மட்டக்களப்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய மதுபான உற்பத்தி நிலையத்தின் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் சபையில் குற்றம்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழு இலஞ்சம் தொடர்பான திடீர் சோதனைகள், முற்பணக் கணக்கின் வரையறைகளில் திருத்தம் மேற்கொள்ளல் தொடர்பான சட்டமூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஆட்சியாளர்கள் இலஞ்சம் பெறுகின்றார்கள். ஊழலில் ஈடுபடுகின்றார்கள். இவை அனைத்தும் எமது ஆட்சியில் இல்லாதொழிக்கப்படும் என்பதற்கு அப்பால் இலஞ்சம் ஊழல் இடம்பெறுவதற்கும் இடமளிக்கப்படமாட்டாது என கூறியே ஆட்சியில் அமர்ந்தார்கள். நல்லாட்சி நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கூறினார்கள். ஆனால் நல்லாட்சியிலும் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்ந்தும் இடம்பெறுகின்ற கவலைக்கிடமான நிலைமையே உள்ளது.
நாட்டில் நல்லாட்சி முன்னெடுக்கப்படுகின்றது என்று கூறப்பட்டாலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கும்புறுமூலையில் சட்டத்திற்கு முரணாக மதுபான உற்பத்தி நிலையமொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
இந்த மதுபான உற்பத்தி நிலையத்தின் தவிசாளர் யார் எனப் பார்க்கையில் இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் மருமகனான அர்ஜுன் அலோசியஸே காணப்படுகின்றார்.
இந்த உற்பத்தி நிலையத்தினை நிர்மாணிப்பதற்காக இவர் 230 கோடியை முதலீடு செய்துள்ளதோடு இந்திய நிறுவனமொன்று 220 கோடியை முதலீடு செய்துள்ளது. மொத்தமாக 450 கோடி ரூபா முதலீட்டில் இந்த உற்பத்தி நிலையம் ஸ்தாபிக்கப்படுகின்றது.
மோசடிக் குற்றச்சாட்டில் பெயரிடப்பட்டுள்ளவர்கள் இவ்வாறு முதலீடுகளை மேற்கொள்வதற்கு கோடிக்கணக்கான பணம் எங்கிருந்து கிடைக்கின்றது. குற்றச்சாட்டில் உள்ளவர்கள் இவ்வாறான முதலீடுகளை செய்வதற்கு எவ்வாறு அனுமதியளிக்கப்படுகின்றது.
மேலும், கிழக்கு மாகாண சபையிலும், மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்திலும் இந்த நிர்மாணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு இதனை உடனடியாக நிறுத்துவதற்கான தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது. அத்தீர்மானத்தை பிரதேச சபை செயலாளருக்கு அனுப்பி நடைமுறைப்படுத்துமாறு கோரப்பட்டள்ளது.
இருப்பினும் அத்தீர்மானம் அறிவிக்கப்பட்டபோதும் நிர்மாணப்பணிகள் தொடர்ந்தவண்ணமுள்ளன. இவற்றுக்கிடையில் இந்த நிர்மாணப்பணியை மக்கள் விரும்பவில்லை. அவர்களின் பிரதிநிதிகளாக நாம் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் எம்மை இணங்கிச் செல்ல வைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
மிகவும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் பிறிதொரு அக்கட்சி ஆதரவாளரும் இந்த நிர்மாணத்திற்கு தடையாக இருக்க வேண்டாமென்று எம்மோடு பேரம்பேச முயல்கின்றார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 20மதுபானசாலைகளே சட்டத்தின் பிரகாரம் காணப்படமுடியும். அவ்வாறிருக்கையில் 2009ஆம் ஆண்டு மட்டக்களப்பில் 47மதுபான சாலைகள் காணப்பட்டன. தற்போது மட்டக்களப்பில் 58மதுபானசலைகள் காணப்படுகின்றன. இவற்றுக்கு யார் அனுமதி அளித்தது? எவ்வாறு அனுமதிகள் வழங்கப்பட்டன.
விடுதலைப்புலிகளின் காலத்தில் அவர்களின் பகுதிகளில் எந்தவொரு மதுபானசாலைகளும் இருக்கவில்லை. ஆனால் தற்போது அங்கெல்லாம் புதிது புதிதாக மதுபானசாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவற்றுக்கெல்லாம் யார் அனுமதி வழங்கியது. அண்மையில் மட்டக்களப்பில் இரண்டு மதுபானசாலைகளை மூடுவதற்குரிய நடவடிக்கைகளை நான் மேற்கொண்டபோது இரண்டு நபர்கள் என்னிடத்தில் பேரம்பேசினார்கள். இவ்வாறு என்னிடத்தில் பெரிய தொகை பணம் வழங்கத் தயாராக இருக்கின்றார்கள் என்றால் ஒவ்வொரு அதிகாரிகள், அரசியல்வாதிகளிடத்திலும் எவ்வளவு பணத்தை பின்கதவால் வழங்குவார்கள் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.
ஆகவே, இலஞ்சம் மற்றும் ஊழலை முற்றாக ஒழிப்பதாக கூறும் நல்லாட்சி யாளர்கள் உடனடியாக இவ்வாறான மக்களுக்கு விரும்பாத விரோதமான விடயங்களை நிறுத்தவேண்டும் என்றார்.
Courtesy : Vidivelli