Top News

களங்கம் துடைக்குமா நல்லாட்சி!



அ . அஹமட்

அளுத்கமை விவகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒன்றல்ல என பல்வேறு வழிகளிலும் நிரூபிக்க அவரின் தரப்பு முயன்ற போதும் அவைகள் அனைத்தும் தோல்வியையே  சந்தித்து வருகின்றன.

ஆனால்,அளுத்கமை விவகாரத்தில்  நீதியை நிலை நாட்டுவதிலும் நஷ்ட ஈடு  வழங்குவதிலும்  நல்லாட்சி காட்டும் அசமந்த போக்கு அளுத்கம விவகாரம் மஹிந்த ராஜபக்‌ஷவை சிக்கலில் மாட்டிவிட  திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட செயல் என்ற சந்தேகம் முஸ்லிங்கள் மத்தியில் வலுவாகி வருகிறது.

இதன் வெளிப்பாடாக முஸ்லிம்களின் அதீத பங்களிப்புடன் அமைக்கப்பட்ட  இவ்வாட்சிக்கு எதிராக முஸ்லிம்களிடமிருந்து பல கோணங்களில் இருந்தும் எதிர்ப்புக்கள் கிளம்புவதையும்,அவ் விவகாரம் தொடர்பில் முஸ்லிம்கள் சந்தேகம் கொண்டு வினா எழுப்புவதையும்,இது யாரால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்ற வகையிலான ஆய்வுகளை மேற்கொள்வதை அவதானிக்க முடிகிறது.இது தொடர்பான ஆய்வுகளும்,வினாக்களும் முஸ்லிம் சமூகத்திற்கு  சமூகத்திற்கு மேலும் தெளிவை ஊட்டும் என்பதில் ஐயமில்லை.

அளுத்கமை கலவரமானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாட்டில் இல்லாத போது முஸ்லிம்களை அவரிடமிருந்து பிரிக்க செய்யப்பட்ட சதி நடவடிக்கை என்பது தற்போது நல்லாட்சி என கூறிக்கொள்ளும் அரசு அளுத்கமை கலவரத்திற்கு  நீதியை பெற்றுக்கொடுக்காமல் இருப்பதில் இருந்து தெளிவாகிறது.

அலுத்கமை கலவரம் இடம்பெற்ற போது வெளிநாட்டில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாடு திரும்பியதும் எங்கும் செல்லாது நேரடியாக பேருவளைக்கே சென்றார்.அங்கு அண்ணளவாக 400 கோடி ரூபாய் வரையில் சேதங்கள் ஏற்பட்டிருந்ததாக மதிப்பிடப்பட்டது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அங்கு சேதமாக்க வீடுகளை முன்னர் இருந்ததை விடவும் தரமிக்க வகையில் மிக விரைவாக செய்துகொடுக்க நடவடிக்கை எடுத்தார்.இவ் விடயத்தில் அவரை யாருமே குறை கூற முடியாது.இவ் விடயத்தில் இன்று அப்பகுதி மக்கள் அவரை புகழ்வதையே அவதானிக்க முடிகிறது.ஆனால் அப்பகுதி மக்கள் தவிர்ந்து வேறு பகுதி மக்களே உண்மையை அறியாது விமர்சித்து கொண்டிருக்கின்றனர்.அண்மையில் இக் கலவரம் நடைபெற்ற இடங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சென்ற போது அவருக்கு அப் பகுதி மக்கள் பலத்த வரவேற்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்கள் வாக்களித்த தோற்றுவித்த  நல்லாட்சி முஸ்லிம்களை கணக்கில் எடுக்காமல் இருக்கும் போது முஸ்லிம்களின் அதீத பங்களிப்பின்றி ஆட்சியமைத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முஸ்லிம்கள் தொடர்பில் இந்த அளவு கரிசனை கொள்கின்றமை பாராட்டுக்குரிய விடயம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை..

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் காலத்தில் அளுத்கமை  சம்பவத்தின் போது சேதமாக்கப்பட்ட  பொருட்களின் மதிப்பீடு அந் நேரத்தில் புணர்வாழ்வு அமைச்சராக இருந்த அநுர பிரியதர்சன யாப்பாவால் மேற்கொள்ளப்பட்டது.அது சுமார் இருபது கோடியென மதிப்பிடப்பட்டமை சுட்டிக் காட்டத்தக்கது.இந்நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் கைகளை விட்டும் ஆட்சி நழுவியது.அவரால் திட்டமிட்டபடி அதனை செய்ய முடியவில்லை.ஆனால் அதனை செய்ய வேண்டிய கடமை இவ்வாட்சிக்கே உள்ளது.

இவ்வாட்சி அமைய  பிரதான திருப்பு முனையாக அமைந்த இந்நிகழ்வு பற்றி இவ்வாட்சி சிறிதேனும் கவனம் செலுத்தவில்லை.இவ்வாட்சி முஸ்லிம்களை கறி வேப்பிலையாக பயன்படுத்துகிறதென்பதை அறிய இதனை விட என்ன சான்று வேண்டும்.அங்கு மரணித்த மூவருக்குமாருமான இழப்பீடுகளையாவது இவ்வரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சி நீடித்திருந்தால் நிச்சயம்  எஞ்சியிருந்த இழப்பீடுகள் அவர் மதிப்பிட்டதற்கமைய வழங்கப்பட்டிருக்கலாம். களங்கம் துடைக்கவாவது அவர் இழப்பீடுகளை வழங்கியிருப்பார்.

இலங்கை முஸ்லிம்களின் இன்றைய நிலை அரசனை நம்பி புரிசனை இழந்த கதையாகவே உள்ளது.


Previous Post Next Post