Headlines
Loading...
‘மக்கள் மனங்களிலுள்ள மு.காவையும் ஹக்கீமையும் யாரும் அசைக்க முடியாது’

‘மக்கள் மனங்களிலுள்ள மு.காவையும் ஹக்கீமையும் யாரும் அசைக்க முடியாது’



பைஷல் இஸ்மாயில் 

“அன்று அதாவுல்லா மக்களை ஒன்று சேரச் சொன்னதும் அதிகாரத்துக்கே. இன்று தலைவர்களை ஒன்று சேரச் சொல்வதும் அதிகாரத்துக்கே. அவர் இன்னும் என்ன குத்திக்கரணம் போட்டாலும் அதுவும் அதிகாரத்துக்கே. அன்றி வேறு ஒன்றுக்குமாகவல்ல என்பதை மக்கள் மிகத்தெளிவாகப் புரிந்து வைத்துள்ளனர் என்பதை அதாவுல்லா இன்னும் விளங்கிக்கொள்ளவில்லை” என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் விவகார தொழில் வாய்ப்பு இணைப்பாளருமான ஏ.எல்.தவம் தெரிவித்தார். 

அக்கரைப்பற்றில் நேற்றிரவு (24)  நடந்த  நகர்ப்பிரிவு ஐந்துக்குரிய மக்கள் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.  அவர் மேலும் கருத்துக் கூறுகையில், “இன்று அதிகாரத்தை இழந்தவர்கள் தமக்கான அதிகாரத்தைக் மீண்டும் கையில் எடுப்பதற்கு பல்வேறு வகையில் முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கின்றனர். அவற்றுக்கு வெவ்வேறு பெயர்களையும் வைத்துக்கொண்டுள்ளனர். முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு, கிழக்கின் எழுச்சி, கட்சி தூய்மைப்படுத்தல் என்று பல பெயர்களைச் சூட்டிக்கொண்டுள்ளனர். 

அவற்றைத் தமது அதிகார ஆசையை மூடிக்கொள்ளும் போர்வையாகவும் ஆக்கிக்கொண்டுமுள்ளனர்.   அதில் இன்று அதாவுல்லா, சமூகத்தைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அதிக அக்கறையுடைய புதிய அவதாரமாக தன்னை வடிவமைத்துக் கொள்ள முயற்சிக்கின்றார். அந்த அவதாரத்தின் பின்னணியில் அதிகாரத்துக்கான வேட்கை இருப்பதை மக்கள் நன்கு அறிவர். அவர் போடுகின்ற எல்லா விடுகதைக்கும் பதில் ஒன்றுதான். அதிகாரம் மட்டும்தான். அன்று அவர் மக்களை ஒன்று சேரச் சொன்னதும் அதிகாரத்துக்கே. இன்று தலைவர்களை ஒன்று சேரச் சொல்வதும் அதிகாரத்துக்கே. அவர் இன்னும் என்ன குத்திக்கரணம் போட்டாலும் அதுவும் அதிகாரத்துக்கே. அன்றி வேறு ஒன்றுக்குமாகவல்ல என்பதை மக்கள் மிகத்தெளிவாகப் புரிந்து வைத்துள்ளனர் என்பதை அதாவுல்லா இன்னும் விளங்கிக்கொள்ளவில்லை.

 முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பதவிக்காக மாத்திரம் பயன்படுத்த நினைத்து அதில் தோல்வி கண்டவர்கள் பிந்திய காலங்களில் கட்சியை விட்டு வெளியேறி உடனடியாக அதிகாரங்கள், ஆடம்பர வாழ்வு, வசதிகள் என சில அனுகூலங்களை அடைந்து கொண்டாலும் அவர்களுடைய முடிவுகள் எப்படி அமைகின்றன என்பதை அனுபவரீதியாக நாம் கண்டிருக்கிறோம். அந்த முடிவைத்தான் அதாவுல்லாவும் சந்தித்து நிற்கிறார். இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாமல் இன்று கட்சிக்குள்ளிருக்கும் இன்னும் சிலரும் அதே நிலைப்பாட்டிற்கு வந்துள்ளனர். அவர்களின் பின்னணியில் இருப்பவர்களின் நோக்கத்திற்குத் துணையும் போகின்றனர். அவர்களும் தமது விதியைச் சந்தித்தே ஆகவேண்டும். முஸ்லிம் காங்கிரஸிருந்து யாரும் விலகலாம். அது அவர்களின் அரசியல் தெரிவாக இருக்க முடியும். 

ஆனால், இவ்வாறான விலகல்களால் இந்த இயக்கத்தையும் அதன் வகிபாகத்தையும் அசைத்துப்பார்க்க முடியாது. இந்த இயக்கம் தலைவர்கள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளோரிடம் இல்லை. மாறாக மக்களிடம் உயிரோட்டமாக உள்ளது. 

போராளிகளிடம் உணர்வாக உள்ளது. ஆதலால் இன்று கட்சிக்குள் இருந்து கொண்டு கட்சியையும் தலைவர் றஊப் ஹக்கீமையும் விமர்சித்துக்கொண்டு இக்கட்சியை அழிக்க கங்கணம் கட்டியுள்ளோருக்குத் துணைபோவோரின் நிலைமையும் அவர்களின் எதிர்காலமும் மிக மோசமாக அமையப்போவதை அவர்கள் உணருகின்ற காலம் வெகு தூரத்தில் இல்லை. தற்போது அவர்களுக்கு ஊட்டப்பட்டிருக்கும் ஆசை வார்த்தைகளில் மயங்கிப் போய்க்கிடக்கிறார்கள். நிதானம் பிறக்கின்ற போது நிலவரத்தைப் புரிந்து கொள்ளுவார்கள்” என அவர் மேலும் கூறினார்.