திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோய் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு பரவும் அபாய நிலை உருவாகியுள்ளது. அதனை ஆரம்ப நிலையிலேயே தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கிழக்கு மாகாணசபை மேற்கொண்டுள்ளது என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கில் டெங்கு ஒழிப்புப் பணிகள் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் விபரிக்கையில்;
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் இம் மாதம் டெங்கு நோயினால் மூவர் மரணித்திருக்கிறார்கள். டெங்கு நுளம்பு பரவும் இடங்களை துப்புரவு செய்வதற்கான நடவடிக்கைகள் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஏறாவூரில் இந்நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் ஏப்ரல் 4 ஆம் திகதி வரையிலான தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தில் டெங்கு நுளம்பினை அழிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக காலை முதல் மாலை வரை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்களில் காலை 8.30 முதல் 10.30 மணிவரையில் 2 மணித்தியாலங்கள் துப்புரவுப் பணிகளில் ஈடுபட வேண்டுமென கிழக்கு மாகாண சபை உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெங்கு நுளம்பு பரவும் இடங்களை இனங்கண்டு துப்புரவு செய்யும் பணிகளை முன்னெடுப்பதற்கு தேவையான ஆளணிகளை நியமித்துக் கொள்ளுமாறு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியினை ஒதுக்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வடக்கு சுகாதார அமைச்சர் என்னைத் தொடர்பு கொண்டு கிழக்கில் டெங்கு நுளம்பு பரவுவதைத் தடுப்பதற்காக டெங்கு ஒழிப்பு விஷேட படையணி இரண்டினை அனுப்பிவைத்தார் கிளிநொச்சியில் டெங்குநோய் பரவிய போது இந்தப் படையணியே முன்னின்று செயற்பட்டு டெங்கு நுளம்பு பரவுவதைத் தடுத்தது. வடமாகாண சுகாதார அமைச்சருக்கு நான் நன்றிகளைத் தெரிவிக்கிறேன் என்றார்.