இன்று வழமை போல் எனது நடுவர் பணிக்காக நீதிமன்றம் சென்றிருந்தேன். என்னோடு பணி புரிபவர்கள் வெள்ளைக்கார ஆங்கிலேயர்கள். நான் மட்டுமே ஆசிய நாட்டவர். முஸ்லிம்.
நேற்று லண்டனில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக இவர்களது பிரதிபலிப்பு எவ்வாறு இருக்கப் போகிறது என்ற தயக்கத்துடனேயே அவர்களை அனுகினேன். யாரும் அது பற்றிய எதுவித பிரதிபலிப்பையும் காட்டவில்லை. சகஜமாகவே என்னோடு கதைத்தனர். (என்னை சங்கடத்துக்குள்ளாக்கி விடக்கூடாது என அவர்கள் நினைத்திருக்கக் கூடும்.)
எனக்கு நேரெதிராக ஒரு வெள்ளைக்கார பெண்மணி அமர்ந்திருந்தார். அவர் ஒரு ஆசிரியர். அப்போதுதான் அவ்விடத்துக்கு வந்த கறுப்பினப் பெண் ஒருவர் நேற்று நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு முதலுதவி அளித்த முன்னாள் இராணுவ கப்டன், தற்போதைய ஆளும் கன்சவேட்டிவ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் செயலை மிக ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டார். என்னுடன் பேசிக்கொண்டிருந்த மற்றைய ஆங்கிலேயர்கள் அந்த உரையாடலை தொடரவில்லை.
ஒரு பொப் பாடகன் இறந்து விட்டாலோ அல்லது முன்னைய தினம் நடந்து முடிந்த உதைபந்தாட்டம் பற்றியோ மிகவும் ஆர்வமாக உரையாடக் கூடியவர்கள் நேற்று நடந்த ஒரு அனர்தத்தைப் பற்றி அதுவும் நாங்கள் அமர்ந்திருந்த நீதிமன்றக் கட்டிடத்தின் ஒரு கோடியிலுள்ள தேம்ஸ் நதியோரம் நின்று பார்த்தால் கண்ணுக்கு தெரியக் கூடிய ஒரு இடத்தில் இடம்பெற்ற ஒரு அனர்த்தம் பற்றி அவர்கள் விவாதிக்காமலிருந்தது எனக்கு ஆச்சரியமளித்தது.
உண்மையிலேயே இவர்களுக்கு இந்த விடயம் பற்றி உரையாடுவதில் ஆர்வமில்லையா? அல்லது என்னை வைத்துக் கொண்டு அது பற்றி விவாதிப்பதை தவிர்க்கின்றார்களா?? இரண்டாவது காரணத்துக்காக அவர்கள் தவிர்க்கின்றார்களென்றால் அது, நேற்று நடந்த அனர்தத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் எல்லோரையுமே பொதுமைப்படுத்துவதாக அமையும். எனவே, இதை அனுமதிக்கக் கூடாது. அவர்களுக்கு இது தொடர்பில் எனது நிலைப்பாட்டையும், ஒரு செய்தியையும் சொல்ல வேண்டுமென்று முடிவெடுத்தேன்.
அந்த வெள்ளைக்கார ஆசிரியையுடன் பேச்சை ஆரம்பித்தேன். முதலில் நேற்றைய தாக்குதலில் கொல்லப்பட்ட அனைவருக்கும் எனது அனுதாபங்களைத் தெரிவித்தேன். " நாம் இன்று வீட்டிலிருந்து வரும்போது எமது அன்புக்குரியவர்களிடம் வேலை முடிந்ததும் பின்னேரம் வீடு வந்து விடுவேன் . என்று சொல்லி விட்டுத்தான் வந்திருப்போம். அதுபோல்தானே நேற்று கொல்லப்பட்டவர்களும் காலையில் வீட்டிலிருந்து கிளம்பும்போது மாலையானதும் வீடு திரும்புவேன். ஒன்றாக இரவுச் சாப்பாடு சாப்பிடலாம்..இவ்வாறு ஒவ்வொரு விதமான வாக்குறுதியினை தமது அன்புக்குரியவர்களிடம் வழங்கி விட்டு வந்திருப்பார்கள். நேற்று நடந்த பயங்கரவாதம் அவர்களுடைய அனைத்து கனவுகளையும் ஒரு நொடியில் கலைத்து விட்டது." இப்போது ஏறக்குறைய அனைவருமே என்னையே பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
தொடர்ந்தேன்...."இது விடயத்தில் பிரதான ஊடகங்கள் நடந்து கொள்கின்ற விதம் உள்நோக்கம் கொண்டதும் நயவஞ்சகத்தனமானதாகவும் இருக்கின்றது. பயங்கரவாதம் எந்த வடிவில் இடம்பெற்றாலும், யாரால் இடம்பெற்றாலும் அது கண்டிக்கப்பட வேண்டும். தத்தமது நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறும்போது அதற்கு முக்கியத்துவமளித்து செய்தி வெளியிடும் இந்த பிரதான ஊடகங்கள் ஈராக்,சிரியா போன்ற நாடுகளில் தமது நடாத்துகின்ற விமானத் தாக்குதல்களிலும் தாம் ஆதரவளிக்கின்ற பயங்கரவாதக் குழுக்களின் தாக்குதல்களிலும் தினந்தோறும் நூற்றுக் கணக்கில் கொல்லப்படுகின்ற உயிர்களைக் கண்டு கொள்வதில்லை. இந்த ஊடகங்கள் தமக்கு தேவையானவற்றை மாத்திரம் மக்களுக்கு செய்திகளாக காட்டி விட்டு அவர்களை இருட்டிலேயே இருக்க வைத்து விடுகின்றார்கள்."
எல்லோரும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். நான் அப்போதிருந்த இறுக்கமான சூழ்நிலையை இலகுபடுத்த விரும்பினேன்.
அவர்களுள் ஒருவரைப் பார்த்து உங்களுக்கு இது போன்ற அனர்தங்களில் நேரடி அனுபவம் உண்டா? எனக் கேட்டேன். "இல்லை" என்கிறார்.உங்களுக்கு இருக்கிறதா?என என்னிடம் கேட்டார். "ஆம்"என்றேன்.
1990ம் ஆண்டு எனது ஊரில் ஓரிடத்தில் விமானங்கள் குண்டுகள் வீசியபோது நான் அவ்விடத்திலிருந்து சில நூறு மீற்றர் தூரத்திலேயே நின்றிருந்ததையும்,அதே வருடம் எனது ஊரில் ஒரே இரவில் 122 பேர் படுகொலை செய்யப்பட்டபோது நானும் அங்கிருந்தேன். என்றேன்.
என்னெதிரே அமர்ந்திருந்த அந்த வெள்ளைக்கார ஆசிரியை தலையில் கையை வைத்தார். "என்ன 122 பேரா?" . ஆம் என்றேன். அந்த சம்பவத்தின் போது உனக்கு எத்தனை வயது என்று கேட்டார்? 16 என்றேன். அதனுடைய தாக்கம் என்னிடம் எவ்வாறு பிரதிபலித்தது?என்று கேட்டார்.நான் எனது அனுபவத்தினை விபரித்து அது இவ்வாறான அனர்த்தங்களால் பாதிப்புறுவோர் மீது எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பதையும் விளக்கிக் கொண்டிருக்கும்போது எதேச்சையாக அவருடைய கண்களைப் பார்த்தேன்.முற்றிலுமாக கண்ணீர் நிறைந்திருந்தது.
============================================
============================================
என்னுடைய மேற்குலக வாழ்க்கையில் நான் கண்டு கொண்டிருக்கும் அனுபவம்.
பெரும்பான்மையான பொதுமக்கள் எதுவித மத நம்பிக்கைகளுமற்றவர்கள். எவருக்கெதிராகவும் அநியாயம் நடப்பது தெரிந்தால் சக மனிதன் என்ற அடிப்படையில் அதற்கு எதிராக குரல் கொடுப்பர். ஆழ்ந்த அரசியல் வாசிப்புள்ளவர்கள் யாரும் இந்நாடுகளின் வெளிநாடுகளில் தலையீட்டினை ஆதரிப்பதில்லை. (கொள்கை வகுப்பாளர்களின் திட்டங்களுக்கு அமைவாக உருவாக்கப்படுகின்ற தீவிர இனவாத சிந்தனை கொண்ட பிரிவினரும் உள்ளனர்)
மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கின்ற கொலை வியாபாரம் பற்றிய சரியான செய்திகள் இவர்களுக்கு கிடைப்பதில்லை. கிடைத்தால் உள்நாட்டு அரசாங்கங்கள் மக்களின் பாரிய எதிர்ப்புகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும்.
இந்நாடுகளில் எல்லோருமே முஸ்லீம் மக்களுக்கு எதிரியாக இல்லாத நிலையில் சில கிணற்றுத் தவளைகள் செய்கின்ற காரியங்கள் இந்நாடுகளில் உள்ள அனைவரையுமே முஸ்லிம்களுக்கு எதிரிகளாக்கி விடக்கூடும்.
(நான் வீடு திரும்பியதும் ஈராக்கில் ஒரு விமானத் தாக்குதலில் 230 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தியை படித்தேன். நாளை நிச்சயம் இந்த செய்தியையும் அவர்களுக்கு காண்பித்து அவர்களுடன் இதுபற்றி உரையாடுவேன்.)
அப்துல் வாஜி
இலண்டன்