File Image : Mulliwaikkal |
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கொழும்பில் 550 க்கும் மேற்பட்ட தமிழர்களை வெள்ளை வேன்களில் கடத்திக் கொலை செய்ய ஆணையிட்டார் என்பது தனக்குத் தெரியும் எனவும் அந்த கொலைப்பட்டியல் தன்னிடம் இருப்பதாகவும் தேசிய கலந்துரையாடல் சகவாழ்வு மற்றும் அரச கரும் மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் கொழும்பில் தமிழர்கள் கடத்தப்பட்ட போதும் கொலை செய்யப்பட்ட போதும் அதற்கு எதிராக நாம் வீதியில் நின்று போராடினோம். அப்போது எனது இடது கையாக பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜும் வலது கையாக ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவும் என்னுடன் இருந்தார்கள்.
மேற்படி இருவரையும் கொலை செய்துவிட்டார்கள். என்னையும் கொலை செய்ய முயற்சித்தார்கள் நான் தப்பிவிட்டேன். கடந்த காலத்தில் 550க்கு மேற்பட்ட தமிழர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றார்கள். பெருந்தொகையான தமிழ் வர்த்தகர்கள் கப்பம் கேட்டு கஷ்டப்படுத்தப்பட்டுள்ளார்கள். கொடுமைப்படுத்தப்பட்டார்கள். இதனை இல்லையென்று கோத்தபாய ராஜபக்சவினால் கூற முடியாது. காரணம் அன்று பாதுகாப்பு செயலாளராக இருந்த இந்த அராஜகங்களுக்கு ஆணையிட்டார்.
இது தான் கடந்த நாட்களில் நடந்தது. இலக்கத்தகடற்ற வண்டிகளில் வந்து சீருடை அணியாமல் வந்து தமிழர்களின் வீடுகளுக்குச் சென்று கதவுகளை தட்டி நாய்களைப் போல இழுத்துச் சென்றார்கள். அவ்வாறு இழுத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் தான் பல இடங்களில் வைத்து கொலை செய்யப்பட்டிருந்தார்கள் என்றும் அமைச்சர் மனோ தெரிவித்துள்ளார்.