ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தவறாக வழிநடத்தப்பட்டே வில்பத்து சரணாலயத்துக்கு வடக்கே அமைந்துள்ள 4 பாதுகாக்கப்பட்ட வனங்கள் “மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனம்” என அரசாங்க வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டு ள்ளது. இதில் வில்பத்து வன பிரதேசத்தை சேர்ந்த 3000 ஏக்கர் நிலம் இப்பிரகடனத்தில் உட்படுத்தப்படவில்லை. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என ஜாதிக சங்க சம்மேளனத்தின் செயலாளர் ஆனந்த சாகர தேரர் தெரிவித்தார்.
வில்பத்து சரணாலயத்துக்கு வடக்கே அமைந்துள்ள 4 பாதுகாக்கப்பட்ட வனங்களை பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே, அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில் “ஜனாதிபதியை யாரோ தவறாக வழிநடத்தி வில்பத்து பிரச்சினையை மழுங்கடிப்பதற்காகவே இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஏனென்றால் வில்பத்து பிரதேசத்தின் சுமார் 3000 ஏக்கர் நிலம் பிரகடனத்தில் உள்வாங்கப்படவில்லை.
எனவே அப் பிரதேசத்தையும் உள்ளடக்கியே பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.
இந்த வர்த்தமானி பிரகடனம் மூலம் பாரிய பொய்யே இடம்பெற்றுள்ளது. வில்பத்து வன பிரதேசத்தின் பாதுகாப்புக்காக எதுவும் இடம் பெறவில்லை.
தொடர்ந்தும் வில்பத்து வனபிரதேசம் ஆக்கிரமிக்கப்படுவதை இந்த பிரகடனம் மூலம் தடுக்க முடியாது” என்றார்.
ஜாதிக சங்க சம்மேளனம் இது தொடர்பில் நாட்டு மக்களை தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.