சபையில் அமைச்சர் ஹிஸ்புல்லா கேள்வி
பேருவளை, அளுத்கம சம்பவங்கள் நிகழ்ந்து ஆயிரம் நாட்கள் கடந்த பின்னரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் வழங்காமலிருப்பது ஏன் என மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.ஏம்.ஹிஸ்புல்லா சபையில் கேள்வியெழுப்பினார்.
மூவர் கொலைசெய்யப்பட்டும் 15பேர் காயமடைந்து 280 பேர் பாதிப்படைந்த இந்த சம்பவத்தை முஸ்லிம்கள் மறக்கவில்லை என சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், அவர்களின் தரவுகள் அனைத்தும் தயாராகவிருக்கின்ற நிலையில் மேலும் தாமதமின்றி இழப்பீடுகளை உடன் வழங்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோரிடத்தில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டு எதிர்க்கட்சி ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த நாட்டின் பொருளாதார நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், நாட்டின் பொருளாதாரத்தினை பார்க்கையில் ஓர் இக்கட்டான நிலைமையில் தான் இருந்து கொண்டிருக்கின்றோம். நாட்டின் பொருளாதாரத்தினை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதென்றால் அதற்காக அனைவரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.
குறிப்பாக தற்போதைய சூழலில் கூட்டு எதிரணியினர் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு எதிர்ப்புக்களை வெளியிடுகின்றனர். போராட்டங்களை நடத்துகின்றனர். அவற்றை விடுத்து அனைவரும் நாட்டின் அபிவிருத்தியை கருத்திற்கொண்டு பொருளாதார மேம்பாட்டுக்காக ஒன்றுபடவேண்டும் என் இந்த சந்தர்ப்பத்தில் பகிரங்கமாக அழைப்பு விடுகின்றேன்.
இந்த நாட்டில் வடக்கு, கிழக்கு மக்கள் யுத்தத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான செயற்றிட்டங்கள் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அண்மையில் சாலாவ இராணுவ முகாமில் வெடிப்பு ஏற்பட்ட போதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
அவ்வாறிருக்கையில் இந்த நாட்டில் முஸ்லிம்கள் மீது அரங்கேற்றப்பட்ட மிக மோசமான வன்முறைச்சம்பவங்களாக பேருவளை, அளுத்கம வன்முறைகள் அமைகின்றன.
இதன்போது மூன்று உயிர்கள் பலியாகின. 15பேர் வரையில் படுகாயமடைந்தனர். 280 பேர்வரையில் பாதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்கான இழப்பீடுகள் இன்றுவரையில் வழங்கப்படவில்லை. இது வேதனைக்குரிய விடயமாகும்.
குறிப்பாக விடிவெள்ளிப் பத்திரிகையில் முஸ்லிம் சிவில் அமைப்பொன்றை மேற்கோள் காட்டி தலைப்புச்செய்தியொன்று வெளியிடப்பட்டிருக்கின்றது. அளுத்கம, பேருவளை சம்பவங்கள் நிகழ்ந்து ஆயிரம் நாட்கள் கடந்தும் தற்போது வரையில் இழப்பீடுகள் வழங்கப்படவில்லை. முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகள் அசமந்தமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உண்மையிலேயே இந்த நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு அந்த சம்பவங்களும் அடிப்படைக்காரணங்களாகின்றன. அவ்வாறான நிலையில் அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளை வழங்காமலிருப்பதற்கான காரணம் என்ன?
தரவுகள் அனைத்தும் திரட்டப்பட்டு அனைத்துமே தயாராகிவிருக்கின்ற போதும் அது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படாமைக்கு காரணம் என்ன? இந்த தாமதத்தினால் முஸ்லிம்களின் பிரதிநிதிகளாகிய நாம் பதில்சொல்லவேண்டிய கடப்பாட்டிற்குட்பட்டுள்ளோம்.
இந்த சபையில் பிரதமரும், நிதி அமைச்சரும் உள்ள இச்சமயத்தில் அந்த மக்களுக்கான இழப்பீட்டை உடன் வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கோருகின்றேன் என்றார்.