Headlines
Loading...
இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப பாடசாலைகள் சிறந்த களமாகும்; ஹிஸ்புல்லாஹ்

இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப பாடசாலைகள் சிறந்த களமாகும்; ஹிஸ்புல்லாஹ்



இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு சிறந்த களமாக பாடசாலைகள் அமைந்துள்ளன. எனவே, பாடசாலை மட்டத்திலிருந்து அதற்கான முயற்சிகள் முன்னெடுக்க வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 

காத்தான்குடியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற பாடசாலை நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 
அவர் அங்கு மேலும் கூறியதாவது:- 

நாட்டில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் இனங்களுக்கிடையில் சமாதானமும் - சமத்துவமும் நிலவும் என மக்கள் எதிர்பார்த்த போதிலும் நிலையான சமாதானம் - சமத்துவம் ஏற்படவில்லை. மாறாக இனங்களுக்கிடையில் சந்தேகம் - முரண்பாடுகளே அதிகரித்தன. இந்நிலையை மாற்றி நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் பல திட்டங்களை வகுத்துள்ளது. 

நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு பாடசாலைகளும் சிறந்த களமாக அமைந்துள்ளன. இன நல்லுறவை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் பாடசாலை மட்டத்திலிருந்து முன்னெடுக்க வேண்டும். பாடசாலை மட்ட விளையாட்டுப் போட்டிகள் மூலம் இன நல்லிணக்கத்தை சிறப்பான முறையில் கட்டியெழுப்ப முடியும் என நாங்கள் நம்புகின்றோம். 

பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் இந்த விடயத்தில் தமக்குள்ள பொறுப்புணர்வை உணர்ந்து செயற்பட வேண்டும். நாட்டின் எதிர்கால சந்ததிகளை பாடசாலைகளில் இருந்தே நாங்கள் உருவாக்குகின்றோம். பாடசாலைகள் அவர்களுக்கு நல்ல கல்வியை வழங்குவதில் மாத்திரம் நின்றுவிடாது இனநல்லிணக்கத்துக்கான செயற்பாடுகளிலும் ஈடுபடுத்த வேண்டும்.

ஒரு நாட்டில் அமைதியான சூழல் உருவாகினால் மாத்திரமே அந்நாடு பொருளாதார ரீதியாக முன்னேறும். இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் - சந்தேகங்கள் உள்ள நிலையில் எமது நாட்டை கட்டியெழுப்புவது கடினமாகும். நிலையான சமாதானம் இல்லாவிட்டால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கு முதலீடு செய்ய முன்வரமாட்டார்கள். இந்நிலை எமது எதிர்கால சந்ததிகளையே பாதிக்கும். –என்றார்.