மன்னார்
முசலி பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்களின் அதிகமான பூர்வீக இடங்களை
வில்பத்து வன பகுதிக்கான எல்லையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய
வர்த்தமானியில் கையொப்பம் இட்டதை தொடர்ந்து வர்த்தமானி அறிவித்தலை
உடனடியாக ஜனாதிபதி ரத்துச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் நேற்று
முன்தினம் மாறி மறிச்சிக்கட்டி, பாலைக்குழி மற்றும் கரடிக்குழி மக்கள்
போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இப்போராட்டம்
இன்றும் மூன்றாவது நாளாக தொடர்கிறது. அத்துடன் வெள்ளிக்கிழமையான நாளைய
தினம் பொது மைதானத்தில் ஜும் ஆ தொழுகையை நடத்தி அதன் பிற்பாடு பாரிய
போராட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக முசலி மக்கள்
தெரிவிக்கின்றனர்.
முசலி
மக்களின் இந்தப் போராட்டத்திற்கு நாடளாவிய ரீதியில் உள்ள சகல
முஸ்லிம்களும் ஆதரவளிக்க வேண்டியது அவசியமாகும். கேப்பாப்பிலவில் தமிழ்
மக்கள் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்திய சமயம் அவர்களுக்கு
நாடளாவிய ரீதியில் மட்டுமன்றி வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்களும்
தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர். அத்துடன் இந்த மக்கள் போராட்டம்
ஊடகங்களின் கவனயீர்ப்பையும் பெற்றிருந்தது.
இதேபோன்று
முசலி முஸ்லிம் மக்களின் போராட்டத்திற்கு நாடளாவிய ரீதியிலும்
வெளிநாடுகளிலும் வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் தமது ஆதரவை தெரிவிக்க முன்வர
வேண்டும். அதன் மூலமே அவர்களது போராட்டம் தேசிய மட்டத்தில் கவனயீர்ப்பைப்
பெற முடியும். மாறாக அரசியல், பிரதேச வேறுபாடுகளை முன்னிறுத்தி இம்
மக்களுக்கு ஆதரவளிக்காத பட்சத்தில் அவர்கள் தனித்துவிடப்படுவர். இதன் மூலம்
அப்போராட்டமும் கவனிப்பற்றதாக்கப்படக் கூடும்.
ஜனாதிபதியின்
மேற்படி வர்த்தமானி பிரகடனமானது மிகவும் பாரதூரமான விடயமாகும். இது
அப்பகுதியில் காலாகாலமாக வாழ்ந்து வந்த மக்களின் குடியுரிமையைப்
பறிக்கின்ற செயலாகும். முஸ்லிம்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த ஒரு
ஜனாதிபதி இவ்வாறு முஸ்லிம்களின் பூர்வீக உரிமையைப் பறிக்கின்ற செயலில்
மிகத் தெளிவாக ஈடுபட்டிருக்கின்றமை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள
முடியாததாகும்.
இந்த
விவகாரத்தில், அப்பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம்
அரசியல்வாதிகள் தமது தனிப்பட்ட மற்றும் கட்சி அரசியலை முன்னெடுப்பதை
தவிர்த்து சகல அரசியல் தரப்புகளையும் ஒன்றுதிரட்டி போராட வேண்டியதும்
அவசியமாகும்.
அத்துடன்
இதனை அப்பகுதி அரசியல்வாதிகள் பார்த்துக் கொள்ளட்டும் என்று ஏனைய பிரதேச
முஸ்லிம் அரசியல்வாதிகள் வாளாவிருப்பதும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.
வடக்கில்
தமிழ் மக்கள் எவ்வாறு தமது காணிகளை மீட்பதற்கான சாத்வீக போராட்டங்களை
முன்னெடுத்தார்களோ, தமிழ் அரசியல்வாதிகள் எவ்வாறு அதற்கு ஆதரவளித்தார்களோ
அதே போன்று முஸ்லிம் அரசியல்வாதிகளும் முஸ்லிம் சிவில் சமூகமும் முசலி
மக்களின் போராட்டத்திற்கும் ஆதரவளிக்க முன்வர வேண்டும் என வினயமாகக்
கேட்டுக் கொள்கிறோம்.
- விடிவெள்ளி