அமைச்சர்
றிஷாட் காலக் கெடு விதித்து அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்ய தயாராக
வேண்டும் என முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.
வில்பத்து வனப் பிரகடனம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வில்பத்துவில்
முஸ்லிம்களின் வாழிடங்களை உள்ளடக்கி ஒரு லட்சம் ஏக்கர் காணியை வன
இலாக்காவுக்காக ஒதுக்கி வெளியிடப்பட்டுள்ள அரசிதழ் அறிவிப்பை மீளப்
பெறுமாறு கோரி ஒரு காலக் கெடுவை விதித்து இக்காலத்துள் அந்த அறிவிப்பு
திரும்பப் பெறப்படாவிட்டால், தான் அமைச்சுப் பதவியைத் துறப்பேன் என்று
பகிரங்கமாக அமைச்சர் றிஷாட் அறிவிக்க வேண்டும். மீளப் பெறாவிட்டால்
காலக்கெடு முடிந்தவுடன் பதவித் துறப்புக் கடிதத்தை ஜனாதிபதிக்கு
அனுப்பிவிட்டு நாடாளுமன்றத்தின் பின் வரிசை ஆசனத்தில் அமர வேண்டும்.
இந்த
இராஜினாமா முஸ்லிம் சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிப்பைத்
தெரிவிக்க எடுக்கப்பட்ட கொள்கை ரீதியான முடிவாக அமையுமே அன்றி, அரசை
எதிர்ப்பதாக அமையாது. எனவே அவரது கட்சியைச் சேர்ந்த பிரதியமைச்சரோ அல்லது
வேறு எவருமோ இராஜினாமாச் செய்ய வேண்டியதில்லை.
தலைவர்
அஷ்ரஃப் தனது பாராளுமன்ற உறுப்புரிமையையே 1994 இல் ஒரு சவாலுக்காக
இராஜினாமாச் செய்தார். 1998 இல் என்று நினைக்கிறேன் அமைச்சுப் பதவியை
இராஜினாமாச் செய்த கடிதத்தை அன்றைய ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு அவரே
நேரடியாகக் கொண்டு கையளித்து விட்டு, அரச பங்களாவை விட்டு குடும்பத்தோடு
வெளியேறி தனது சொந்த தொடர்மாடி வீட்டில் குடியேறினார். மேலும் அரச
வாகனங்களைக் கைவிட்டு தனது சொந்த வாகனத்தை உபயோகித்தார். தலைவரின்
அதிருப்தி அம்மையாரால் சரி செய்யப்பட்ட பின் பதவியைத் தொடர்ந்தார்.
சத்திரிக்காவினால் நமது சமூகம் மற்றும் நமது கட்சி சார்ந்த விடயங்கள்
கணக்கில் எடுக்கப் படாமல் விடப்பட்ட வேளை இரண்டு தடவைகள் காரசாரமான பல
பக்கக் கடிதங்களை ஜனாதிபதிக்கு வரைந்து தனது அமைச்சுப் பதவியை தூசென தூக்கி
வீசத் தயாரானார்.
றிஷாட்
பதியுதீன் இவ்வாறு செய்யத் துணிந்தால் உண்மையான மக்கள் பிரதிநிதி என
நிரூபிக்கும் வாய்ப்புக் கிடைக்கும், இவரது கட்சியில் வரப்பிரசாதங்களுக்காக
மட்டும் இருப்போர் அடையாளம் காணப்படுவர், எதிர்க் கீரைக்கடைகள் மகிழ்ச்சி
அடைந்தாலும் அவற்றின் தலைமைகள் செல்வாக்கு இழந்து "தள்ளாடும்", முஸ்லிம்
சமூகத்தின் அரசியல் தலைவர்கள் பதவி ஆசை மட்டுமே கொண்டவர்கள் என்று நீண்ட
காலமாக நம்பி வரும் ஏனைய சகோதர இனங்களின் அபிப்பிராயம் மாறும், மீண்டும்
முஸ்லிம் சமுதாயத்துக்கு அரசியலில் பேரம் பேசும் சக்தி அதிகரிக்கும்,
அழிந்து போன முஸ்லிம் தனித்துவ அரசியல் முத்திரை நம் சமூகம் எனும்
அஞ்சலுறையில் ஆழப் பதிக்கப்படும்.இவை மட்டுமல்லாது ஒரு முஸ்லிம் கட்சித்
தலைவர் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போதோ, அல்லது ஒர் அரசாங்கத்தை
வீழ்த்துவதற்கான வேறு எந்த சக்தியினது நிகழ்ச்சி நிரலுக்காகவோ அன்றி தமது
சமூக நலனுக்காக பதவி துறந்த ஒரு வரலாறு நீண்ட காலத்தின் பின் மீண்டும்
எழுதப்படும். இவ்வாறு இன்னும் பல சமூக நலன்கள் ஏற்படும். அகில இலங்கை
மக்கள் காங்கிரஸ் தூய்மைப்படவும் வாய்ப்புகள் அதிகம்.
இல்லாவிட்டால்
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அனைவரும் குற்றவாளிகள்.ஆனாலும் 'ஒருவரே'
அகப்பட்டுள்ளார் என்ற முஸ்லிம் இளைஞர்களின் அபிப்பிராயம் தொடர்ந்தும்
இலங்கை அரசியலில் தொங்கிக் கொண்டே இருக்கும்.
இந்த எனது பார்வையை நான் ஒரு சுயாதீனமான அரசியல் அவதானி என்ற அடிப்படையில் மாத்திரமே பதிவிடுகிறேன்.