முஸ்லிம்களின் ஆதரவு இன்றி எக்காரணம் கொண்டும் எதிர்வரும் தேர்தல்களை வெற்றிகொள்ள முடியாது இதனை நாம் உணர்ந்திருக்கின்றோம்.
பொது ஜன பெரமுன கட்சி முஸ்லிம்களை அரவணைத்துச் செல்லும். முஸ்லிம்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றைத் தீர்ப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்காகவே முஸ்லிம் முற்போக்கு முன்னணி அமைக்கப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் கடந்த வியாழன் மாலை நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் ஏனைய மாவட்டங்களிலிருந்தும் மஹிந்த தரப்பு ஆதரவாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது. எதிர்காலத்தில் நாம் அமைக்கவிருக்கும் ஆட்சியில் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் முக்கியமாகக் கவனத்திற் கொள்ளப்படும். முஸ்லிம்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்கு இப்போதே திட்டங்கள் வகுக்கப்பட்டு விட்டன. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்பு மாகாண சபை தேர்தல் நடாத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மாகாண சபைத் தேர்தல் குறிப்பிட்ட காலத்தில் காலம் தாழ்த்தப்படாது நடத்தப்பட வேண்டுமென அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றோம்.
புதிய உள்ளூராட்சித் தேர்தல் முறையை இன்று சிறுபான்மைக் கட்சிகள், சிறுகட்சிகள் எதிர்க்கின்றன. என்றாலும் அமைச்சர் அதாவுல்லாஹ்வே இந்தச் சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்றுக் கொண்டார்.
அப்போது சிறுபான்மைக் கட்சிகள் இந்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு நல்கின. ஆனால் இப்போது அதனை எதிர்க்கின்றன.
அரசியலில் பெண் பிரதிநிதித்துவத்தை அன்று நாம் சட்டத்திற்குள் உள்வாங்கிக் கொள்ளவில்லை ஏனென்றால் முஸ்லிம் பெண்கள் அரசியலில் ஈடுப்படுவதை விரும்ப மாட்டார்கள் என்ற காரணத்தினாலேயே அன்று சட்டத்திற்குள் உள்வாங்கப்படவில்லை
முஸ்லிம்கள் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் கீழ் அணிதிரள வேண்டும்.
இந்த அமைப்பின் ஆலோசனைப்படியே முஸ்லிம்கள் தொடர்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றார்.
(நன்றி - விடிவெள்ளி)