பரீட்சைத் திணைக்களத்தில் உயர் பதவிகளில் சுமார் 50 பேர் கடமையாற்றுகிறார்கள். இவர்கள் ஆணையாளர் நாயகம், ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்களாவர். இவர்களில் 6 பேர் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள்.
முஸ்லிம்களில் நான் மாத்திரமே உயர் பதவி வகிக்கிறேன். எனக்கு பிறகு எவரும் இல்லை. எனவே முஸ்லிம் அமைச்சர்கள் கல்வி அமைச்சருடன் கலந்துரையாடி பரீட்சைத் திணைக்களத்தின் உயர் பதவிகளில் முஸ்லிம்களை உள்வாங்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் ஏ.எஸ். முஹம்மட் தெரிவித்தார்.
கொழும்பு மருதானை அஸ்ஸபாப் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற முஸ்லிம் கல்வி மாநாட்டின் கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில், பரீட்சைத் திணைக்களத்தில் நாம் இருவர் உயர் பதவிகளில் இருந்தோம். ஒருவர் ஓய்வு பெற்று விட்டார். நான் கடந்த மே மாதம் ஓய்வு பெற்றேன். என்றாலும் எனது பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளது. நான் ஓய்வு பெற்ற பின்பு பரீட்சை திணைக்களத்தில் உயர் பதவியில் எவரும் இல்லை.
பரீட்சைத் திணைக்களம் ஒரு முக்கிய இடமாகும். இங்கு உயர் பதவிகளில் நாம் இருந்தாலே எமது உரிமைகளுக்குக் குரல்கொடுக்கலாம்.
கொழும்பு மாவட்டத்தில் முஸ்லிம் மாணவர்களின் கல்வி நிலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருகின்றது. 2014 ஆம் ஆண்டு கொழும்பு மாவட்டத்தில் க.பொ.த (சா/த) பரீட்சையில்10 முஸ்லிம் மாணவர்கள் 9 ஏ சித்திகள் பெற்றார்கள். இந்நிலைமை 2015 இல் 7 ஆகக் குறைந்தது.
மாணவர்களின் கல்வி நிலைமையை மேம்படுத்த திட்டமிட்டு செயற்பட வேண்டும். பாடசாலைகளில் அதிபர், ஆசிரியர் பற்றாக்குறை இருக்கலாம். மேலும் பெற்றோர்கள் தமது கல்வி விடயத்தில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. மாணவர்களும் படிப்பதை விட உழைப்பதையே விரும்புகின்றார்கள்.
வியாபாரம் செய்யும் பெற்றோர்கள், தமது பிள்ளையையும் வியாபாரம் செய்ய வேண்டுமென எதிர்பார்ப்பதில்லை. பெற்றோர்களை ஆசிரியர்களும் புத்திஜீவிகளும் விழிப்புணர்வூட்ட வேண்டும்.
கடந்த 5 வருடத்தில் கொழும்பு மாவட்டத்திலிருந்து வைத்தியத்துறைக்கு எந்தவொரு முஸ்லிம் மாணவனும் தெரிவு செய்யப்படாமை கவலைக்குரியதாகும்.
கடந்த மாதம் நடைபெற்ற SLES பரீட்சையில் சித்தியடைந்த 5 முஸ்லிம்கள் நியமனம் பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு பரீட்சை திணைக்களத்தில் நியமனம் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
பரீட்சை திணைக்களத்தில் கடமையாற்றும் முஸ்லிம் அதிகாரிகள் நிர்வாக தரத்தில் நியமனம் பெற்றுக்கொள்ள பரீட்சைகள் எழுதி சித்தியடைய வேண்டும் என்றார்.
கலந்துரையாடலில் ஹமீதியா குரூப்பின் தலைவர் பௌசுல்ஹமீட், அகில இலங்கை முஸ்லிம் வாலிப சம்மேளனத்தின் தலைவர் பி.எம்.பாரூக், ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம்.அமீன், எழுத்தாளர் எஸ்.ஐ.நாகூர்கனி, உலமாசபையின் பிரதிநிதி நமாஸ், எஸ்.எல்.மன்சூர், அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் உதவிச்செயலாளர் எம்.எம்.எம்.ரில்வான், ஸம் நிதியம், சைலான் பவுன்டேசன் பொறியியலாளர் அகா பாரி, இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் செயலாளர் ரஷீட் எம்.இம்தியாஸ், தலைவர் பேராசிரியர் ஹுசைன் இஸ்மாயில் ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.
Courtesy - Vidivelli