Top News

கஜானாவை நிரப்புகின்ற அமைப்புக்களும் வேடிக்கை பார்க்கின்ற தலைமைகளும்

நஸார் இஜாஸ்

திருகோணமலை கரிமலையூற்று பகுதியில் 4.65 ஹெக்டெயர் பரப்பளவு காணி பாதுகாப்பு அமைச்சின் தேவை கருதி சுவீகரிப்பு செய்வது தொடர்பான அறிவிப்பு திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளரினால் காணி சுவீகரிப்பு சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பிரதேச செயலாளரின் இது தொடர்பான அறிவித்தல் பள்ளிவாசல் அமைந்துள்ள காணியின் நுழைவாயிலில் ஒட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பிரதேச செயலாளரின் அறிவித்தலின்படி காணி சுவீகரிப்பு தொடர்பில் ஆட்சேபணை ஏதேனுமிருந்தால் அதுபற்றி தெறிவிக்க எதிர்வரும் மார்ச் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சில விடயங்கள் எனக்கு ஞாபகத்துக்கு வருகின்றன. அதாவது கடந்த 2014ஆம் ஆண்டு கருமலையூற்று பிரதேசத்தில் 400 வருடம் பழைமையான பள்ளி உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து பலத்த போராட்டங்களுக்கும் வாதிப்பிரதிவாதங்களுக்கும் மத்தியில் பல அரசியல்வாதிகளின், குறிப்பிட்டு சொல்லக் கூடிய சிலரின் நடவடிக்கையைத் தொடர்ந்து குறித்த கருமலையூற்று காணி மீளவும் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அது போக இன்னுமொரு விடயமும் இருக்கிறது. அதாவது குறித்த கருமலையூற்று பள்ளிவாசலானது துப்புரவு எனும் பெயரில் தரைமட்டமாக்கப் பட்ட போது மக்கள் விடாப்பிடியாக போராட்டங்களை நடாத்தி வந்த வேளையில் யாரையும் பார்வையிட அனுமதி வழங்காத நிலையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீதுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டு இராணுவத்தினரால் குறித்த பிரதேசம் காண்பிக்கப்பட்டு, இரு தரப்புக்குமிடையில் பேச்சுவார்த்தைகளும் நடந்தது. உள்ளே என்ன நடந்தது கொண்டிருக்கிறதோ என மீடியாக்களும், பொதுமக்களும் வெளியில் சிந்தித்துக் கொண்டிருக்கையில் வெளியில் வந்த கி.மா சபை முன்னாள் முதலமைச்சர் நஜீப், BBC க்கு நேர்காணலொன்றை வழங்கியிருந்தார். அப்போது அவர் BBC செய்திச் சேவைக்கு வழங்கிய பதிலின் சாராம்சம் இதுதான். "இப்பள்ளி இராணுவத்தினரால் உடைக்கப்பட வில்லை. அது மழைக்குத்தான் விழுந்திருக்க வேண்டும்" ஆனால் பள்ளிவாசல் உடைக்கபட்ட தருணத்தில் வெறுமனே தூறல் மழையே பெய்து கொண்டிருந்தது. தூறல் மழையில் 400 வருடம் பழமையான கட்டிடம் விழுந்ததாக சொல்லி ஒட்டு மொத்த முஸ்லிம் சமுகத்தையும் அங்கேயே தாரை வார்த்துக் கொடுத்து விட்டு தனது வாதத்தை படையினருக்கு சாதகமாக வாதித்து வெளியேறியிருந்தார் நஜீப் ஏ. மஜீத். இப்போது குறித்த காணி மீளவும் பறிபோயிருப்பதை முன்னாள் முதலமைச்சர் நஜீபின் குறித்த நேர்காணலின் விளைவாகவும் நாம் நோக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் அவருக்கு மட்டுமே வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தை உண்மையாகவும் புத்திசாதுர்யமாகவும் அவர் பயன்படுத்தியிருக்க வேண்டும். தூறல் மழையில் எங்கேயும் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக சரித்திரம் எதுவுமில்லை. அப்படி விழுந்தது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நஜீப் அவர்களின் இந்நேர்காணல் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும். இது எல்லாம் அப்படியே இருக்க, இனியாவது சமுக நலனுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைமைகள் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அத்தோடு வெட்டியாக சமுக நலன் என்ற பெயரில் சில குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பொது அமைப்புக்களும் வெறுமனே கஜானாவை நிரப்பிக் கொண்டு பணங்களோடு புரள முற்படுவதை விட்டு விட்டு ஃபோட்டோக்களுக்கு மாத்திரம் புன்னகைத்துக் கொண்டிருப்பதோடு நின்று விடாமல் சமுகத்தின் மிக முக்கியமான நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். ஏன் இதை கூறுகிறேன் என்றால் எவ்வித அறிவுமற்ற அறிவிளிகளை சமுக நலன் என்ற பெயரில் அமைப்புக்குள் முக்கியமான பதவிகளில் இருத்திக் கொண்டு மாலைகளோடு அங்குமிங்கு அழைத்துக் கொண்டு செல்வதைப் பார்க்கின்ற போது எம்மால் சகிக்க முடியவில்லை. சமுக நலன் என்பது பணத்தினால் நிர்ணயிக்கப்படுவதில்லை. அது சிறந்த தலைமைத்துவங்களாலும் நேர்த்தியான வழி காட்டல்களாலும் நிர்ணயம் செய்யப்படுவது. எனவே இந்த விடயத்திலிருந்தாவது அறிவு பூர்வமாக செயற்படுவோம். -நஸார் இஜாஸ்
Previous Post Next Post