Top News

ஹெடோயா திட்டத்தை துரிதப்படுத்த முடிவு



நாச்சியாதீவு பர்வீன்


ஹெட ஓயா திட்டத்தை துரிதப்படுத்தி அதன் மூலம் பயனடையவுள்ள பயனாளர்களை திருப்திப்படுத்த வேண்டும். இத்திட்டத்திற்கு தடையாக இருக்கின்ற காரணிகள் எவையென அடையாளம் கண்டு அவற்றை விரைவில் தீர்க்கவேண்டும் என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும்  நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித முனி சொய்சா ஆகியோருக்கிடையிலான சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டது .

நீர்ப்பாசன அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கும் நீர் வழங்கல் அமைச்சின் உயர் அதிகாரிகளுக்குமிடையிலான உத்தியோக பூர்வமான சந்திப்பு பாராளுமன்ற கட்டிடத்தொகுதியுள்ள அமைச்சர் விஜய விஜிதமுனி சொய்சாவின் பிரத்தியேக அறையில்  அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தலைமையில்  அண்மையில்  நடைபெற்றது. இதன் போதே இத்தீர்மானம் அமைச்சர்களினால் முன்மொழியப்பட்டது.

நீர்பாசனத்துறைக்கும், நீர்வழங்கல் துறைக்குமிடையிலான அபிவிருத்தி தொடர்பிலான இடையூறுகளை ஆராய்ந்து தீர்வு காணும் முகமாக இரு அமைச்சினதும் உயர்மட்ட அதிகாரிகளுக்கிடையிலான சந்திப்பாக இது அமைந்தது. நாடாளாவிய ரீதியில் நீர் வழங்கல் தொடர்பாக நீர்ப்பாசன அமைச்சினால் ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகளை கண்டறிந்து அவற்றை சாதகமான முறையில் தீர்த்துக்கொள்ளும் பொருட்டே இச்சந்திப்பு இரு அமைச்சினதும் உயர் அதிகாரிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் வாழுகின்ற பொதுமக்களுக்கு குடிநீரினை பெற்றுக்கொடுப்பதில் ஏற்பட்டுள்ள சிரமம் தொடர்பில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகளினால் முன்வைக்கப்பட்டது. இந்தப்பிரதேசத்து மக்கள் நீர்தாங்கிகளின் மூலமே குடிநீரை பெற்றுவருகின்றனர். இவர்களுக்கான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்காக முதற்கட்டமாக முசலிப்பிரதேசத்தில் அமைந்துள்ள வியாடிக்குளத்திலிருந்து நீரைப்பெற்று சுத்திகரித்து வழங்கமுடியும் இது தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களத்தின் அனுமதி கிடைக்காமையினால் அந்த நீர் வழங்கல் திட்டம் தாமதமைடைவதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. 

அவ்வாறே இரண்டாம் கட்டமாக மன்னார் மாவட்டத்திலுள்ள நானாட்டான்,மடு, மன்னார் நகரம் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு கல்லாறு அல்லது மல்வத்து ஓயாவிலிருந்து மல்வத்து ஓயாவிலிருந்து நீரை பெற்றுக்கொள்ள அனுமதிவழங்குமாறு அமைச்சர் விஜித விஜயமுனி சொய்சாவிடம் நீர் வழங்கல் அதிகார சபையின் அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். மன்னார் மாவட்டத்திற்கு குடிநீர் வழங்குவதிலுள்ள எல்லாத்தடைகளையும் நீக்கி அப்பிரதேச மக்களுக்கு குடிநீரை பெற்றுக்கொள்வதில் நீர்வழங்கல் சபை அதிகாரிகளுக்கு தேவையான ஒத்துழைப்பினை வழங்குமாறு நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் அமைச்சர் விஜயமுனி சொய்சா அதிகாரிகளை பணித்தார்.

வவுனியா மாவட்டத்தில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளர்கள் இருக்கிறார்கள். மாதாந்தம் இந்த நோயினால் பலர் இறந்து போகின்ற நிலை உள்ளது. சுத்திகரிக்கப்படாத நீரினை இவர்கள் அருந்துவதே இதற்கான பிரதான காரணமாகும். இந்த மாவட்டத்தில் இதுவரை முற்றாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படவில்லை. எனவே சிறுநீரக மற்றும் தூய்மையற்ற  நீரினால் ஏற்படுகின்ற இன்னும் பல நோய்களை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதற்கும் தூயகுடிநீரை வழங்க வேண்டும் இதற்காக வவுனியாவில் அமைந்திருக்கும் 27,000 ஏக்கர் அடி கொள்ளளவு உள்ள மிகப்பெரிய நீர்த்தேக்கத்திலிருந்து நீரைப்பெற்று சுத்திகரித்து வவுனியா தெற்கு மற்றும் வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மக்களுக்கு குடிநீரை பெற்றுக்கொள்ள நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு அனுமதியை வழங்குமாறு வடமாகாண தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிரதி பொதுமுகாமையாளர் பொறியியலாளர் எம்.எம்.உமர்லெப்பை  நீர்ப்பாசன அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார். 

ஹெட ஓயா  திட்டம் தொடர்பில் நீள்வழங்க வடிகாலமைப்பு சபையினரினால் கருத்துக்கள் முவைக்கப்பட்டன.  ஹெடோயா திட்டத்தை பூர்த்தி செய்வதன் மூலம் அம்பாறை மாவட்டத்திலுள்ள 175,000 ஆயிரம் பயனாளர்களுக்கு தூய குடிநீரினை வழங்க முடியும் எனவும், 12,000 ஏக்கர் விவசாய நிலங்களை இதன் மூலம் பராமரிக்க முடியும் எனவும் இதன்மூலம் அம்பாறைமாவட்டத்தின் பாரிய பிரச்சினையான குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும் என்றும் அதற்க்கு தடையாக இருக்கின்ற அனைத்து விடயங்கள் தொடர்பில்  அவற்றை தீர்ப்பதில் ஒத்துழைப்பினை வழங்குமாறு நீர்வழங்கல் வடிகாலமைப்பு  சபையின் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

 ஹெட ஓயா திட்டத்தை துரிதப்படுத்தி அதன் மூலம் பயனடையவுள்ள பயனாளர்களை திருப்திப்படுத்த வேண்டும். இத்திட்டத்திற்கு தடையாக இருக்கின்ற காரணிகள் எவையென அடையாளம் கண்டு அவற்றை விரைவில்  தீர்ப்பதற்கு தனது அமைச்சின் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக அமைச்சர் விஜயமுனி சொய்சா உறுதியளித்தார். 

இந்த சிநேகபூர்வ சந்திப்பில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் பொறியியலாளர் கே.ஏ.அன்சார், வடமாகாண தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிரதி பொதுமுகாமையாளர் பொறியியலாளர் எம்.எம்.உமர்லெப்பை, கிழக்கு மாகாணத்திற்கான  தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிரதி பொதுமுகாமையாளர் பொறியியலாளர் ரஷீத், நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் சுனில் பெரேரா, பொறியியலாளர் காதர், பொறியியலாளர் அலியார் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பாராளுமன்ற செயலாளர் ஏ.எம்.ஜாவ்பர் மற்றும் இரு அமைச்சுக்களினதும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 
Previous Post Next Post