Headlines
Loading...
டெங்கு : சொந்தச் செலவில் சூனியம்!

டெங்கு : சொந்தச் செலவில் சூனியம்!



இன்றைய நாட்களில் நம் எல்லோரினதும் கரிசனை டெங்கு நுளம்பின் பக்கமே திரும்பியிருக்கிறது. இவ்வளவு அறிவும் நவீன தொழில்நுட்பமும் பலமும் பொருந்திய மனிதன் அற்ப நுளம்புக்கு அஞ்சுகின்ற, அதனை ஒழிப்பதற்காக தமது முழுச் சக்திகளையும் திரட்டிப் போராடுகின்ற நிலைக்கு வந்திருப்பது நமக்கெல்லாம் படிப்பினை தருவதாகும்.

கடந்த ஜனவரி மாதம் முதல் இலங்கையில் மீண்டும் தீவிரமாகப் பரவத் தொடங்கியிருக்கும் டெங்கு நோய் காரணமாக  நாடளாவிய ரீதியில் 21 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.

குறிப்பாக திருகோணமலை மாவட்டமே டெங்கினால் அதிகம் பாதிப்பை சந்தித்திருக்கிறது.  கிண்ணியாவில் 12 பேரும்  திருகோணமலையில் ஒருவரும், குச்சவெளியில் ஒருவரும் தோப்பூரில் ஒருவருமாக திருமலை மாவட்டத்தில் மாத்திரம் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் மட்டக்களப்பு, காத்தான்குடி, அட்டாளைச்சேனை ஆகிய பகுதிகளிலும் டெங்குக் காய்ச்சலினால் தலா ஒருவர் வீதம் மரணித்திருக்கிறார்கள்.

மேற்படி பகுதிகளில் இன்று டெங்குக் காய்ச்சலே பேசுபொருளாகியுள்ளது. அடுத்த மரணம் யாரினது வீட்டில் நடக்குமோ என்று கிண்ணியா மக்கள் அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகளும் சுகாதாரத் துறை அதிகாரிகளும் தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்களும் கிண்ணியாவை நோக்கிப் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். உலகின் பல பகுதிகளிலிருந்தும் நிதி திரட்டப்பட்டு மக்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மத்திய மற்றும் மாகாண சுகாதார அமைச்சுக்கள் நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்தும் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தும் வருகின்றன.

இவை ஒருபுறமிருக்க டெங்கு நுளம்புகள் பரவுவதற்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து அதனை நிரந்தரமாகக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதே புத்திசாதுர்யமானதாகும். தேசிய டெங்குக் கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் கூறுவதைப் போன்று வீடுகளிலிருந்து வீசப்படும் வெற்றுப் போத்தல்களும் பிளாஸ்டிக் பொருட்களுமே நுளம்புகள் உற்பத்தியாவதில் 30 வீதம் பங்குவகிக்கின்றன. அப்படியானால் நாம்தான் நுளம்புகள் உருவாவதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்கிறோம் என்பது இதிலிருந்து புரிகிறது.

நமது வீட்டில் சேரும் கழிவுகளை முறையாக சேகரித்து குப்பை அகற்றும் வண்டியில் கொடுப்பதற்கு நாம் தயாரில்லை. மாறாக அவற்றைக் கொண்டு வந்து வீதிகளில் கொட்டிவிட்டுப் போகிறோம். அதிலிருந்து உருவாகும் நுளம்பு நமது வீட்டுக்குள் வந்து நமது பச்சிளம் குழந்தையையே கடித்துவிட்டுப் போகாது என்பதற்கு என்ன உத்தரவாதம். ஆக, நாமே நமக்கு சொந்தச் செலவில் சூனியம் செய்து கொள்கிறோம் அல்லவா?

இஸ்லாம் சுத்தம் ஈமானின் பாதி என்கிறது. ஆனால் அந்த இஸ்லாத்தைப் பின்பற்றுகின்ற முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில்தான் நுளம்பு உற்பத்தியாகிறது என்றால் கோளாறு எங்கே இருக்கிறது?

எனவேதான் நமது வீட்டையும் பொது இடங்களையும் அன்றாடம் சுத்தமாக வைத்திருக்காதவரை இவ்வாறான நோய்கள் பரவுவதையும் உயிர்கள் அநியாயமாக இழக்கப்படுவதையும் ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது.

சிந்திப்போமா?