காப்பக படம்: இலங்கை முஸ்லிம் தாயும் மகளும் - டெய்லி மெயில் UK |
இலங்கை முஸ்லிம்கள் தமக்கென்றொரு ஆடைக் கலாசார பாரம்பரியத்தை பின்பற்றாது அரபு நாடுகளினதும் முஸ்லிம் நாடுகளினதும் ஆடைக் கலாசாரத்தை பின்பற்றுவதுதான் அடுத்த மதத்தவர்கள் மத்தியில் தவறான கண்ணோட்டங்கள் ஏற்படக் காரணம் என பிரபல சிங்கள மொழி மூல இஸ்லாமிய பிரசாரகர் அன்வர் மனாதுங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிறப்பில் பௌத்தரான இவர் பின்னர் கிறிஸ்தவ மதத்தை தழுவி போதகராகவும் கடமையாற்றினார். எனினும் பின்னர் இஸ்லாமிய மார்க்கத்தை தழுவிக் கொண்டதுடன் இஸ்லாம் தொடர்பில் சிங்கள மக்களுக்கு விளக்கங்களையும் வழங்கி வருகிறார்.
அவர் குறித்த நேர்காணலில் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் முஸ்லிம்களில் ஒரு தரப்பு கலாசாரத்தை மாற்றுகிறது. உதாரணத்துக்கு சம்பவமொன்றினைக் குறிப்பிட முடியும். கட்டாருக்கு வேலைவாய்ப்பு பெற்று பெற்று மௌலவி ஒருவர் இலங்கையிலிருந்து வந்தார். அவர் வரும் போது ஜுப்பாவும், அதனுடன் கூடிய நீள காற்சட்டையும் அணிந்திருந்தார். அவர் முதல் மாதம் சம்பளம் பெற்றதும் தனது உடையை மாற்றிக் கொண்டார். முதல் மாத சம்பளத்தில் கட்டார் நாட்டவர் அணியும் உடை வாங்கி அணிந்தார். ஏன் இலங்கையிலிருந்து அணிந்து வந்த உடையை மாற்றினீர்கள் என்று கேட்டேன். இலங்கையில் அணிந்தது பட்டானி (பாகிஸ்தான்) ஆடை என்றார். அப்படியென்றால் இலங்கையில் பாகிஸ்தான் ஆடையல்லவா அணியப்படுகிறது. மத்ரஸாக்களிலும் இங்கே இவ்வாறான ஆடையையே மாணவர்கள் அணிகிறார்கள்.
இவர்கள் இருப்பது இலங்கையில், அணிவது பாகிஸ்தான் உடை. அந்த மௌலவி கட்டாரில் இருந்து இலங்கை திரும்பினார். மீண்டும் அதே உடையுடனே வந்தார். இது தான் சுன்னா என்று அவர் நினைக்கிறார்.
பெண்களும் இப்படித்தான். அதிகம் மாறி வருகிறார்கள். பெண்கள் கறுப்பு நிற அபாயாதான் அணிய வேண்டும் என்ற நியதியில்லை. இதனை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். இவ்வாறு ஆடை கலாசாரம் மாற்றமடைவதால்தான் இனவாதிகள் முஸ்லிம்கள் இலங்கையை அரபு கொலனியாக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்துகிறார்கள்.
இலங்கையில் முஸ்லிம்களும் சிங்களவர்களும் பல நூற்றாண்டு காலத்துக்கு முன்பு ஆடை கலாசாரத்தில் வேறுபாடுகள் இருக்கவில்லை. ஆனால் இன்று பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. சிங்களவர்கள் மாத்திரமல்ல முஸ்லிம்களும் மேலைத்தேய கலாசாரத்துக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள்.
1500 ஆம் ஆண்டு ரொபட் நொக்ஸ் என்ற ஆங்கிலேயர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இலங்கை மக்களை நேரில் கண்டு அதனை எழுதியுள்ளார். அவர் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகம் ‘எதா ஹெலதிவ’ என்று சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
அவர் தனது புத்தகத்தில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார். ‘சிங்களவர்கள் 6 அங்குல நீள தாடி வைத்திருந்தார்கள். அவர்கள் சாரம் (லுங்கி) மாத்திரம் அணிந்திருந்தார்கள். மேலாடை அணிந்திருக்கவில்லை. முஸ்லிம்களும் இவ்வாறே ஆடை அணிந்திருந்தார்கள். சிங்களப் பெண்கள், மற்றும் முஸ்லிம் பெண்கள் மத்தியிலும் ஆடை விவகாரத்தில் வேறுபாடு காணப்படவில்லை.
முஸ்லிம்களின் சிலர் எமது தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நிற்பதில்லை. நமோ…. நமோ…. என்று கூறுவது சிர்க் என்கிறார்கள். இஸ்லாத்தில் எழும்பி நிற்பது வணக்கமல்ல. எஹுதியின் உடல் தகனத்துக்காக எடுத்துச்செல்லப்பட்டபோது கூட நபிகள் நாயகம் அவர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள். தேசிய கீதத்தில் நமோ… நமோ… மாதா என்ற சொற்களைத் தவிர்த்து எமக்கு தேசிய கீதம் இசைக்கலாம் அல்லவா?-
சிலர் ‘ஆயுபோவன்’ என்று சொல்ல வேண்டாம். என்கிறார்கள். இது தவறு. இவ்வாறு நினைப்பதே எமக்குள் உள்ள இடைவெளியை விரிவுபடுத்துகிறது.
பள்ளிவாசல் நிர்மாணிக்கப்படுவது ஒரு வரையறைக்குள்ளாக்கப்பட வேண்டும். இதற்கென அரசு சட்டமொன்றினை இயற்ற வேண்டும். இன்று மத்ரஸாக்கள் ஆரம்பிக்கப்பட்டு பின்பு அவை பள்ளிவாசல்களாக மாறி உள்ளன. முஸ்லிம்கள் நாம் சன நெருக்கடி மிக்க சந்தியில் பல பள்ளிவாசல்களை நிறுவிக்கொள்கிறோம்.
அப்பள்ளிவாசல்களின் அதான்கள் ஏனைய சமூகத்தினருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றன.
நாம் முஸ்லிம் அல்லாத ஒரு நாட்டில் வாழ்கிறோம் என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும். சிங்கப்பூரில் பள்ளிவாசல்கள் எவ்வாறு எந்த இடத்தில் அமைய வேண்டுமென்பது சட்டமாக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசலுக்கு ஒதுக்கப்படும் காணியின் அளவு, வாகனத்
தரிப்பிடத்துக்கான காணியின் அளவு என்பனவற்றை சட்டமே தீர்மானிக்கிறது. இலங்கையிலும் இவ்வாறான ஒரு சட்டம் இயற்றிக் கொள்ளப்பட வேண்டும்.
கிராமங்களின் மத்தியில் பன்சலைகள் அமைந்துள்ளன. பன்சலைக்கு அருகில் பள்ளிவாசல் நிர்மாணிக்கப்படும் போது பள்ளிவாசலைச்சுற்றி முஸ்லிம்கள் குடியேறுகிறார்கள். பன்சலையில் இருக்கும் தேரர்களுக்கு சிங்களவர்களின் வீடுகளிலிருந்தே உணவு வழங்கப்படுகிறது.
பன்சலைக்கருகில் பள்ளிவாசல்கள் அமைவதால் பௌத்த தேரர்கள் தமது உணவுக்குகூட பாதிப்புகள் ஏற்படும் எனக் கருதுகிறார்கள். யார் எமக்கு உணவு வழங்குவது என்று சிந்திக்கிறார்கள்.