Top News

சிங்ஹ லே பிரசாரம் முறியடிப்பு



பொலொன்னறுவையில் உருவாக்கப்பட்ட 'சிங்ஹ லே' இனவாதம், 'மனிதாபிமானத்தினால்' முறியடிக்கப்பட்டதாக, தேசிய சமாதானப் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களை எல்லையாகக் கொண்டிருக்கும் பொலன்னறுவை, அன்றைய அரசர்களின் முக்கிய கவனத்தை ஈர்த்த பிரதேசமாகும். பொலன்னறுவையில் வாழ்கின்ற பெரும்பான்மையினரான பௌத்த மதத்தைப் பின்பற்றும் பெரும்பான்மையின மக்கள், தென்னிலங்கையிலிருந்து வரவழைக்கப்பட்டுக் குடியமர்த்தப்பட்டவர்களாவர். 

அப்படிப்பட்ட சமூகத்துக்குள்ளே வாழ்கின்ற மக்களுக்குள் பல குழுக்கள் உருவாகி, நேர்ச் சிந்தனைக்குப் பதிலாக பாதக சிந்தனைகளை உருவாக்கி, அதை  இனவாதமாக உருவேற்றிக் கொண்டனர். அதன் விளைவாக 'சிங்ஹ லே' எனும் பெயரில், இனவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. 

'சிங்ஹ லே' ஸ்டிக்கர்கள், பொலன்னறுவை பிரதேசத்தில் பரவலாக வாகனங்களில் ஒட்டப்பட்டதால், விரும்பியோ விரும்பாமலோ பலரை, இனவாத சதிவலைக்குள் சிக்க வைக்க இனவாதிகள் முனைந்தனர். 

இதனை முளையிலேயே கிள்ளி எறியும் விதமாக, தேசிய சமாதானப் பேரவையின் பொலன்னறுவை மாவட்ட மதங்களுக்கிடையிலான நல்லிணக்கக் குழு, பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டு, 'சிங்ஹ லே'க்குப் பதிலாக 'மனிதத்துவத்தை மதிப்போம்' எனும் மாவட்டம் தழுவிய செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. 

அத்துடன், உண்மையான வீரம் என்பது, இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்துகின்ற மகோன்னத முயற்சிதான் என்பது, 'மனிதாபிமானத்தை மதிப்போம்' எனும் ஸ்டிக்கர் மூலம் பிரபல்யப்படுத்தப்பட்டது.
 
எமது பிரசாரத்தை முழுமனதோடு விளங்கிக் கொண்ட நல்லிணக்கத்தை நேசிக்கும் நல்ல மனம் கொண்ட மக்கள், தாங்களாகவே முன்வந்து எமது ஸ்டிக்கர்களையும் துண்டுப் பிரசுரங்களையும் தமது வாகனங்கள், வீடுகள், காரியாலங்கள், வியாபார நிலையங்களில் அறிவித்தலாக வைத்திருந்தனர். அதன் மூலம் அடிப்படைவாத சக்திகளுக்கு அடிபணிய மாட்டோம் என்பதையும் பொலன்னறுவை மக்கள் புலப்படுத்தி நின்றனர் ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
Previous Post Next Post