File Image : Nawalapitiya Mosque |
சிலோன் முஸ்லிம் விசேட செய்தியாளர்
நாவலப்பிட்டி பலந்தொட்ட தக்கியா பள்ளிவாசலுக்கு இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலினால் தக்கியாவின் இரண்டு கூரைத்தகடுகள் சேதத்துக்குள்ளாகியுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பலந்தொட்ட தக்கியா பள்ளிவாசலின் தலைவர் ஜி.சி.முபஷ்சிர் முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமிடம் முறைப்பாடு செய்துள்ளார்.இச்சம்பவம் பற்றி தக்கியா பள்ளிவாசலின் தலைவர் ஜி.சி.முபஷ்சிர் விளக்கமளிக்கையில்;
‘தொடர்ந்து பல மாதங்களாக தக்கியாவுக்கு கல்வீச்சு நடைபெறுகிறது. அதிகாலையிலே கற்கலால் தாக்கப்படுகின்றது. தக்கியாவைச் சூழ பெருமான்மையினத்தவர்களே வசிக்கிறார்கள். சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு தக்கியாவுக்கு அண்மையில் புத்தர் சிலையொன்றினை வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்கள்.
அதற்கான நிர்மாணப்பணிகளும் இடம்பெற்ற இச்சந்தர்ப்பத்தில் நாம் அல்லாஹ்விடம் துஆ கேட்டு நியாயம் வேண்டினோம். பின்னர் புத்தர் சிலை நிறுவுவது நிறுத்தப்பட்டது.பலந்தொட்ட ஜும்ஆ பள்ளிவாசலிலிருந்தும் சுமார் 2 கிலோ மீட்டருக்கு அப்பாலே தக்கியா அமைந்துள்ளது. இங்கு சுமார் 35 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்கின்றன.
20 வருட வரலாற்றினைக் கொண்ட இந்த தக்கியா அமைச்சர்கள் எம்.எச்.ஏ.ஹலீம், பைசர் முஸ்தபா ஆகியோரின் முயற்சியினால் 2 ½ மாதங்களுக்கு முன்பே முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டது.இப்பகுதியை ச் சேர்ந்த பௌத்த விகாரையின் குருமார்களுடன் இச்சம்பவம் தொடர்பில் கலந்துரையாடி சுமுக தீர்வு பெற்றுக் கொள்ளத் தீர்மானித்துள்ளோம். தக்கியாவை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும்படி துஆ பிரார்த்தனைகளை நடத்தி வருகிறோம் என்றார்.