நாட்டில் சிங்களவர்களின் சனத்தொகை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு சிங்களவர்களை இலக்கு வைத்து சட்டவிரோதமான முறையில் கர்ப்பத்தடைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இரண்டு அரசசார்பற்ற நிறுவனங்களே இதனை முன்னெடுக்கின்றன. அந் நிறுவனங்களை தடை செய்வதுடன் அவற்றின் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும். அவற்றின் சொத்துக்கள் அரச உடமையாக்கப்பட வேண்டும் என பொது பலசேனை அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
நேற்றுக் காலை கிருலப்பனையிலுள்ள பௌத்த மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது, அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று மற்றொரு இலங்கை நிறுவனத்துடன் இணைந்து இந்த சட்டவிரோத கர்ப்பத்தடை சிகிச்சைகளை செய்கிறது. கர்ப்பத்தடை உபகரணங்களையும் வழங்கி வருகிறது. சிங்கள கர்ப்பிணித் தாய்மார் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு பிரசவத்தின் பின் தாய்மாரின் அனுமதி பெற்றுக்கொள்ளப்படாமலேயே கர்ப்பத்தடை செய்யப்படுகிறது. எல்.ஆர்.ரி. கர்ப்பத்தடை செய்யப்படுகிறது.
இது தம்புள்ளை வைத்தியசாலையில் மாத்திரமல்ல குருநாகல், கண்டி, பதுளை ஆகிய வைத்தியசாலைகளிலும் நடைபெற்றுள்ளன.
குறிப்பிட்ட இரு அரச சார்பற்ற நிறுவனங்கள் பின்தங்கிய சிங்கள கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை இலக்கு வைத்து இந்தச் சட்டவிரோத கர்ப்பத் தடைகளைச் செய்து வருகின்றன. இதன் மூலம் மில்லியன் கணக்கான ரூபாய்களை வருமானமாக பெற்றுள்ளனர்.
இதில் ஒரு நிறுவனத்தின் சொத்து 700 மில்லியன் ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. தாய்மார் மற்றும் சிறுகுழந்தைகளுக்கு உதவும் தோரணையிலேயே இந்தக் கர்ப்பத்தடை செய்யப்படுகிறது.
ஒரு நிறுவனம் 11 கர்ப்பத்தடை நிலையங்களை நடத்தி வருகின்றது. இது போன்றே மற்ற நிறுவனம் 5 கர்ப்பத்தடை நிலையங்களை நடாத்தி வருகிறது.
சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள 1988 ஆம் ஆண்டின் சுற்றுநிருபத்தின்படி எல். ஆர். ரி. எனப்படும் கர்ப்பத்தடை செய்வதற்கு பெண் 26 வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும். இரண்டு பிள்ளைகளுக்கு தாயாகவும் 2 ஆவது பிள்ளை 2 வயது பூர்த்தியானதாகவும் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கிறது.
இந்தச் சுற்றுநிருபம் திருத்தப்பட வேண்டும். வயதெல்லை 26 வயதில் இருந்து 40ஆக திருத்தப்படுவதுடன் பிள்ளைகளின் எண்ணிக்கை 2 இல் இருந்து 3 ஆக அதிகரிக்கப்பட வேண்டும். இவ்வாறு ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும்.
கடந்த 10 வருட காலத்தினுள் எமது நாட்டில் இரகசியமாக 8 இலட்சத்து 77 ஆயிரம் கர்ப்பத்தடைகள் சட்டவிரோதமாக செய்யப்பட்டுள்ளன எனப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இங்கு நடைபெறும் இவ்வாறான சட்ட விரோத கர்ப்பத்தடைகள் பற்றி எமது அமைப்பு பலவருடங்களுக்கு முன்பிருந்தே முறைப்பாடுகளை செய்து வந்துள்ளது. கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் ஆகியோரிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.
ஆனால் எதுவித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. முன்னைய ஆட்சிக் காலத்தில் சுகாதார அமைச்சராக இருந்த மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து சட்டவிரோத கர்ப்பத்தடை பற்றி பேச்சு வார்த்தைகள் நடத்தினோம். அறிக்கைகள் சமர்ப்பித்தோம். ஆனால் எதுவும் நடைபெறவில்லை.
சிங்கள சமூகத்தை இலக்குவைத்தே கர்ப்பத் தடைகள் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அரசாங்கம் கர்ப்பத்தடைக்கென விரைவில் விசேட சட்டமொன்றினை இயற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.