பைறுாஸ்
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக மேலும் இருவர் நேற்று உயிரிழந்துள்ளனர். இந்த இரு மரணங்களும் நேற்று ஞாயிறுக்கிழமை அதிகாலையில் நிகழ்ந்துள்ளன.
இதற்கமைய கிண்ணியாவில் இது வரை டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பிரதேச மக்கள் அச்சத்துடனும் பீதியுடனும் காணப்படுகின்றனர். கடந்த இரு வார காலத்திற்குள் 3 மாணவர்கள், 3 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளர். 1200 பேர் வரை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்காக மத்திய மற்றும் மாகாண சுகாதார அமைச்சுகள் பல்வேறு செயற் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அத்துடன் தொண்டு நிறுவனங்களும் களத்திலிறங்கியுள்ளன. பொது மக்களும் டெங்கு நுளம்புகளைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்கி செயற்படுகின்றனர்.
அந்த வகையில் குறித்த பகுதியில் டெங்கு அதிகம் பரவுவதற்கான காரணம் கண்டறியப்பட்டு அதனை மேலும் பரவாது தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
அது மாத்திரமன்றி டெங்கு நோய் தொடர்பான தொடர் விழிப்புணர்வுகள் அப் பகுதியில் மேற்கொள்ளப்படுவதுடன் பிரதேச மக்களை அறிவூட்டுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
தற்போது அதிக மரணங்கள் நிகழ்வதாலும் ஆயிரக் கணக்கானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாலும் டெங்கு தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பது உண்மையே. இருப்பினும் போகப் போக பிரதேச மக்கள் கூட அதனை மறந்து மீண்டும் நுளம்புகள் பரவுவதற்கான வாயில்களை அவர்களே திறந்து கொடுப்பர்.
அந்த வகையில் தத்தமது வீடுகள், கடைகள், வெற்றுக் காணிகளை தொடராக சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட வேண்டும். இதன்பொருட்டு பாடசாலைகள், பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்கள் மூலமாக மக்கள் தொடராக அறிவுறுத்தப்பட வேண்டும்.
தற்சமயம் பொது நிறுவனங்களும் பொது மக்களும் இதுவிடயத்தில் காட்டும் அக்கறையை தொடராகக் காட்டுவதுடன் எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்களிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளவும் முன்வர வேண்டியது அவசியமாகும்.
கிண்ணியா உட்பட டெங்குவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமைகள் சீராக நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக.