முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள வட்டி வங்கிகளுக்கு இடத்தினை வாடகைக்கு விடுதல் பற்றி எமது தஹ்வா பக்கத்தில் ஒரு பத்திக்காக மௌலவி பர்ஹான் (பலாஹி) வழங்கிய செவ்வியினை எழுத்து வடிவில் சிறு பத்தியாக தருகிறோம்.
வட்டி என்பது குறித்தி விடயம் கீழே தரப்பட்டுள்ள அதே வேளை இந்த கட்டிடங்களை வட்டி வங்கிகளுக்கு வாடகைக்கு விடுவதும் வட்டிக்கு துணைபோவதே என்று அவர் குறிப்பிட்டார். அதனால் வரும் பணம் ஹராமாகவே இருக்கும்.
வட்டி என்றால் என்ன ?
வட்டி என்பது நம்முடைய பணம் ஒருவரிடம் எவ்வளவு காலம் இருக்கிறதோ அதற்க்கு ஏற்ப ஆதாயம் தேடுவது. வேறு வார்த்தையில் வட்டியை விளக்குவதாக இருந்தால் நாம் ஒருவருக்கு கொடுக்கும் கடனை திருப்பி வாங்கும்போது அவர் எத்தனை காலம் நம் பணத்தை அவர் வைத்திருக்கிறார் என்பததை கணக்கிட்டு அதற்க்கு தனியாக வசூளிப்பதே வட்டியாகும்.நம்முடைய பணம் ஒரு குறிப்பிட்ட காலம் ஒருவரிடம் இருக்கிறது என்பதற்காக அவரிடமிருந்து ஒரு தொகையை தனியாக வசூலிப்பது நிச்சயமாக அநியாயமாகும்.ஒருவனுடைய ஏழ்மையையும் பணத்தாசையையும், கஷ்டமான நேரத்தை பயன்படுத்தி அவனுக்கு ஒரு தொகையை கொடுத்து அவன் எவ்வளவு காலம் கடன் பட்டு இருக்கிறானோ அந்த காலத்திற்கு ஏற்ப ஒரு தனி தொகையை வசூலிப்பதில் எந்த ஒரு ஞாயமும் இல்லை. இந்த அடிப்படையில் இஸ்லாம் வட்டியை முழுமையாக தடுக்கிறது.ஆனால் இன்றைய சூழ்நிலையில், அண்டா குண்டாவில் ஆரம்பித்து நகை, வாகனம்,வீடு கடைசியில் நாட்டையே அடகு வைத்து விடுகிற அளவிற்கு வட்டி எங்கும் பெருகி இருக்கிறது.
வட்டிக்கும் வியாபாரத்திற்கும் உள்ள வேறுபாடு
யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.(அல்குர்ஆன் 2:275)
இஸ்லாத்தின் வட்டி
வட்டி வாங்குவதையும் கொடுப்பதையும் இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.எந்த குற்றத்திற்கும் இல்லாத அளவிற்கு வட்டியை, அல்லாஹ்வுடன் போர் செய்யும் ஒரு காரியமாக அல்லாஹ் தன் திருமறையிலே மனிதர்களுக்கு எச்சரிக்கிறான்.
'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)
வட்டி பெரும் பாவம்
பெரும்பாலான மக்கள் வட்டி வாங்குவதால் ,வட்டி இஸ்லாத்தில் தடுக்கப் படவே இல்லை அல்லது இஸ்லாம் வட்டியைப் பற்றி பேசவே இல்லை என்பதைப் போல் தோற்றம் உண்டாக்கி விட்டனர்.பெற்றோர்கள் வட்டி வாங்கக் கூடியவர்களாக இருக்கும்போது அவர்களுடைய குழந்தைகளுக்கு வட்டி தவறு என்று எப்படி சொல்வார்கள்?பெரும்பாலான மக்கள் செய்வதால் இஸ்லாத்தில் வட்டி அனுமதிக்கப் பட்டதாக ஆகாது என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள், 'பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்து விடுங்கள்' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவை யாவை?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதும்ட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்களின் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும்பாவங்கள்)' என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலி)
புஹாரி 6857
வட்டியினால் வந்த செல்வதில் அல்லாஹ்வின் அருள் இருக்காது என்பதை அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு நமக்கு எச்சரிக்கின்றார்கள்.
அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.(அல்குர்ஆன் 2:276)
(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.(அல்குர்ஆன் 30:39)
வட்டியும்,மறுமையும்.
மறுமையில் வெற்றி பெறுவதே ஒவ்வொரு முஸ்லிமின் நோக்கமாக இரக்க வேண்டும் .வட்டி வாங்கியவர்கள் மறுமையில் துன்புறுத்தும் வேதனைக்கு உட்படுத்தப் படுவார்கள் என்று திருக் குர்ஆனும் நபி(ஸல்) அவர்களின் போதனைகளும் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்.(அல்குர்ஆன் 4:161)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்த தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றிருந்தார். ஆற்றின் நடுவில் இன்னொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்து நின்றிருந்தார். ஆற்றிலே உள்ளவர் வெளியேற முனையும்போது. அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும் போதெல்லாம் இவர் அவரின் வாயில் கல்லை எறிய. அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்!
"அவர் யார்?' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) கேட்டேன். அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்!" எனக் கூறினார்கள்."
அறிவிப்பாளர் : ஸமுரா(ரலி)
புஹாரி 2085
வட்டி சாபக்கேடு.
வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும், அதை எழுதிக் கொடுப்பவர்களையும், அதன் இரு சாட்சிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (3258)
பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள். மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஜுஹைஃபா(ரலி)
புஹாரி 5347
அல்லாஹ் கூறுகிறான்:
விசுவாசம் கொண்டோரே! அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள்! மேலும் நீங்கள் உண்மையாக விசுவாசம் கொண்டோராக இருப்பின் வட்டியில் (எடுத்தது போக) எஞ்சியிருப்பதை (எடுக்காமல்) விட்டுவிடுங்கள். ஆகவே (கட்டளையிடப்பட்டவாறு) நீங்கள் செய்யாவிடின் அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் போரிடுவதாகப் பிரகடனம் செய்துவிடுங்கள். (அல்குர்ஆன் 2:278-279)
இறை நம்பிக்கையாளர்களே..! பல மடங்காக பெருகும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். வெற்றிப் பெறுங்கள். (அல் குர் ஆன் 3:130)
(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்ல. (அல் குர்ஆன் 30:39).
வட்டியின் விபரீதங்களை அறிந்து கொண்டே அதன் ஒரு திர்ஹத்தை உண்பது 36 தடவை விபச்சாரம் செய்வதை விட மிகக் கடுமையான குற்றமாகும். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா(ரலி) நூல்: அஹமத்)
வட்டி பணக்காரன், ஏழை என்ற வித்தியாசமின்றி அனைவருக்கும் அனைத்துச் சூழ்நிலையிலும் ஹராமாகும். எத்தனையோ பணக்காரர்கள் வட்டியின் காரணத்தினால் அனைத்தையும் இழந்து -ஓட்டாண்டி- பரதேசி- ஆயினர். நம் முன்னே நடைபெறும் எத்தனையோ நிகழ்ச்சிகள் இதற்கு சாட்சிகளாக உள்ளன. வட்டியின் குறைந்த பட்ச விபரீதம் யாதெனில் பொருளாதரத்தின் பரகத் -அபிவிருத்தி- அழிக்கப்பட்டுவிடும். அதிக பொருள் இருந்தாலும் சரியே!
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: வட்டியினால் ஈட்டப்பட்ட பொருளாதாரம் -அது அதிகமாக இருந்தாலும் சரியே- நிச்சயமாக அதன் முடிவு மிகவும் கஷ்டத்திலேயே முடியும். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத்(ரலி) நூல்: அஹமத்)
வட்டியில் குறைந்த தொகை அதிக என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது. அனைத்தும் ஹராமானவையே! வட்டியை உண்டு வாழ்ந்தவன் மறுமை நாளில் கப்ரிலிருந்து எழுப்பப்படும்போது ஷைத்தானால் தீண்டப்பட்டவன் எழுந்திருப்பதைப் போன்றே எழுந்திருப்பான்.
இது மிகப்பெருங்குற்றமாக இருந்தாலும் இதிலிருந்து விடுபட அதற்குரிய பாவமன்னிப்பு முறையை அல்லாஹ் விவரித்துக் கூறுகிறான்:
மேலும் நீங்கள் (தவ்பாச் செய்து) மீண்டுவிட்டால் உங்கள் செல்வங்களின் அசல் தொகை உங்களுக்கு உண்டு. நீங்கள் (அதிகமாக வாங்கி கடன் பட்டோருக்கு) அநீதி செய்யாதீர்கள். (அவ்வாரே) நீங்களும் (மூலத் தொகையைப் பெற்றுக் கொள்வதிலிருந்து) அநீதி செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:279)
வட்டித் தொழிலின் உரிமையாளர், அதன் பங்குதாரர், அதற்கு உதவுபவர், அதற்கு சாட்சி சொல்பவர் ஆகிய அனைவரும் நபி(ஸல்)அவர்களால் சபிக்கப்பட்டவர்களே!
வட்டி உண்பவன், அதனை உண்ணக் கொடுப்பவன், அதனை எழுதுபவன், அதன் இரு சாட்சியாளர்கள் ஆகிய அனைவரையும் நபி(ஸல்)அவர்கள் சபித்தார்கள். மேலும் இவர்கள் அவனைவரும் -தண்டனையால்- சமமானவர்களே! என்றும் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம்)
இந்த ஹதீஸின் அடிப்படையில் வட்டி கணக்கு எழுதுவது, அதை சரிபார்ப்பது, வாங்கிக் கொடுப்பது, பெற்றுக் கொள்வது, அனுப்புவது, பாதுகாப்பது.. இது போன்ற வட்டியுடன் தொடர்புடைய அனைத்துச் செயல்களும் ஹராம் ஆகும்.
ஹலாலும் தெளிவானது - ஹராமும் தெளிவானது இரண்டுக்கும் இடைப்பட்ட சந்தேகமானவையும் உண்டு. மனிதர்களில் அனேகமானோர் அதை அறியமாட்டார்கள். எவர் சந்தேகமானதிலிருந்து விலகிக் கொள்கிறாரோ அவர் தன்னையும் தன் மார்க்கத்தையும் பாதுகாதுக் கொண்டவராவார்' என்பது நபி மொழி. (புகாரி)
இந்த நபிமொழி முன் வைக்கும் கருத்து என்ன என்பதை நாம் ஆழமாக சிந்தித்து விளங்க வேண்டும்.
இஸ்லாத்தில் ஹராம், ஹலால் என்ற இரு நிலைகள் மட்டுமே உள்ளன அதை கடந்து எதுவுமில்லை என்று யாராவது புரிந்துக் கொண்டால் அவர்களுக்கு மறுப்பு இந்த செய்தியில் உள்ளது.
நபி(ஸல்) தூத்துவ பணியை செய்துக் கொண்டிருந்த காலத்தில் அன்றைய காலத்திற்குத் தேவையான அனைத்து சட்டங்களும் 'தெளிவாக' அறிவிக்கப்பட்டன. ஹராமோ - ஹலாலோ இரண்டையும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு அன்றைய மக்கள் விளங்கினார்கள். எது ஒன்றையும் சந்தேகம் கொள்ளும் நிலையில் அந்த மக்கள் இல்லை என்றால் 'இரண்டுக்கும் இடைப்பட்ட சந்தேகமானவையும் உண்டு' என்று நபி(ஸல்) எதைக் குறிப்பிட்டார்கள்? அன்றைக்கு அந்த நிலை இல்லை என்றாலும் பிந்னையக் காலத்தில் இத்தகைய நிலைகள் உருவாகலாம் என்பதையே நபி(ஸல்) முன் குறிப்பாக்கியுள்ளார்கள் என்பதை விளங்கலாம்.
எனவே அல்லாஹ் நம்மைப்பாதுகாப்பானாக.!
இக்கொடிய வேதனையிலிருந்து நம்மை காப்பாற்றுவானாக.!
ஹலாலாக உழைத்து ஹலாலை சாப்பிடக்கூடிய மக்களாக நம்மை மாற்றுவானாக.!
உயர்ந்த சுவர்க்கத்தில் உயர்ந்த பதவியில் இருப்பதற்ரு அருள் புரிவானாக.!
ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.