Headlines
Loading...
மதுபான தொழிற்சாலைக்கு எதிராக முஸ்லிம் தலைமைகள் பேசமாட்டார்களா?

மதுபான தொழிற்சாலைக்கு எதிராக முஸ்லிம் தலைமைகள் பேசமாட்டார்களா?



கல்குடா பிரதேசத்தில் மதுபான உற்பத்திச்சாலை ஒன்றை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு, அதன் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருவது தொடர்பில் பலரும் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

தமிழர்களும் முஸ்லிம்களும் செறிந்து வாழும் கல்குடா பிரதேசத்தில் இவ்வாறானதொரு மதுபான உற்பத்திச்சாலை அமைக்கப்படுவதும் பலத்த சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது. இப் பகுதி மக்களை மேலும் மதுவுக்கு அடிமையாக்கி அவர்களது சமூக, பொருளாதார வளர்ச்சியை தடுக்கும் சதித்திட்டமாக இது இருக்குமோ என்றும் அப் பகுதி பிரமுகர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அரசாங்கம் ஒருபுறம் மது ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்ற அதேநேரம் இவ்வாறான மது உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவதும் நகைப்புக்குரியதாகும்.

தேசிய அளவில் மதுபானத்தை நுகர்வதில் மட்டக்களப்பு மாவட்டம் மூன்றாவது இடத்தில் உள்ளதாக கடந்த வருடம் தேசிய மது ஒழிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருந்தார். அவ்வாறான நிலையில் அம் மாவட்டத்தில் மதுபான உற்பத்தி தொழிற்சாலையையே அமைப்பதற்கு அரசாங்கத்தின் உயர்மட்டம் எவ்வாறு அனுமதி வழங்க முடியும்? அதுவும் அதிகூடிய வரிச் சலுகையும் இந்த தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டிருப்பதன் பின்னணி என்ன? இந்த தொழிற்சாலை அமைவது பற்றிய ஜனாதிபதியின் நிலைப்பாடு என்ன? எனும் கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளது.

அதேபோன்றுதான் இந்த தொழிற்சாலை நிறுவப்படுவதை முற்றாக தடை செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். எனினும் அப் பகுதி முஸ்லிம் அரசியல்வாதிகள் இதுவிடயத்தில் மௌனம் காப்பது கவலைக்குரியதாகும்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் எம்.பி.க்கள் இதுபற்றி பகிரங்கமாக பாராளுமன்றத்தில் கூட தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். எனினும் அப் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் முதலமைச்சரும் அமைச்சர்களும் பிரதியமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பில் அதிகம் குரல் கொடுக்க கடமைப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்த மதுபானசாலை நிர்மாணிக்கப்படுவதை உடனடியாக தடை செய்ய வேண்டும்  என அதுரலியே ரத்ன தேரர் நேற்று கோரிக்கைவிடுத்துள்ளார். இதுபற்றியும் முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்.
இஸ்லாம் மதுவை ஹராமாக்கியிருக்கிறது. அந்த வகையில் மதுவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய கடப்பாடு ஒரு முஸ்லிம் மீது சுமத்தப்பட்டுள்ளது. 

எனவேதான் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளும் சிவில் தலைமைகளும் இந்த மதுபான தொழிற்சாலைக்கு எதிராக குரல் கொடுக்க முன்வர வேண்டும். 
இன்றேல் நாளை தேசிய மட்டத்தில் அதிகம் மது விற்பனையாகின்ற முன்னணி மாவட்டம் என்ற 'சாதனை'யை மட்டக்களப்பு படைக்கும். அதற்கு நீங்களும் காரணமாகிவிடுவீர்கள்.