Top News

தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்களுக்குப் பதிலாக! மறைக்கப்படாத உண்மைகள்

எம்.வை.அமீர் 

அண்மையில் “தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்” எனும் தலைப்பில் தாருஸ்ஸலாம் மீட்பு முன்னணி என்று உரிமைகோரிய அமைப்பின் பெயரில் புத்தகம் ஒன்று வெளிவந்து பல்வேறு வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறான சூழலில் குறித்த புத்தகத்துக்கு பதிலாய் “தாருஸ்ஸலாம் மறைக்கப்படாத உண்மைகள்” எனும் தலைப்பில் தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் என்ற புத்தகத்துக்கு பதிலளிக்கும் விதத்தில், புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் முன்னாள் கல்முனை மாநகரசபையின் பிரதி முதல்வருமான ஏ.எல்.அப்துல் மஜீத்தின் முன்னிலையில், கிழக்குமாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிப் பொருளாளருமான கே.எம்.அப்துல் றஸாக்கின் (ஜவாத்) தலைமையில், கிழக்குமாகாணசபை உறுப்பினர் கே.எம்.அப்துல் றஸாக்கின் கருத்திலும், எழுத்தாளர் நவாஸ் சௌபியின் எழுத்தாக்கத்திலும் 2017-03-12ஆம் திகதி சாய்ந்தமருது லீமெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் வைத்து “தாருஸ்ஸலாம் மறைக்கப்படாத உண்மைகள்” என்ற புத்தகம் வெளியிட்டு வைக்கப்பட்டது.

நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காஸீம் ஆகியோர் கலந்துகொண்டதுடன் கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் கௌரவ அதிதியாகவும் கிழக்குமாகாணசபையின் உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர், ஏ.எல்.தவம் மற்றும் ஐ.எல்.எம்.மாஹீர் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் மன்சூர் ஏ. காதீர் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.

தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் என்ற புத்தகம் “ஆழம் அறியாமலும் நீந்தத்தெரியாமலும்,கூச்சலிட்டு நீச்சலில் வெல்ல நினைத்த மன்சூர்,தவம்,பழில்,லாஹிர் ஆகிய நால்வருக்கும் இவர்களை வழிநடத்தித் துணை நிற்போருக்கும் சமர்ப்பணம்” செய்யப்பட்டிருந்தது.

தாருஸ்ஸலாம் மறைக்கப்படாத உண்மைகள் என்ற புத்தகம் “தன் வறுமையை அழிக்க இயக்கமாகி இயக்கத்தை அழிக்க உலவாளியாகி உள்ளவர்களை அழிக்க மு.கா.போராளியாகி மு.கா. வை அழிக்க கோடாரியாகி வளமோடு வாழும் சுயபேரத்தில் வலிமை கண்ட வஷீருக்கு....” என சமர்ப்பணம் செய்யப்பட்டிருந்தது.

முழுக்க முழுக்க தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் என்ற புத்தகத்தை வரிக்குவரி மறுக்கும் விதத்திலேயே புத்தகத்தின் வரிகளும் அதிதிகளின் உரைகளும் இருந்தன.
நேரடியாக உரிமைகோரப்படாத கோழைகளின் கருத்துக்களுக்கு பதிலளிக்கவேண்டிய வேண்டிய தேவை அவசியமில்லாத போதிலும் மௌனமாய் இருந்துவிட்டால் பொய்யும் உண்மையாகி அது வரலாறாகவும் ஆகிவிடும் என்பதற்காகவும் மறைந்திருந்து குழிபறிப்போருக்காகவும் எழுதியே ஆகவேண்டுமென்று எழுதியதாக கே.எம்.அப்துல் றஸாக் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் கரையோர மாவட்டம் ஒன்றை பெறுவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடகிழக்கு இணைப்புக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக வெளிவந்துள்ள கருத்துக்களை முற்றாக மறுத்ததுடன் கரையோர மாவட்டத்தையும் வடகிழக்கு இணைப்பையும் யாரும் முடிச்சுப் போடவேண்டியதில்லை என்றும் தமிழ் பேசும் மக்களின் நன்மைகருதி கோரப்படும் கரையோர மாவட்டத்துக்கு தமிழ் தரப்பினர் ஒத்துழைத்தால் கல்முனை பிரதேச செயலகத்தை நிரந்தர செயலகமாக பிரகடனப்படுத்த தாங்கள் ஒத்துழைப்பதாக கூறியதாகவும் தெரிவித்தார்.

ஹஸன் அலி, பஷீர் சேகுதாவூத் போன்றவர்கள் பதவியை முன்னிலைப்படுத்தியே கட்சியைவிட்டு வெளியேறி கட்சிய விமர்சிப்பதாகவும் முஸ்லிம்களிம் தேவைகள் தொடர்பான கொள்கையை முற்படுத்தவில்லை என்றும் கட்சிக்குள் இருந்தகாலங்களில் ஏன் இவர்களால் தற்போது கூறும் காரணங்கள் முன்வைக்கப்படவில்லை என்பது ஆச்சரியமாக இருப்பதாகவும் இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

தாருஸ்ஸலாம் மறைக்கப்படாத உண்மைகள் என்ற புத்தகம் பாகம் 1 மட்டுமே தற்போது வெளியிடப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் இன்னும் பல தகவல்களுடன் புத்தகங்கள் வெளிவரும் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.




Previous Post Next Post