Headlines
Loading...
டெங்கு விடயத்தில் மாகாண சுகாதார அமைச்சினால் சரியான செயற்பாடுகள் இடம்பெறவில்லை

டெங்கு விடயத்தில் மாகாண சுகாதார அமைச்சினால் சரியான செயற்பாடுகள் இடம்பெறவில்லை



டெங்கு விடயத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் சரியான செயற்பாடுகள் இடம்பெறவில்லை: கிழக்கு மாகாண சபையில் அன்வர் காட்டம்

கிழக்கில் ஏற்பட்டுள்ள டெங்கு விடயத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினாலே ஒரு சரியான செயற்பாடுகள் இடம்பெறவில்லை என்பதனை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏற்றுக்கொண்டாக வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம் அன்வர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் 75ஆவது அமர்வு நேற்று தவிசாளர் சந்திரதாச கலபெதி தலைமையில் நடைபெற்றது. 

இதன்போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ் உதுமாலெப்பை ஆகியோரினால் கிழக்கில் ஏற்பட்டுள்ள டெங்கு நோயினை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென சமர்ப்பிக்கப்பட்ட அவசரப் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மாகாண சபை உறுப்பினர் அன்வர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் திருகோணமலை மாவட்டத்திலே குறிப்பாக இரண்டு பிரதேசத்திலே இந்த டெங்கு நோய் ஏற்பட்டிருக்கிறது. அதில் மூதூர் கிண்ணியா போன்ற பிரதேசங்கள் உள்ளடங்குகின்றன. 

கிண்ணியா பிரதேசத்திலே இந்த தொற்று நோய் ஏற்படுவதற்கு முன்னர் மூதூர் பிரதேசத்திலே அதிகமான நோயாளர்கள் அனுதிக்கப்பட்டிருந்தும் கிண்ணியா பிரதேசத்திலே அதிகமான மரணம் ஏற்படக் காரணம் என்ன? இதுதொடர்பில் முறையான சிகிச்சை அளிக்கப்படுகின்றதா? அல்லது விசேட நிபுணர்களை கொண்டுவந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதா? டெங்கு நோய்க்கு அன்று நடைமுறையில் இருந்துவந்த சிகிச்சை அளிக்கின்றார்களா? என்பது பற்றி எல்லோருக்கும் சந்தேகம் இருக்கிறது.

திருகோணமலை மாவட்டத்திலே ஏற்பட்டிருக்கின்ற இந்த தொற்று நோய் தொடர்பில் மக்கள் மத்தியில் இன்னுமொரு அச்சம் இருக்கிறது. காரணம் இது டெங்கு நோயா அல்லது வேறுவிதமான வைரஸ் பரப்பப்படுகின்றதா? என்பது பற்றி தெளிவில்லாமல் உள்ளது. எனவே இவற்றை ஆராய வேண்டிய பொறுப்பிருக்கிறது.

என்னைப் பொறுத்தமட்டில் மரணித்தவர்களின் DNA பரிசோதணை செய்து என்ன நோயினால் இந்த மரணம் ஏற்பட்டிருக்கிறது என்பதுபற்றி இதுவரை ஏதும் முடிவுகள் எடக்கப்பட்டிருக்கின்றதா என சந்தேகம் இருக்கின்றது. எனவே இந்த சந்தேகம் ஒருபுறமாக இருக்க டெங்கு நோய் என்றால் அதனால் பாதிக்கப்பட்ட மூதூர் பிரதேசத்திலே மரணங்கள் ஏற்படாத நிலையில் கிண்ணியா பிரதேசத்தில் மட்டும் மரணம் ஏற்படுகின்றது என்றால் அதிலே மக்கள் மத்தியிலே அச்சம் இருக்கிறது. 

இந்த டெங்கு நுளம்பு கடித்ததன் பிற்பாடு அந்த நோயினால் தாக்கப்பட்டவரின் இரத்தம் ஜெலித்தன்மைக்கு உடனே மாற்றப்படுகின்றன. இவ்வாறு ஜெலித்தன்மைக்கு மாற்றப்படுகிறது என்றால் கடந்த காலங்களில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தம் அவ்வாறான நிலைக்கு மாற்றப்படாத நிலையிலே இன்று வித்தியாசமான மாற்றம் உடலிலே ஏற்படுகின்ற போதே மக்களிடத்திலே பாரிய சந்தேகம் நிலவுகிறது.

எனவே கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் இந்தவிடயம் சுகாதார அமைச்சினூடாக செயற்படுத்துவதற்கு அப்பால் விசேட குழுவொன்றை நியமித்து இந்த நோய் தொடர்பில் நுனுக்கமாக ஆராயவேண்டிய பொறுப்பு உங்கள் மீது இருக்கின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.