Top News

பொத்தானை பள்ளிவாசல் விடயத்தில் முன்னின்று உழைத்தவர்களுக்கு பாராட்டு



றிசாத் ஏ காதர்

சமூகத்தில் தீர்க்கப்படாது பல பிரச்சினைகள் புரையோடிப்போய்க்கிடக்கின்ற வேளையில் பொத்தானை பள்ளிவாசல் பிரச்சினையை தீர்த்துக்கொள்ளும் வகையில் உற்சாகமான முறையில் கருமமாற்றிய இப்பள்ளிவாசலின் நிருவாகிகள் விசேடமாக முறையில் பாராட்டப்படவேண்டியவர்கள். அது மாத்திரமன்றி இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதுக்கு ஸ்ரீ.ல.மு.காங்கிரஸின் தலைவர் மேற்கொண்ட முயற்சிகளை வெற்றி பெறச்செய்வதில் எமக்கு உற்சாகமூட்டும் வகையில் நடந்துகொண்ட அக்கரைப்பற்று வர்த்தகர் சங்கம், பொத்தானை விவசாய அமைப்பு ஆகியவற்றின் அங்கத்தவர்களும் பாராட்டுக்குரியர்வர்களே. என்றார் அக்கரைப்பற்று ஸ்ரீ.ல.மு.காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளரும், மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி.

அண்மையில் அக்கரைப்பற்று “பாஸ் பூட்” விருந்தினர் விடுதியில் பொத்தானை பள்ளிவாசல் நிருவாகத்தினர், வர்த்தகர் சங்கம், பொத்தானை விவசாய அமைப்பு ஆகியவற்றினால் பொத்தானை பள்ளிவாசல் விவகாரத்தில் முன்னின்று உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்ட விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அஷ்ஷேஹ் ஹனீபா மதனி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், பொத்தானை பள்ளிவாசலுக்கு போய்வர முடியாதவாறு தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தினால் எல்லைக்கற்கள் போடப்பட்டது. அங்கு போடப்பட்ட எல்லைக்கற்களை அகற்றும் பொருட்டு ஸ்ரீ.ல.மு.காங்கிரஸின் தேசியத் தலைவரும் நகர அபிவிருத்தி நீர்வழங்கல் அமைச்சருமான றஊப் ஹக்கீமுக்கு தெரியப்படுத்தியிருந்தேன். 

மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் அரச அதிகாரிகளினால் இழுத்தடிப்புச் செய்யப்படுகின்ற இக்கால கட்டத்தில் எவ்வித தாமதங்களுமில்லாமல் இப்பிரச்சினையை தீர்த்துவைக்க முன்னின்று பணியாற்றி தேசியத் தலைவரும், அமைச்சருமான றஊப் ஹக்கீம் இரட்டிப்பு நன்றிக்குரியவரே. என்னைப் பொறுத்த வரையில் “நோயாளி விதியாளியாகவிருந்தால் பரிசாரி பேராளியாவான்” என்பதற்கிணங்க இவ்விடயம் இனிதே முடிவுற வேண்டும் என்ற இறை நாட்டமிருந்ததால் மிக இலகுவாக முடிவுற்றுள்ளது. மேலும் இவ்விடயம் இலகுவாக முடிவுற வேண்டும் என முயற்சித்தவர்களுள் முதலாமவன் என்கின்ற அடிப்படையில் மிக்க சந்தோசமடைகின்றேன் என தனது உரையில் குறிப்பிட்டார்.
மேலும் இந்நிகழ்வானது டொக்டர் சித்தீக் தலைமையில் இடம்பெற்றதுடன் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸின் அக்கரைப்பற்று ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். சமகாலத்தில் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பாக கட்சி ஆதரவாளர்களினால் பல்வேறு வகையான கேள்விகள் கேட்கப்பட்டதுடன் அமைப்பாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா மதனியினால் அவற்றுக்கான பதில்களும் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
Previous Post Next Post