Top News

வைரஸ் அபாயம் ; காத்தான்குடியில் நோன்பு நோற்று பிரார்த்தனை

File Image 

காத்தான்குடியில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண டெங்கு நோய் மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவும் நிலை தொடர்வதன் காரணமாக, அதிலிருந்து விடுபடும் நோக்கில் இன்று திங்கட்கிழமை காத்தான்குடி மக்கள்நோன்பு நோற்று பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர். 
காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் வேண்டுகோளுக்கிணங்கவே இவ்வாறு காத்தான்குடி மக்கள் நோன்பு நோற்றுள்ளனர்.

இது தொடர்பில் ஆத்மீக வழிகாட்டலும் விஷேட நோன்பு நோற்றலும் எனும் தலைப்பில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மௌலவி எம்.ஐ. அப்துல் கையூம் (ஷர்க்கீ), அதன் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.சீ.எம். றிஸ்வான் (மதனி) ஆகியோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

காத்தான்குடியில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண டெங்கு நோய் மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவும் நிலை தொடர்வதன் காரணமாக, அதிலிருந்து விடுபடுவதற்கான வழிவகைகள் பற்றியும், அத்துடன் எமது கஷ்ட நஷ்டங்களையும் எம்மைப் படைத்த அல்லாஹ்விடம் முறையிட்டு, அவனது உதவியையும் பெற்று, எமது வாழ்வை சீர்படுத்தவேண்டிய தேவையும் உள்ளது. 

இந்த வகையில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா திங்கட் கிழமை பொது மக்கள் அனைவரையும் சுன்னத்தான நோன்பினை நோற்கச் செய்து, திங்கள் பின்னேரம் 5.30 மணிக்கு  மக்களை ஒன்று சேர்த்து ஆத்மீக வழிகாட்டலுடன், காத்தான்குடி ஜாமிஉழ்ழாபிரீன் பெரிய மீரா ஜும்ஆ பள்ளிவாயல், மற்றும் புதிய காத்தான்குடி நூறாணியா ஜும்ஆப் பள்ளிவாயல் ஆகியவற்றில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வினை  ஏற்பாடு செய்வதெனவும் ஜம்இய்யா தீர்மானித்துள்ளது. 

எனவே, மேற்படி விடயத்தினை கவனத்திற்கொண்டு, திங்கள் இரவு பொது மக்கள் அனைவரும் சுன்னத்தான நோன்பினை நோற்று, திங்கள் பின்னேரம் 5.30 மணிக்கு காத்தான்குடி ஜாமிஉழ்ழாபிரீன் பெரிய மீரா ஜூம்ஆ பள்ளிவாயல், மற்றும் புதிய காத்தான்குடி நூறாணியா ஜும்ஆப் பள்ளிவாயல் ஆகியவற்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இப்தார் மற்றும் துஆப் பிரார்த்தனை நிகழ்வில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். 

எல்லாம் வல்ல அல்லாஹ் எமது கஷ்ட நிலையினைப் போக்கி ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ அருள் புரிவானாக எனவும் அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post