உலமாசபை தலைவர் ரிஸ்வி முப்தி |
முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்கள் தேவையில்லை முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் அந்தக் காலத்தில் சரியாகவே எழுதப்பட்டுள்ளது.
அந்தச் சட்ட வரைபு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தில் மாற்றங்கள் தேவையில்லை. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்திலே கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை சிபார்சு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூபின் தலைமையிலான குழு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பத்வா குழுவினைச் சந்தித்து இறுதியாகக் கலந்துரையாடவுள்ளமை தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
குழுவில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவரும் பொதுச் செயலாளரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற குழுவின் அமர்விலும் அவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
'அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தெளிவான நிலைப்பாட்டிலேயே இருக்கிறது. ஷரீஆ சட்டம் மனிதர்களுக்குத் தீங்கிழைக்கக்கூடிய சட்டமல்ல. ஆனால் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்போது சில சிக்கல்கள் ஏற்படலாம். அவ்வாறான சிக்கல்களுக்குத் தீர்வுகளாகவே திருத்தங்கள் அமைய வேண்டும்.
ஷரீஆ சட்டம், முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் என்பனவற்றின் அடிப்படைகளை அநேகர் அறியாதுள்ளனர். மக்களே தெளிவில்லாமல் இருக்கிறார்கள். எனவே இதுபற்றி மக்கள் தெளிவூட்டப்பட வேண்டும்.
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தை அமுல்படுத்தும் காதி நீதிமன்றங்கள் சில சவால்களை எதிர்கொள்கின்றன. இது கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.
சட்டத்தில் திருத்தங்களை சிபார்சு செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழு உலமா சபையின் பத்வா குழுவினைச் சந்தித்து இறுதியாக ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கு தீர்மானித்துள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.
முஸ்லிம் சமூகத்துக்காக எமது முன்னோர்கள் வடிவமைத்துத் தந்துள்ள இச்சட்டத்தையும் காதி நீதிமன்ற முறைமையையும் பாதுகாத்துக் கொள்வது எமது கடமையாகும்' என்றார்.
நன்றி - விடிவெள்ளி