நாச்சியாதீீவு பர்வீன்
நாச்சியாதீவு கிராமமானது முஸ்லிம்கள் தனியாக வாழுகின்ற மிகப்பெரிய கிராமமாகும். இங்கு வாழுகின்ற முஸ்லிம்கள் பூர்வீகமாக இந்தப்பிரதேசத்தில் காலாதிகாலமாக வாழ்ந்து வருகின்றனர். கிராமத்தின் கிழக்குப்பகுதியில் சுமார் 200 வருடங்கள் பழமைவாய்ந்த சியாரம் ஓன்று அமைந்துள்ளது. கடந்த காலங்களில் இந்த சியாரத்தை ஒட்டிய பிரதேசத்தில் “வாழும் தோட்ட தக்கியா” கந்தூரி எனும் பெயரில் கந்தூரி நடைபெற்று வந்தது.
கடந்த 15 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக அந்தக் கந்தூரி நிறுத்தப்பட்டு குறிப்பிட்ட தோட்டமானது நாச்சியாதீவு பிராதன பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினால் பராமரிக்கப்பட்டு வருகிறது. சியாரம் அமைந்துள்ள பிரதேசத்தில் அமைந்துள்ள கட்டிடம் சிதைவடைந்து காணப்படுவதனால் புதிதாக ஒருகட்டிடத்தை அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட போது நீர்ப்பாசனத்துறையின் பிராந்திய பொறியியலாளரினால் அது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று திங்கட்கிழமை (20) கொழும்பிலிருந்து வந்த சில பெளத்த குருமார்கள் முஸ்லிம்கள் வசிக்கின்ற வாழும்தோட்ட தக்கியாப்பகுதியில் வந்து தகாத வார்த்தைகள் பேசி முஸ்லிம்களுக்கு இந்தப்பிரதேசத்தில் எந்த உரிமையும் கிடையாது. இது பெளத்த நாடு பெளத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானதாகும். என்று இனவாதத்தை தூண்டுகின்ற கருத்துக்களை அங்கே பேசியுள்ளார்கள். இந்த எதிர்பாராத நிகழ்வினால் கலவரம் அடைந்த முஸ்லிம்கள் அவசரமாக அண்மையிலுள்ள ஹிதோகம போலிஸுக்கு விடயத்தை தெரியப்படுத்தியுள்ளனர்.
விடயத்தின் தீவிரத்தை உணர்ந்த ஹிதோகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி உடனே ஸ்தலத்திற்கு விரைந்து சம்பந்தப்பட்ட பெளத்த குருமார்களை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவந்தார், அத்தோடு அந்தப்பிரதேசத்திற்கு பொறுப்பான பிராதான பெளத்த குருவான அதுருவெல்லை சாத்தாதிஸ்ஸ ஹிமிக்கும் , நாச்சியாதீவு பிரதான பள்ளிவாசல் தலைவருக்கும் அறிவித்தார்.
விடயங்களை அறிந்த அதுருவெல்லை சாத்தாதிஸ்ஸ ஹிமி பிரச்சினை ஏற்படுத்த முயன்ற அந்த இளம் பெளத்த குருமார்களுக்கு புத்திமதி கூறியதோடு, சகல இனங்களும் ஒற்றுமையாக வாழுகின்ற இந்தப்பிரதேசத்தில் புதிதாக இனவாதத்தை விதைக்க வேண்டாம், முஸ்லிம்கள் எமது சகோதரர்கள் அவர்களை பாதுகாக்கின்ற கேடயமாக நாங்கள் இருப்போம். உங்களது இனவாத செயற்பாடுகளை இந்தப்பிரதேசத்தில் நான் அனுமதிக்க மாட்டேன், எங்கிருந்தோ வந்த நீங்கள் ஒற்றுமையாக வாழுகின்ற இரண்டு சமூகத்திற்குள் பிரச்சினையையும்,பிளவுகளையும் ஏற்படுத்த முயற்சி செய்கிறீர்கள்.எங்கள் பிரதேசத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் இங்கு வந்து புதிதாக எதனையும் எமக்கு படிப்பித்துத்தர தேவையில்லை என்று கடும் தொனியில் கூறினார். பிரச்சினை ஏற்படுத்திய இனவாத இளம் பிக்குகள் வாயடைத்து போனதோடு பள்ளிவாசல் தலைவரிடம் மன்னிப்பு கோரினார்கள்.
இனிமேல் இவ்வாறான இனவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை என்று அவர்கள் உறுதிமொழி வழங்கியதை அடுத்து பிக்குகள் விடுவிக்கப்பட்டனர். பாரிய இனவாத பிரச்சினையாக வெடிக்க இருந்த இந்த சம்பவம் ஹிதோகம பொலிஸ் பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி மற்றும் பிரதான பிக்கு அதுருவெல்லை சாத்தாதிஸ்ஸ ஹிமி ஆகியோரின் நேர்மையான செயற்பாட்டினால் முடிவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது