Headlines
Loading...
முதுகில் குத்தும் நல்லாட்சியில் முஸ்லிம் தலைவர்கள் நங்கூரமிட்டு கிடக்கிறார்கள்!

முதுகில் குத்தும் நல்லாட்சியில் முஸ்லிம் தலைவர்கள் நங்கூரமிட்டு கிடக்கிறார்கள்!



முஸ்லிம் தலைவர்கள்: யானைக்கு வாலாக இருக்காமல் எறும்புக்கு தலையாக இருந்து சமூகத்தை காப்பாற்ற முன்வர வேண்டும்.

கடந்த ஆட்சியில் பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவை விரல் நீட்டி குற்றம் சாட்டி கொக்கரித்த முஸ்லிம் கட்சிகள் ஒன்று கூடிக் கொண்டு வந்த நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம்களின் குரல்வளையை நசுக்குவதை, முஸ்லிம் தலைவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

அன்று ஞானசார தலைமையிலான பொதுபல சேனா, சிங்களே போன்ற இனவாத குழுக்கள் பள்ளிவாயல்களை உடைக்கிறார்கள், முஸ்லிம்களை அச்சுறுத்துகிறார்கள், அதனை மஹிந்த அரசாங்கம் தடுக்கவில்லை என்ற பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதனை கண்டித்து தங்களுடைய அரசியல் சுயலாபகங்களுக்காக ஊதிப் பெரிதாக்கியவர்கள், இன்று இந்த நல்லாட்சியிலும் அவ்வாரான நடவடிக்கைகள் தொடர்வதைக் கண்டு ஏன் வாய்மூடி மௌனிகளாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.

அவ்வாறு இல்லை, நல்லாட்சியின் பங்காளிகளாக இருக்கின்ற எங்கள் முஸ்லிம் தலைமைகள், சமூகம் வஞ்சிக்கப்படுவதையும் உரிமைகள் மறுக்கப்படுவதையும் முஸ்லிம் கட்சிகளுடைய தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சத்தமிட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள், என நல்லாட்சியின் பிரியர்களாக இருக்கும் கட்சிகளின் ஆதரவாளர்கள் சிலர் பேசிக் கொள்கிறார்கள். அப்படியானால் மஹிந்த ஆட்சியில் இவர்கள் பாராளுமன்றத்தில் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தா என்றால், நிச்சயமாக இல்லை. அன்று அவரவர் பங்கிற்கு பாராளுமன்றத்தில் பேசிய, எதிரொலித்த வரலாறுகளைத்தான் நாங்கள் காண்கிறோம். 

அப்படி பாராளுமன்றத்தில் எதிரொலித்தும் எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றும் மஹிந்த அரசாங்கம் மிதவாதப் போக்கை கொண்டதாக செயற்படுகிறது, என்றும் எங்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் வழங்கப்படவில்லை என்ற காரணத்தினால்தான் இவர்கள் நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டுவருவதற்காக கடந்த 2015 ம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னனி, ஐக்கிய தேசிய போன்ற கட்சிகளுடன் ஒன்றினைந்து மஹிந்தவை தோற்கடித்து ஆட்சிமாற்றம் ஒன்றினை ஏற்படுத்தியிருந்தார்கள்.

அவ்வாறு மஹிந்தவை குற்றம் சாட்டி தோற்கடித்தவர்கள், நல்லாட்சி அரசாங்கத்திடம் முஸ்லிம் சமூகத்தினுடைய பாதுகாப்பு, உரிமைகள் தொடர்பில் என்ன நிபந்தனைகளை ஒப்பந்தங்களை செய்தார்கள் அல்லது செய்திருக்கிறார்கள் என்ற கேள்விக்கு இன்றுவரை விடைகாண முடியாமல் இருக்கிறது.

நல்லாட்சி அரசாங்கத்திலும் கூட இதுவரை முஸ்லிம்களுக்கு எதிரான 64 க்கிற்கும் மேட்பட்ட வன்முறை சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக ஒரு ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்ல தம்புள்ள பள்ளிவாயல் விவகாரம் தொடங்கி இப்போது திருமலை கரிமலையூற்று பள்ளிவாயல் காணிப் பிரச்சினை, என வடமாகணத்தில் முஸ்லிம்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த வில்பத்துவ அதனைச் சார்ந்த பிரதேசங்கள் வனப்பகுதியாக ஜனாதிபதி மைத்திரி அவர்களினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான வர்த்தமாணி அறிவித்தல் வெளியாகியுள்ளதாகவும், பள்ளிவாயல்கள் மீதான கல்வீச்சுக்களும் ஞானசாரவின் இனவாத நடவடிக்கைகளும் அச்சுறுத்தல்களும்  தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

ஆளும் அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள பதவிகளை வகிப்பவர்கள் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான விடயங்களை விவாதிப்பது அல்லது குரல் எழுப்புவதினூடாக அல்லது தொலைக்காட்சி நிகழ்சிகளில் ஆவேசம் கொள்வதாலும் "மஹிந்த அரசாங்கம் முகத்தில் குத்தியது என்றும் மைத்திரி, ரணில் அரசாங்கம் முதுகில் குத்துகிறது". என்றும், ஆளுங்கட்சியில் இருக்கின்றோமா?! அல்லது எதிர்கட்சியில் இருக்கின்றோமா?! என்று கூட தெரியாமல்  இவர்களுடைய நிலைப்பாடுகளை யாரிடத்தில் முறையிடுகிறார்கள், என்பதும் அதே நேரம் ஆளுங்கட்சி அமைச்சர்களாக இருந்து கொண்டு முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பிடமும் கூட்டு எதிர்கட்சியிடமும் முறையிடுகிறார்களா? இல்லை யாருக்கு எதை சொல்ல வருகிறார்கள் என்பதுதான் எமக்கு புரியவில்லை. 

2015 ஜனவரி 8 ம்திகதிக்கு பின்னரான பொதுத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகளுடன் போட்டியிட்ட, அதேவேளை நல்லாட்சியை கொண்டுவருவதற்காக முன்னின்ற ஏனைய கட்சிகள் தற்போது எந்த தரப்பில் இருந்து கொண்டிருக்கிறது என்பதையும், யார் நல்லாட்சியில் நங்கூரமிட்டு கிடக்கிறார்கள் என்பதையும் முஸ்லிம் சமூகம் சிந்திக்க வேண்டும். 

அன்று ஞானசாரவையும், மஹிந்தவையும் சம்மந்தமே இல்லாமல் விமர்சித்து முஸ்லிம்களை சூடேற்றிய தற்போதுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் றஹ்மான், பைசர் முஸ்தபா, மரிக்கார், கபீர் ஹாசீம், போன்றவர்களும் ஆசாத்சாலி போன்ற ஏனையவர்களும் இன்று நாட்டில் இருக்கிறார்களா அல்லது செவ்வாய் கிரகத்திற்கு படையெடுத்து சென்று விட்டார்களா என்பதுதான் புரியவில்லை.

அதுமட்டுமல்ல முஸ்லிம் கட்சி தலைவர்களான அமைச்சர் ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் போன்றவர்கள் அவர்களுடைய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த அரசாங்கத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? முஸ்லிம் சமூகத்தினுடைய உரிமைகளையும் அபிலாசைகளையும் பாதுகாப்பவர்கள் நாங்கள் என்பவர்கள் பாராளுமன்றத்தில் மாத்திரம் சத்தமிட்டு வருவதால் வருவதால் இது வரை முஸ்லிம் சமூகத்திற்கு பெற்றுக்கொடுத்த அல்லது எதை சாதித்து கொடுத்திருக்கிறார்கள் என்பதை முஸ்லிம் சமூகம் சிந்திக்க தவரக்கூடாது.

ஆளும் கட்சியின் அங்கமாக இருப்பவர்கள் ஏன் பாராளுமன்றத்தில் புலம்ப வேண்டும், அதற்கான தேவை ஏன் ஏற்பட்டது? இவர்களுக்கு ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் பேசுவதற்கு தைரியமில்லையா அல்லது அதற்கான சந்தர்ப்பங்கள் அனுமதி  மறுக்கப்படுகிறதா? அவ்வாறு மறுக்கப்பட்டிருந்தால், இவர்கள் பாராளுமன்றத்தில் எதிரொலிக்கும் போதாவது அரசாங்கத்தின் ஏனைய அமைச்சர்களாவது இவர்களுடைய பேச்சுக்களுக்கு பதில் வழங்கி இருக்கிறார்களா? என்ற பல கேள்விகள் நீண்டு கொண்டே செல்கிறது.

எனவே இவர்கள் யானைக்கு வாலாக இருக்காமல் எறுப்புக்கு தலையாக இருந்து எதிர்தரப்பில் இன்று அனுர குமார அவர்களைப் போன்று அல்லது சம்பந்தன் ஐயா அவர்களைப் போன்று அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளை துறந்து தனித்து நின்று சமூகத்திற்காக குரல் எழுப்ப துணிவில்லாமல் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் இந்த தரப்பினருடன் ஏன் இணைந்து ஏன் செயற்பட மறுக்கிறார்கள்?! என்பது பற்றி இவர்கள் முஸ்லிம் சமூகத்திற்கு பொறுப்புடன் பதில் சொல்ல வேண்டும்.

அஹமட் புர்க்கான் 
கல்முனை..