கட்டுகஸ்தோட்டையில் உள்ள முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான பிரபல மருந்து விற்பனை நிலையத்துக்குள் நுழைந்து பலவந்தமாக அங்கு வீடியோ படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் அந்த நிலையம் பற்றி தவறான தகவல்களை வெளியிட்டுள்ளனர். மஹா சொஹன் பலகாய எனும் பௌத்த இனவாத அமைப்கே கடந்த வெள்ளியன்று ஜும்ஆ தொழுகைக்கு நிறுவனத்தை மூடிக்கொண்டிருந்த போது இந்த அட்டகாசத்தை புரிந்துள்ளது.
இவர்களது இந்த செயலினால் ஊழியர்களுக்கு ஜும்ஆ தொழுகையில் பங்கேற்க முடியவில்லை. இந்த இயக்கத்தின் சார்பில் இரு பிக்குகளும் இளைஞரும் கடையினுள் பலவந்தமாக நுழைந்துள்ளனர். இந்த இரண்டு பிக்குமாரும் அவ் இயக்கத்தின் முக்கிய பிரமுகர்களாவர்.
இவர்களோடு சேர்ந்து ஔடத கட்டுப்பாட்டு நிறுவன அரச அதிகாரிகளும் வந்துள்ளனர். அரச அதிகாரிகள் வந்ததால் மூடிக் கொண்டிருந்த கடையை மீண்டும் திறந்து அவர்களுக்கு இடமளிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. இந்த அதிகாரிகள் நுழைந்ததோடு மஹா சொஹன் பலகாய அமைப்பும் உள்ளே நுழைந்து வீடியோ படங்களை எடுத்துள்ளது.
அதிகாரிகள் இந்த பரிசோதனை பற்றி எதுவும் அறிவிக்காத போதும் அனுமதியின்றி பலவந்தமாக உள்நுழைந்த மஹா சொஹன் அமைப்பு இங்கு காலம் கடந்த மருந்து இருந்ததாகவும் பாவனைக்கு உதவாத மருந்து இருந்ததாகவும் ஆபத்து விளைவிக்கும் மருந்து இருந்ததாகவும் கருத்து வெளியிட்டள்ளது.
இந்த இனவாத அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிராக அமைக்கப்பட்டதாகும். மத்திய மாகாணத்தின் பல இடங்களில் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளை அண்மைக்காலமாக செய்து வருகிறது. மத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த ஏக்கநாயக்க இதுபற்றி அண்மையில் குறிப்பிட்டு இவற்றின் செயற்பாடுகளை தடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
அரச ஊழியர்களும் வந்ததால் கடையை மீண்டும் திறக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. இதனால் ஊழியர்களின் ஜும்ஆ தொழுகை தடைப்பட்டது. இது யாப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான மதத்தை பின்பற்றும் உரிமைகளை மீறும் செயலாகும்.
அத்தோடு அரச ஊழியர்கள் குறிப்பிட்ட பலகாய எனும் இனவாத அமைப்புடன் சேர்ந்து வர வேண்டிய அவசியம் இல்லை. இது தவறான நடவடிக்கையாகும். எந்தவொரு தனிமனிதனுக்கோ, இயக்கத்திற்கோ, தனியார் இல்லத்திற்கோ, நிறுவனத்திற்கோ அனுமதியின்றி பலவந்தமாக நுழைய முடியாது. இதனை அதிகாரம் வழங்கப்பட்டுள்ள அதிகாரிகளும் பொலிஸாருமே செய்யலாம். இவ்வாறு தனியார் நுழைவது சட்ட மீறலாகும். இதுபற்றி பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லாவிடில் தொடர்ந்தும் நடந்து பாரிய விளைவுகளை ஏற்படுத்தலாம் என முஸ்லிம் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.