மணிப்பூர் மாநிலத்தில் நடைமுறையில் உள்ள Armed Forces' Special Powers Act or AFSPA என்கிற சிறப்பு ராணுவ பாதுகாப்பு சட்டப்படி, அங்கே யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானலும் வாரண்ட் இல்லாமல் சந்தேகத்தின் பேரில் கைது செய்யலாம். எப்பொழுது வேண்டுமானாலும் எவரது வீடு, அலுவலகத்தில்கூட உரிய வாரண்ட் இல்லாமல் சோதனை இடலாம்.
இப்படிப்பட்ட கொடூரமான சட்டப்பிரிவை நீக்கக்கோரி 16 ஆண்டுகளுக்கு முன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார் இரோம் ஷர்மிளா. உண்ணாவிரதத்தை தடுக்க பல முயற்சிகள் எடுத்த அரசு, பின்னர் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கட்டாயம் உணவளிக்க ஏற்பாடு செய்தது.
அதையும் மறுத்த அவருக்கு மூக்கு வழியாக குழாய் மாட்டி திரவ உணவு அளிக்கப்பட்டது. அப்படியே 16 ஆண்டுகள் போராடிய ஷர்மிளா, கடந்த சில மாதங்களுக்கு முன் போராட்டத்தை கைவிட்டுவிட்டு தேர்தல் பாதையில் இறங்கப்போவதாக அறிவித்தார்.
PRJA என்ற பெயரில் கட்சி தொடங்கி இடது சாரி மற்றும் ஆம் ஆத்மி ஆதரவில் நான்கு இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தினார்.
முதல்வரை எதிர்த்து இரோம் ஷர்மிளா போட்டியிட்டார். நான்கு இடங்களிலும் தோல்வி அடைந்ததுடன், இரோம் ஷர்மிளாவின் சொந்த தொகுதியில் வெறும் 90 வாக்குகள் மட்டுமே பெற்று படு தோல்வி அடைந்தார் இரோம் ஷர்மிளா.
தன் சொந்த மாநில மக்களின் நலனுக்காக 16 ஆண்டுகள் உண்ணாவிரத போராட்டம் நடத்திய மண்ணின் மகளுக்கு மணிப்பூர் மக்கள் கொடுத்த இந்த தோல்வி எதை உணர்த்துகிறது?
என்னைப்பொறுத்த வரை....
இவள் இறந்து போனால் குலதெய்வம் ஆக்குவார்கள், அல்லது பெண் கடவுள் ஆக்குவார்கள் !
-விஷ்வா விஸ்வநாத் (விவி)