் எமது கோரிக்கைக்கு இணங்க 2240 பேருடன் சவூதி அரசாங்கம் 600 பேர் மேலதிகமாக செல்வதற்கான அனுமதி வழங்கியிருந்தது.
எமது கோரிக்கைக்கு இணங்க கோட்டாத் தொகையை 2800 பேர் வரை அதிகரித்துள்ளது. நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்த முயற்சிக்கு நன்மை தரும் விடயமாக இருக்கிறது. எனினும் இன்னும் 1000 பேர் வரை அதிகரித்துத் தருமாறு சவூதி அரசாங்கத்தை வேண்டியிருக்கின்றோம் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.