“முஸ்லிம் விவாகம், விவாகரத்துச் சட்டத்தைத் திருத்துவதற்கு மதத்தலைவர்களை நம்பியிருக்க முடியாது. அரசாங்கம் உடனே தலையிட்டு மதத்தின் பெயரால் அநீதியை அனுமதிக்க விளைபவர்களிடமிருந்து, முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு (Women Action Network) வேண்டுகோள் விடுத்துள்ளது.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் (ACJU) தலைவர் ரிஸ்வி முப்தி, “முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டமானது (MMDA), அதன் தற்போதைய நிலையில் சிறப்பாகவே எழுதப்பட்டுள்ளது, அதில் மாற்றங்கள் தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளமையானது விசனமேற்படுத்துவதாகவும், ஏமாற்றமளிப்பதாகவும் உள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருக்கும் வலையமைப்பு, மதத் தலைவர்கள் சம்பிரதாயங்களை முன்னிறுத்தி அடிப்படை உரிமைகளைத் தடுக்க முயலும் இந்நிலையில், முஸ்லிம் பெண்களும், குழந்தைகளும், தமது உரிமை தொடர்பில் இலங்கையில் இரண்டாந்தரக் குடிமக்கள் இல்லை என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனவும் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது.
முழுமையான அறிக்கை வருமாறு,
நீதிபதி சலீம் மர்சூப்பின் தலைமையில் முஸ்லிம் தனியார் சட்டத்தினைச் சீர்திருத்துவதற்காக 2009ஆம் ஆண்டில் அப்போதைய நீதியமைச்சரால் அமைக்கப்பட்ட குழுவில், ரிஸ்வி முப்தியும், ACJU இன் இன்னொரு மூத்த உறுப்பினரும் அங்கத்தவர்களாவர். ACJU ஆனது, இக்குழுவின் அங்கத்தவரென்ற வகையில், கடந்த எட்டு வருடங்களாக, முஸ்லிம் தனியார் சட்டத்தினுள் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவது தொடர்பாக நிகழ்ந்த கலந்துரையாடல்களில் பங்கேற்றுள்ளது.
முப்தியின் இக்கூற்றுகளானது, MMDA இனுள் நிலையான சட்டச் சீர்திருத்தங்கள் ஏற்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகிறது என்ற தவறான நம்பிக்கையை நோக்கி, குழுவையும், தாம் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் முஸ்லிம் சமூகத்தையும் ACJU ஆனது வழிநடத்தியிருக்கலாமென்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
ரிஸ்வி முப்தியின் இக்கூற்றுகள், இது தொடர்பில் குழு மேற்கொண்ட முயற்சிகளுக்குத் தீங்கிழைப்பதாகவுள்ளது. மேலும், இது MMDA இன் காரணமாகக் கடந்த காலத்திலும், தற்போதும் தொடர்ந்து அநீதிக்கு உட்படுத்தப்பட்டுவரும் முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுமியருக்கும் பாரிய தீங்கிழைப்பதாகவுள்ளது.
MMDA மற்றும் அதன் செயற்படுத்துகையே, குழந்தைத் திருமணத்தை அனுமதித்தல், வயது வந்த பெண்களைப் பராயமடையாதவர்கள் போல் நடத்துவதன் மூலம் அவர்களது சுயாட்சியை அகற்றுதல், காதிமார் சபை (குவாஸி) நீதிபதி போன்ற அரச ஊதியம் கிடைக்கும் பதவிகளுக்குப் பெண்கள் பணியமர்த்தப்படுவதைக் கட்டுப்படுத்துதல், ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமனற்ற விவாகரத்து ஏற்பாடுகளை வரையறுத்தல், நிபந்தனையற்ற பலதார மணத்தை அனுமதித்தல் போன்ற சமவுரிமையை நிராகரிக்கும் பல்வேறு நீதிக்குப் புறம்பான செயல்களுக்கு முஸ்லிம் பெண்களையும், சிறுமிகளையும் உட்படுத்துகிறது என பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு (WAN) உறுதியாக நம்புகிறது. ACJU கூறுவது போல் பிரச்சினை வெறுமனே சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மட்டுமில்லை, மாறாகப் பிரச்சினை சட்டத்திலேயே இருக்கின்றது.
இது தொடர்பான எங்களது அக்கறைகளைப் பகிர்ந்துகொள்வதற்காக, எமது வலையமைப்பிலுள்ள முஸ்லிம் பெண்கள் அமைப்புகள் மற்றும் குழந்தைத் திருமணத்தின் பிடியிலிருந்து தப்பியவர்களை உள்ளடக்கிய பாதிக்கப்பட பெண்களுடன் WAN பல தடவைகள் ACJU இனைச் சந்தித்துள்ளது. இவ் ஒவ்வொரு சந்திப்பின்போதும் ACJU உறுப்பினர்கள் தமது அக்கறைகளைப் பகிர்ந்துகொண்டதோடு, MMDA இனைச் சீர்திருத்துவதில் தாம் எவ்வளவு அர்ப்பணிப்பாயுள்ளோம் என்பதையும் வெளிப்படுத்தியிருந்தனர். இச்சமீபத்திய கூற்று, அவர்கள் முன்பு கூறியதற்கு எதிராகவும், MMDA சீர்திருத்தங்களுக்கு ACJU இன் அர்ப்பணிப்பு உண்மையானதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றதாகவும் இருக்கின்றது. பாதிக்கப்பட்ட பெண்களின் பார்வைகள் எதனையும் பிரதிபலிக்காத முப்தியின் கருத்துகளால் நாம் மிகுந்த மனவருத்தமடைந்துள்ளோம்.
இச்சமீபத்திய கூற்று மற்றும் சீர்திருத்தம் தொடர்பில் ACJU இன் செயலற்ற தன்மை என்பன, இனம் மற்றும் மதச் சித்தாந்த அடிப்படையில் பன்முகப்பட்ட முஸ்லிம் சமூகத்தை தாம் பிரதிநிதித்துவப்படுத்துவதாக ACJU கூற முடியாது என்பதைத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது. சட்டத் சீர்திருத்தம் மீதான ACJU இன் நெகிழ்ச்சியற்ற, தீவிரப் போக்கு தன்மையானது, அவர்களது கண்ணோட்டங்களின் பிற்போக்குத்தன்மையையே காட்டுகின்றது. தமது சமூகத்தின் நம்பிக்கையை வெல்ல இயலாதவர்கள் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு குழுவின் அங்கத்துவத்திலிருந்து தகுதி நீக்கப்பட வேண்டும் என்பதை WAN உறுதியாக நம்புகிறது.
MMDA சீர்திருத்தத்தினை ஆதரிப்பவர்கள் மீதான தாக்குதல்களை, குறிப்பாக MMDA மற்றும் காதிமார் சபை (குவாஸி) அமைப்பினால் தமது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டோருக்காகப் போராடும் முஸ்லிம் பெண்கள் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்த, MMDA மீதான ACJU மற்றும் ஏனைய இஸ்லாமிய மதக் குழுக்களின் நிலைப்பாடானது சமீப காலத்திற் பயன்படுத்தப்பட்டது என்பதை WAN சுட்டிக்காட்ட விரும்புகிறது. ACJU இன் நெகிழ்ச்சியற்ற, தீவிரப் போக்கானது, முஸ்லிம் இளைஞர்களை அடிப்படைவாதத்தை நோக்கி இட்டுச் சென்றதுடன், அவர்கள் ‘MMDA ஆனது ஷரியாச் சட்டத்தினைப் பிரதிபலிக்கின்றது, ஆதலால் அதன் மீது சீர்திருத்தங்களை ஏபடுத்த இயலாது/கூடாது’ என நம்பவும் வழிகோல்கிறது.
ACJU இன் சமீபத்திய கூற்றுக்களானது, அவை முஸ்லிம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன்களைக் கருத்திற் கொள்வதற்கு மாறாக, இலங்கையில் முஸ்லிம் பெண்களின் சம உரிமை மற்றும் நீதிக்கான அணுகுமுறை என்பவற்றுக்குத் தடையாகவுள்ளன என்பதையே காட்டுகிறது. இந்நிலையைக் கருத்திற் கொண்டு, அரசு இதிற் தலையிட்டு, 18 வயதை எல்லாக் குடிமக்களுக்குமான திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதாக அறிவித்தல், அரச ஊதியம் கிடைக்கும் பதவிகள் பெண்களுக்குக் கிடைக்கும் நிலையினை உறுதிப்படுத்தல் போன்ற பல்வேறு அடிப்படையான சமரசத்திற்கு அப்பாற்பட்ட விடயங்கள் தொடர்பில் சீர்திருத்தம் ஏற்படுத்த வேண்டும் என WAN வேண்டுகோள் விடுக்கின்றது.
உறுதியளிக்கப்பட்ட சீர்திருத்தங்களுக்கு அதிக எதிர்பார்ப்புள்ள நிலையில், அரசானது முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட்ட தனது அத்தனை குடிமக்களுக்கும் தனது பொறுப்பினை ஆற்றவேண்டும். அரசானது ஒரு அரசைப் போற் செயற்பட்டு, மதத்தின் பெயரால் அநீதியை அனுமதிக்க விளைபவர்களிடமிருந்து, முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட்ட எல்லா இலங்கையரது உரிமைகளையும் பாதுகாப்பதற்கு இதுவே சிறந்த தருணமாகும்.
*WAN (பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு) ஆனது வடக்கு கிழக்கில் செயற்படும் 8 பெண்கள் அமைப்புகளது கூட்டமைப்பாகும்.