ஜெனீவா சென்றுள்ள வடக்கு முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும், புலம்பெயர் தமிழ் அமைப்புகளான கனேடிய தமிழ்க் காங்கிரஸ், பிரித்தானியா தமிழ் பேரவை, அமெரிக்க தமிழர் அரசியல் செயற்பாட்டுக் கழகம் ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்றைய தினம் (22-03-2017) அன்று ஜெனீவா ஐ.நா மன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற விஷேட சந்திப்பில் வடக்கில் தமிழ் முஸ்லிம் உறவினை சீர் செய்வதில் கூடுதல் கரிசனை செலுத்தப்படவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு மணிநேரம் நீடித்த இச்சந்திப்பின்போது வடக்கில் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் சமகால சவால்கள் குறித்தும், 1990களிலே இடம்பெற்ற பலவந்த வெளியேற்றம் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் குறித்தும், 2002 சமாதான உடன்படிக்கை காலம் முதல் 2009 யுத்த நிறைவுக்குப் பின்னரான காலம் வரையிலும், தற்போது 2017 வரை முஸ்லிம் மக்கள் எவ்வாறான சூழ்நிலைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள் என்பதையும் முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மிகவும் தெளிவான முறையில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தார்கள்.
இச்சந்திப்பில் பங்கேற்ற அமெரிக்க தமிழ் அரசியல் பேரவையின் தலைவர் லாஹீசன் சந்திப்பின் தொடக்கத்திலே 1990 களிலே வடக்கு முஸ்லிம் மக்களுக்கு இடம்பெற்ற துன்பகரமான நிலைமைக்காக ஒரு தமிழனாக உங்களிடத்திலே நான் முதலில் மன்னிப்புக்கோருகின்றேன், என்னுடைய வருத்தங்களையும் உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன் என்று தெரிவித்தார்.
அத்தோடு தமிழ் முஸ்லிம் உறவை வலுப்படுத்துவதற்கு எத்தகைய முற்போக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்று நாம் உடனடியாக சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம் என்றும் தெரிவித்தார். இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் எவ்வாறாக அமையவேண்டும் என்றும் இங்கு விரிவாகப் பேசப்பட்டது.
மிகவும் சினேகபூர்வமாக அமைந்திருந்த இந்த சந்திப்பின் முடிவிலே தொடர் நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டது. இரண்டு சமூகப்பிரதிநிதிகளுக்குமிடையிலே மிகவும் உணர்வுபூர்வமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.